இது துரோணாச்சாரியார்களின் காலம் இல்லை… ஏகலைவன்கள் காலம்
படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து
திருவாரூர்,ஆக.25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.8.2023) இந்தி யாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டதாவது,
திருக்குவளையில் உதித்த சூரியன்
‘வாழ்விலோர் பொன்னாள்’ என்று சொல் கின்ற வகையில், இந்த நாள் சிறப்பாக அமைந்திருக்கிறது.
அதைவிடச் சிறப்பு என்னவென்றால்? இந்த இடம்! இந்த ஊர்! இந்த திருக்குவளை மண்ணில் உதித்த ஒரு சூரியன், தமிழ்நாடு முழுமைக்கும் ஒளி வீசியது. ஏன், இந்தியாவோட தலைநகர் வரை அதனுடைய வெளிச்சம் பரவியது. அந்த சூரியனுடைய பேர்தான், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட பெருமைக் குரிய நம் தமிழினத் தலைவர் கலைஞர் படித்த தொடக்கப் பள்ளியில் இப்படி ஒரு சிறப்பான திட்டத்தை விரிவாக்கம் செய்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
தமிழ்நாட்டோட முதலமைச்சராக பொறுப் பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும்,
இந்த காலை உணவுத் திட்டம் எனக்கு ஒரு மன நிறைவை தருகிறது. இன்னும் சொல்லவேண்டும் என்றால், படிப்புக்காகவும், வேலைக்காகவும் பேருந்தில் செல்லும் நம்முடைய சகோதரிகள், கட்டணமில்லாமல் ‘விடியல் பயணத்தை’ மேற்கொள்ளும்போதும், உயர்கல்வி பெறும் அரசுப் பள்ளி மாணவிகள் ’புதுமைப் பெண்’ திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறும்
போதும், அவர்களை விட எனக்குதான்
அதிகமான மகிழ்ச்சி ஏற்படும். ஏனென்றால், பலருடைய மகிழ்ச்சிக்கு நான் காரணமாக இருக்கிறேன் என்ற அந்த உணர்வில் அப்படி பெருமகிழ்ச்சி உண்டாகும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
அடுத்த மாதம் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. உங்களுக்குத் தெரியும். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15. அன்றைக்கு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ தொடங்க போகிறோம். அது என்னுடைய மகிழ்ச்சியை இன்னும் அதிகமாக்க போகின்றது!
இப்படி மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகின்ற திராவிட மாடல் அரசினுடைய திட்டங்களில் முக்கிய மான ஒன்றுதான் இந்த காலை உணவுத் திட்டம்!
கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில், மதுரை ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தேன். மாணவச் செல்வங்களுக்கு காலை உணவு பரிமாறினேன். அவர்களோடு உட்கார்ந்து உணவு சாப் பிட்டேன். இப்போதும் இங்கே தொடங்கிய திருக் குவளைப் பள்ளியில், கலைஞர் படித்த பள்ளியில் தொடங்கியபோது, அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டு தான் வந்திருக்கிறேன். காலை உணவை நான் முடித்து விட்டேன். மேடையில் இருப்பவர்கள் எல்லாம் இன்னும் சாப்பிடவில்லை. ஏனென்றால், மாணவர்களிடம் மட்டும் இருந்து நான் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கட்டுப்பாடாக இருக்கும் என்பதற்காகதான் அந்த அடிப்படையில் நடத்தினோம். வேறொன்றும் இல்லை. உங்களை பட்டினி போடவேண்டும் என்று இல்லை. அந்த ஆசை எனக்கு இல்லை. இங்கு இல்லை, முடிந்தவுடன் வெளியிலே சென்று சாப்பிடுவார்கள்.
மதுரையில் நான் தொடங்கினேன். அன்றைய நாளிலிருந்து, 1 இலட்சத்து 14 ஆயிரம் பிள்ளைகளுக்கு காலை உணவு தரப்பட்டது. அதை மேலும் விரிவுபடுத்தும் நம் எண்ணம் தான் இன்றைக்கு செயல்வடிவமாகி, 17 இலட்சம் பிள்ளைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்று மணிமேகலை காப்பியம் சொன்னபடி, உயிர் கொடுக்குற அரசாக, நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. எங்கள் தாத்தா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தந்தை முத்துவேலர் வாழ்ந்த இந்த திருக்குவளையில், தந்தையாகவும், தாயாகவும் இருந்த கலைஞர் பிறந்த இந்த திருக்குவளை மண்ணில் அவருடைய மகன் கருணாநிதி ஸ்டாலின் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பது என்பது, அதன் மூலமாக, நான் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மட்டுமல்ல; கலைஞரின் மகனாகவும் பெருமைப்படு கிறேன். இதைவிட எனக்கு வேறென்ன பெருமை வேண்டும்?
கலைஞர் படித்த பள்ளி
பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கிய தலைவர் கலைஞர் படித்த பள்ளி இது. அவர் படிக்கின்றபோது, ஒரு அரசியல் கட்சித் தலைவர் ஆவார் என்றோ, முதலமைச்சர் ஆவார் என்றோ நிச்சயமாக நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், அவருக்குள் இருந்த தமிழ்ப் பற்றும் – எழுத்துத் திறனும் – சிந்தனை ஆற்றலும், பள்ளியில் படிக்கின்றபோதே, அவரை மெல்ல மெல்ல தலைவராக ஆக்கியது.
அந்த பெருமை என்பது இந்த திருக்குவளை பள்ளிக்கும் – திருவாரூர் பள்ளிக்கும்தான் உண்டு. “உருக்குலையா மங்கையவள் ஒளிமுகத்தை முத்தமிட கருக்கலிலே கண்விழிக்கும் திருக்குவளை” என்று உவமைக் கவிஞர் சுரதா அவர்களால் போற்றப்பட்ட இந்த அழகிய திருக்குவளை கிராமத்தில் முத்துவேல ருக்கும்-அஞ்சுகம் அம்மாவுக்கும், அருந்தவப் புதல்வ ராக பிறந்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
‘என்னை என் தாயும் தந்தையும் படி படி என்று சொன்னாலும் நான் படித்தது ஈரோட்டுப் பள்ளியும், காஞ்சி கல்லூரியும்தான்’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்.
திருக்குவளையில் தொடக்கப் பள்ளி, அப்போது 5-ஆம் வகுப்பு வரை மட்டும் இருந்ததினால், மேல் படிப்புக்கு தலைவர் கலைஞர் அவர்கள் திருவாரூருக்கு சென்றார். அங்கே சென்று பள்ளியில் சேருவதற்கு என்னென்ன போராட்டம் நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். நெஞ்சுக்கு நீதியில் அவரே தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். பல நிகழ்ச்சிகளில் அதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். போராடி, வாதாடி அதற்குப் பிறகு திருவாரூரில் 6-ஆம் வகுப்பு சேருகிறார். திருவாரூரில் அவரை அள்ளி அணைத்து, அவருக்கு அரசியல் ஆர்வத்தை ஊட்டி, அவருடைய உள்ளத்தில் இருந்த கனலைத் தூண்டி விட்டது.
விளையும் பயிரை முளையிலேயே தெரியும்
சிறுவர் சீர்திருத்த சங்கம் தொடங்கினார். தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் அமைத்தார். ஆதிக்க இந்திக்கு எதிராக கொடி பிடித்து போராட்டம் நடத்தினார். ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.
இப்படி, ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்று சொல்வதற்கு ஏற்றது போல, பிற்காலத்தில் கலை ஞர் என்ன ஆவார் என்பதை உணர்த்தின இடம்தான் திருக்குவளை பள்ளியும் – திருவாரூர் பள்ளியும்!
ஒரு சின்ன கிராமத்தில், சாதாரண குடும்பத்தில், சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த காலத்தில் பிறந்து, இதே பள்ளியில் ஆரம்பப் பாடம் கற்று, திருவாரூரில் வளர்ந்து, தன்னோட விடாமுயற்சியால், அயராத உழைப்பால், சளைக்காத போராட்டக் குணத்தால் வெற்றிச் சிகரங் களை தொட்டவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அவர் சொன்னது, ‘வரலாற்றில் நமக்கான இடம், சலுகையால் கிடைக்கக் கூடியதாக அல்லாமல், போராடிப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும் என்று சொல்வார். ஏன், கடற்கரையில், தான் ஓய்வு கொண்டிருக்குற இடத்தையும் போராடிப் பெற்றவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
வகுப்புவாரி உரிமை – இடஒதுக்கீடு
இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் படமாக அல்ல, பாடமாக – நம்பிக்கை மிகுந்த வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் தமிழ்நாட்டு மாணவர் சமுதாயத்தினுடைய பசிப்பிணி போக்கும் திட்டத்தை அவர் படித்த இந்த பள்ளியிலிருந்து தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிக்கும் விரிவாக்கம் செய்ய நான் வந்திருக்கிறேன்.
ஏழை, எளியோர் வீட்டுப்பிள்ளைகள் – ஒடுக்கப்பட்ட குடும்பத்தின் பிள்ளைகள் – பள்ளிக்குப் போவது எந்த காரணத்தாலேயும் தடைப்படக் கூடாது என்றுதான் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங் கினார். அதற்காகத்தான் சமூகநீதிக் கோட்பாடு உருவாக் கப்பட்டது. வகுப்புவாரி உரிமை என்று, இடஒதுக்கீடு தரப்பட்டது. கல்வி பெற வறுமை – ஜாதி என்று எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்று தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் நினைத்தார்கள்.
அவர்களுடைய வழித்தடத்தில்நடக்கின்ற நான், அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றுகின்ற இடத் திற்கு வந்து அதையெல்லாம் இப்போது செயல்படுத்து கிறேன். தொடர்ந்து செயல்படுத்துவேன். இதற்கான தொடக்கம், திராவிட இயக்கத்தோட தாய் அமைப்பான நீதிக்கட்சியினுடைய தலைவராக இருந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அவர்கள் தான்.
1922இல் மதிய உணவு
சென்னை மாநகராட்சியினுடைய தலைவராக இருந்தபோது ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு 1922-ஆம் ஆண்டு மதிய உணவை வழங்கினார். அந்த ஆயிரம் விளக்குதான் முதன்முதலாக நான் நின்று வென்ற தொகுதி!
திருக்குவளை சூரியன் ஒளியில்தான் அந்த ஆயிரம் விளக்கு ஒளி வீசியது. இந்தியா விடுதலை அடைகின்ற சில மாதங்களுக்கு முன்னால், நிதி நெருக்கடியை காரணம் காட்டி மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது.
1955-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் அவர்கள் முதலமைச்சராக இருந்தப்போது மதிய உணவுத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது பொதுக்கல்வி இயக்குநராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள். அவர்தான் இதற்கான முழு முயற்சியையும் எடுத்தவர். சில அதிகாரிகளுடைய கடுமையான எதிர்ப் பையும் மீறி அதை செயல்படுத்திக் காட்டியவர். யார் என்று கேட்டீர்கள் என்றால், பெரியாரின் பெருந் தொண்டராக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள்.
கூடுதலாக ஊட்டச்சத்து
இப்படிப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை தி.மு.க. அரசு தொடர்ந்து நடத்தியது. இதை செழுமைப்படுத்து கின்ற வகையில் கூடுதலாக ஊட்டச்சத்து திட்டத்தை 1971-ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கையில் எடுத்தார்.
குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து வழங்குகின்ற மாபெரும் இயக்கமாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதை செயல்படுத் தினார். அந்தக் காலத்தில் ‘பேபி ரொட்டி’ என்ற ஒன்று உண்டு. அந்த பேபி ரொட்டியை எல்லா குழந்தை களுக்கும் வழங்கியது கலைஞர் தலைமையில் இருந்த அரசு.
1975-ஆம் ஆண்டு முழுமையாக மாநில அரசினு டைய நிதியில் ’ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை’ முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மாநிலம் முழுவதும் நடத்திக் காட்டினார். இதை மேலும் விரிவுபடுத்தினார், யார்? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள். அதிகப்படியான மையங்களை உருவாக்கி, சத்துணவுத் திட்டத்திற்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்தவர், யார் என்று கேட்டால், முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். எம்.ஜி.ஆருக்கு பிறகு மீண்டும் 1989-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் கலைஞர் சத்தான முட்டையை வழங்கினார்.
அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, வாரம் அய்ந்து நாட்களும் முட்டை வழங்கினார் முதலமைச்சர் கலை ஞர். முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழமும் கொடுத்தார். பின்பு கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு, வேகவைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றையும் வழங்கினார். முக்கியமான தலைவர்களுடைய பிறந்தநாளன்று, அப்போது இனிப்பு பொங்கல் வழங்கவும் உத்தரவிட்டவர்தான் கலைஞர் அவர்கள்.
அதற்கு பின்பு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள், தன்னோட ஆட்சிக்காலத்தில் கலவை சாதம் வழங்க உத்தரவிட்டார்கள்.
நீதிக்கட்சியில் தொடங்கி…
1921-ல் நீதிக்கட்சி ஆட்சித் தொடங்கி, 2021 வரைக்கும் இருந்ததெல்லாம் மதிய உணவுத் திட்டங்கள்தான்.
இந்த நிலையில்தான், சென்னை அசோக் நகரில் இருக்கக்கூடிய பெண்கள் மேனிலைப் பள்ளிக்கு ஒரு விழாவிற்காக நான் சென்றேன். அங்கு படிக்கின்ற மாணவியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். பேசிக் கொண்டு இருக்கும்போது “காலையில் என்ன சாப் பிட்டீங்க?” என்று கேட்டேன். பெரும்பாலானவர்கள் என்ன சொன்னார்கள் என்றால் நாங்கள், “சாப்பிட வில்லை” என்று சொன்னார்கள். “எங்கள் வீட்டில் சமையல் செய்யவில்லை” என்று ஒரு மாணவி சொன்னார்.
“மதியானம் ஸ்கூலில் சென்று சாப்பிடு என்று அம்மா சொல்லிட்டாங்க” என்று இன்னொரு மாணவி சொன் னார். “காலையில் டீ மட்டும் குடித்துவிட்டு வந்திருக் கிறேன்” என்று இன்னொரு மாணவி சொன்னார். இதையெல்லாம் மனதில் வைத்துதான் இந்த காலை உணவுத் திட்டம் உருவாக்கவேண்டும் என்று நான் அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன்.
அதிகாரிகள் சொன்னார்கள், நிதிச்சுமை போன்ற காரணங்களை எல்லாம் சொன்னார்கள். இதைவிட வேறு எதும் முக்கியமாக இருக்க முடியாது என்று கட்டாயப்படுத்தி நான்தான் இந்த திட்டத்தை விரைவாக நடத்தவேண்டும் என்று சொன்னேன். பொதுவாகவே, மனிதர்களுக்கு மூளை ஒழுங்காக முறையாக வேலை செய்யவேண்டும் என்றால், வயிறு நிறைந்திருக்க வேண்டும்.
காலை உணவு மிகவும் முக்கியம்
மூன்று வேளை உணவு தேவை. அதிலேயும் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அப்போதுதான் அதிகமாக பணியாற்ற முடியும். காலை உணவு, மிக மிக முக்கியம். ஆனால், காலை உணவே சாப்பிடாத பிள்ளைகளால் எப்படி கல்வியில் கவனம் செலுத்த முடியும்? இது ஒருபுறம்.
மற்றொருபுறம், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் ஒரு களஆய்வு நடத்தினோம். அதில், ரத்தசோகை அதிகமாக நிறைய மாணவர்கள்கிட்ட இருந்தது. ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு காலை உணவு வழங்கினால் அவர்களுக்கு கூடுதலாக சத்துகள் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதனால்தான், காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஆர்வத்தோடும், அக்கறையோடும் நாங்கள் இந்தப் பணியில் இறங்கினோம்.
பசியுடன் பள்ளிக்கு வருகின்றவர்களை பட்டினியாக வைத்து, பாடம் சொல்லித் தரக் கூடாது என்று நினைத்தேன். அதனுடைய விளைவுதான், இன்றைக்கு, 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற, 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அதற்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நம்முடைய எதிர்கால நம்பிக்கைகளான பள்ளிக் குழந்தைகளுக்கான திட்டத்திற்குரிய தொகையை, நிதி ஒதுக்கீடு என்று சொல்வதைவிட, நிதி முதலீடு என்றே நான் சொல்ல விரும்புகிறேன்.
அரசின் முதலீடு திறமையாக வெளிப்படும்
ஏனென்றால், மாணவர்களின் அறிவை மேம்படுத்த – உள்ளத்தை மேம்படுத்த அரசு நிதி முதலீடு செய்திருக்கிறது. அந்த முதலீடு நிச்சயமாக நாட்டுக்கு லாபம் தரும் வகையிலான ஆற்றலாக, திறமையாக வெளிப்படும். அதுதான் உண்மை!
இந்தியாவிலேயே புதுப்புது திட்டங்களைக் கொண்டு வந்து, முன்னோடி மாநிலமாக இருப்பதில் நம்பர் ஒன் மாநிலம்- நம்முடைய தமிழ்நாடு தான். அதில் மிகமிக முக்கியமான இந்த ‘காலை உணவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
ஒன்று, மாணவர்கள் பசியில்லாமல் பள்ளிக் கூடத்திற்கு வரவேண்டும்.
இரண்டு, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப் படாமல் அந்தக் குழந்தைகள் இருக்க வேண்டும்.
மூன்று, இரத்த சோகை என்ற குறைபாட்டை நீக்கவேண்டும்.
நான்கு, மாணவர்களுடைய வருகை பதிவை அதிகரிக்க வேண்டும்.
அய்ந்து, வேலைக்குப் செல்கின்ற தாய்மார்களோட பணிச்சுமைய குறைக்க வேண்டும்.
இந்த அய்ந்து நோக்கங்களை படிப்படியாக நிறைவேற்றவேண்டும் என்பதுதான் நம்முடைய இலட்சியம். முழுமையாக அடைந்தே தீருவோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
பசிப் பிணி நீங்கி விட்டால்….
பசிப்பிணி நீங்கிட்டால், மனநிறைவோடு பிள்ளைகள் படிப்பார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதியும். பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவார்கள். சீரான வருகைப் பதிவும் இருக்கும். தமிழ்நாட்டின் கல்வி விகிதமும் அதிகம் ஆகும். தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் அறிவாற்றல் பொருந்தியவர்களாக உயர்வார்கள். படிப்புடன் விளையாட்டு, கலைத்திறன் ஆகியவற்றிலும் சாதனை படைக்கக் கூடியவர்களாக நிச்சயம் திகழ் வார்கள். இப்படி எத்தனையோ நன்மைகளை நம்மு டைய மாநிலம் இந்தத் திட்டத்தால் அடையப் போகின் றது. எதிர்கால தமிழ்ச் சமூகம் பயனடையப் போகிறது. இந்த மாதம் ஒரு செய்தியை பார்த்திருப்பீர்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லி, கடந்த ஓராண்டு காலத்தில் சுமார் 10 இலட்சம் குழந் தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருக் கிறது. அதில், சுமார் 92 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாடுடன் இருப்பதாக கண்டறியப்பட்டு, அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த சிறப்பு உணவுப்பொருட்கள் கொடுத்ததால், சுமார் 62 ஆயிரம் குழந்தைகள் தங்களது ஊட்டச்சத்து நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள்.
எல்லோருக்குமான அரசு
அதில் சில குழந்தைங்கள் என்னைப் பார்ப்பதற்காக கோட்டைக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள். நேரில் பார்த்தேன். அந்தக் குழந்தைகளுடைய வளர்ச்சியில்தான் நம்முடைய அரசாங்கத்தின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. இந்த அரசு யாருக்கான அரசு என்று கேட்கிறவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், “எங்களுக்கு யாருமில்லை” என்று யார் நினைக் கிறார்களோ, “எங்களை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?” என்று யார் கேட்கிறார்களோ அவர்கள் எல்லோருக் குமான அரசுதான் இந்த அரசு என்று சொல்வேன்.
அந்த காலத்தில அரசர் குலத்தவர் மட்டுமே கற்றுக் கொள்ளலாம் என்று இருந்த, வில் வித்தையை வேடர் குலத்தைச் சேர்ந்த ஏகலைவன் கற்றுக்கொண்டதை பார்த்து கட்டைவிரலை காணிக்கையாக கேட்கின்ற துரோணாச்சாரியார் போன்ற ஆசிரியர்கள்தான் இருந் தார்கள். சமூகநீதி நிலைநாட்டப்படுகின்ற இந்தக் காலத்தில் யாராவது கட்டை விரலை காணிக்கையாக கேட்டால், அவர்களுடைய, பட்டை உரியும் என்று எச்சரித்தவர் இந்த மண்ணின் மைந்தர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
சமூகநீதிப் பாதை
பெரியார்-அண்ணா-கலைஞர் வகுத்த சமூக நீதிப் பாதையில் அனைத்து அறிவையும் அனைத்து சமூகத்தவருக்கும் தருகின்ற ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலிலும் தேசியக் கல்விக் கொள்கை என்கின்ற பெயரில், நீட்-என்ற பெயரில் தடுப்புச் சுவர் போடுகின்ற `துரோக ஆச்சாரியார்களும்’ இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏகலைவன் தன்னுடைய கட்டை விரலை காணிக்கை கொடுத்ததெல்லாம் அந்தக் காலம். அந்தக் காலம் மலை ஏறிவிட்டது. இது கலைஞர் உருவாக்கித் தந்திருக்கக்கூடிய காலம். இது துரோணாச்சாரியார்களின் காலம் கிடையாது. ஏகலைவன்களின் காலம்!
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும். ’எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்’ என்ற திராவிடவியல் கோட்பாடு கோலோச்சும் காலம்!
இந்த நேரத்தில், அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர் களுக்கும், சமையல் செய்யக்கூடிய நம்முடைய சகோதர-சகோதரிகளுக்கும் உங்கள் முதலமைச்சர் ஒரு அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.
அரசானது தாயுள்ளத்தோடு இந்தத் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. நீங்களும் தாயுள்ளத்துடன் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடத்தவேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எப்படி கவனத்தோடும், கனிவோடும் உணவு வழங்குவீர்களோ, அதைவிடக் கூடுதல் கவனத்தோடு, கனிவோடு அனைத்துக் குழந்தைகளுக்கும் உணவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதை நிச்சயம் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அன்புள்ள மாணவச் செல்வங்களே! உங்கள் குடும் பத்தில் ஒருவனாக நான் வைக்கின்ற வேண்டுகோள் இது.
கவலைப்படாமல் படிங்க, படிங்க, படிங்க!!
உங்களுக்கு காலையும், மதியமும் உணவு வழங்குகிறோம். எனவே, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிங்க, படிங்க! படிங்க! இது ஒன்றுதான் என்னுடைய வேண்டுகோள். படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து. அத்தகைய சொத்தை உங்களுக்கு நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களது மற்ற கவலைகள், மற்ற தேவைகளை நிறைவு செய்ய நமது அரசு இருக்கிறது.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான் இருக்கிறேன்! நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்! படிப்பு உங்களை உயர்த்தும்!
நிலாவுக்கு சென்று ஆய்வு செய்கின்ற விண்கலம் அனுப்பி சாதனை படைதிருக்கின்ற தமிழ்நாட்டு அறிவியலாளர்கள் போல, இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், உலகம் அண்ணாந்து பார்க்கின்ற வகையிலான சாதனையாளராக நீங்கள் மாறவேண்டும், உயரவேண்டும். அதனை உங்கள் பெற்றோரோடு சேர்ந்து நானும் காண வேண்டும்! பெருமைப்பட வேண்டும்! என்று கேட்டு, அதை நீங்கள் நிச்சயம் நிறைவேற்றுவீர்கள், நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
நன்றி! வணக்கம்!
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டார்.