சென்னை, ஜூன் 29- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் கடந்த 5 மாதங்களில் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் அமைச்சர்
தா. மோ.அன்பரசன் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் நேற்று (28.6.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ். எஸ்.பாலாஜி (திருப்போரூர்) பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாமல்லபுரம் பகுதியில் கடல் அரிப்பு உள்ள பகுதிகளில் தடுப்புச்சுவர், தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். எனது தொகுதியில் குப்பைகள் பல இடங்களில் தேங்கியிருக்கிறது. குப்பைகளை வீணாக வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக வருகிறது. இதில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது?. உள்ளூர்வாசிகளுக்கு வேலை கிடைக்கும் வகையில் தனி சட்டம் கொண்டுவர வேண்டும்.
உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில், எவ்வுளவு பேருக்கு வேலை கிடைத்தது என்பதை அறிய விரும்புகிறேன்.
-இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.அன்பரசன் பதில் அளித்து கூறியதாவது:-
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 5,068 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கடந்த 5 மாதங்களில் 1,277 நிறுவனங்கள் ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு செய்து, உற்பத்தியை தொடங்கியுள்ளது. சுமார் 46 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
– இவ்வாறு அவர் கூறினார்.