தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், முத்தமிழறிஞர் கலைஞர் கலந்துகொண்டு எங்கள் குடும்பத்தில் நடைபெற்ற 33 திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்று இருக்கின்றன!
கடலூர், ஜூன் 29 தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் என்று இப்படி எல்லோரும் கலந்துகொண்டு இந்தக் குடும்பத்தில் நடைபெற்ற 33 திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்று இருக்கின்றன; உங்களைப் போன்றவர்களையெல்லாம் பார்க்கும்பொழுது, எனக்கு வயது குறைந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற மணவிழா நிகழ்வுகளில் உங்களையெல்லாம் பார்க்கும்பொழுதுதான், வயது குறையும் – மருந்தினால் அல்ல என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்: தே.தமிழரசன் – கு.பிரியதர்ஷினி
கடந்த 9.6.2024 அன்று காலை கடலூர், பாரதி சாலையில் உள்ள திவான்பகதூர் சுப்பராயலு (ரெட்டியார்) திருமண மண்டபத்தில் த.தேசிங்ராஜன் – அருள்மொழி ஆகியோரது மகன் தே.தமிழரசன் அவர்களுக்கும், தி.குணசேகரன் – அனிதா ஆகியோரின் மூத்த மகள் கு.பிரியதர்ஷினி அவர்களுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நடத்தி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
மிகச் சிறப்போடும், சீரோடும் நடைபெறக்கூடிய என்னுடைய மூத்த சகோதரர் அண்ணார் கே.தண்டபாணி அவர்களுடைய மூத்த செல்வர், நம்முடைய டி.எஸ்.டி. பேருந்து உரிமையாளர் திரு.தேசிங்ராஜன் – அவருடைய வாழ்விணையர் அருள்மொழி ஆகியோருடைய இளைய மகன் தமிழரசன் பி.இ, எம்.பி.ஏ, அவர்களுக்கும், திருவாளர்கள் தொழிலதிபர் குணசேகர் – அனிதா ஆகியோருடைய மூத்த மகள் செல்வி பிரியதர்ஷினி பி.எஸ்சி., எம்.பி.ஏ., அவர்களுக்கும் நடைபெறக்கூடிய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வரவேற்பு ரையாற்றிய இந்தக் குடும்பத்தினுடைய மூத்த உறுப்பி னர்களில் முக்கியமானவரான திரு.செல்வமணி அவர்களே,
நம்முடைய குடும்பத்து சகோதரர்களில் ஒருவராக இருக்கக்கூடிய பெருமைமிகு இந்த மாவட்டத்தினுடைய அமைச்சர்!
‘‘இன்றைக்குப் பல மணவிழாக்களை நான் நடத்தி வைப்பதினால், எல்லா மணவிழாக்களுக்கும் சென்று, மணமக்களை வாழ்த்திவிட்டு நான் மீண்டும் வருகிறேன். ஆசிரியர் அவர்களே நீங்கள் தலைமை தாங்கி நடத்துங்கள்” என்று கூறினார் மாண்புமிகு அமைச்சர் நம்முடைய குடும்பத்து சகோதரர்களில் ஒருவராக இருக்கக்கூடிய பெருமைமிகு இந்த மாவட்டத்தினுடைய அமைச்சர்.
பல முக்கியஸ்தர்கள் இங்கே இருக்கின்ற நேரத்தில், இம்மணவிழாவினை நடத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், முன்னிலை ஏற்று, பிறகு வரவிருக்கக்கூடிய தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் – உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களே.
இந்நிகழ்வில் சிறப்பாக உரையாற்றி அமர்ந்துள்ள மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தி.மு.க. தேர்தல் பணிக் குழு செயலாளரும், சீரிய பகுத்தறிவாளருமான அருமைச் சகோதரர் மானமிகு இள.புகழேந்தி அவர்களே,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை விளக்க அணி செயலாளர் தோழர் வந்தி யத்தேவன் அவர்களே, கடலூர் மாநகரத்தின் பெருமைமிகு துணை மேயர் மாண்புமிகு தாமரைச் செல்வன் அவர்களே,
தொண்டறம், பொதுநலம் என்றால், அதற்கு எடுத்துக்காட்டாக, இந்த நகரத்தில், கட்சி வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்து, அனைவருக்கும் பொதுவானவராக, பொது மனிதராக இருக்கக்கூடிய நம்முடைய பாரம்பரிய சுயமரியாதைக் குடும்பத்திலிருந்து வந்திருக்கக் கூடிய வர்த்தகச் சங்கத் தலைவர் பெருமைமிகு அய்யா துரைராஜ் அவர்களே,
மாவட்டக் காப்பாளர் ஆர்.பி.எஸ்.பன்னீர்செல்வம் அவர்களே, மாவட்டத் தலைவர் தண்டபாணி அவர்களே, மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் அருணாசலம் அவர்களே, வடலூர் நகரத் தலைவர் புலவர் இராவணன் அவர்களே, பதுச்சேரி மாவட்டத் தலைவர் அன்பரசன் அவர்களே, புதுவை பாகூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களே,
இம்மணவிழாவிற்கு வந்து வாழ்த்திச் சென்ற அருமைச் சகோதரர் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அய்யப்பன் அவர்களே,
நம்முடைய குடும்பத்தைச் சார்ந்தவரும், நீண்ட காலமாக இந்த இயக்கத்தில் கடலூரில் முன்னோடியாக இருந்து செல்லப்பிள்ளையாக என்றைக்கும் திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய, சீரிய பகுத்தறிவாளராக, எங்கள் கொள்கைக் குடும்பத்தின் முன்னோடியாக இருக்கக்கூடிய அன்பிற்குரிய சகோதரர் பாவலர் அறிவுமதி அவர்களே,
நிகழ்விற்கு வந்திருக்கக்கூடிய உங்கள் அனைவரையும் வணக்கம் கூறி, வருக, வருக என நான் வரவேற்கிறேன்.
மீண்டும் ஒருமுறை உங்களையெல்லாம் வரவேற்பது எங்களுடைய உரிமை, கடமை!
முதலில், செல்வமணி அவர்கள் உங்களையெல்லாம் வரவேற்றாலும்கூட, இங்கே நான் மீண்டும் ஒருமுறை வரவேற்பது எங்களுடைய உரிமையும், கடமையுமாகும்.
ஏனென்றால், இந்தக் குடும்பத்திற்குரிய பொறுப்பா ளன் என்ற முறையில், நான் வாயிலிலேயே நின்று எல்லோரையும் வரவேற்றேன். அதோடு நான் வரவேற்புரை சொல்வதுதான் மிகுந்த மகிழ்ச்சி. என்னுடைய பேரப் பிள்ளைகள் இவ்வளவு சிறப்பாக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்.
எனக்குப் பல பேரப் பிள்ளைகளை அடையாளமே தெரி யாது. பொதுவாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு சங்கடம் இதுதான்.
‘‘உங்களையெல்லாம் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்றேன்!
ஏனென்றால், எப்பொழுதாவதுதான் இங்கே வருகி றோம். நானே அவர்களிடம் சொல்வேன், ‘‘உங்களை யெல்லாம் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று.
அதேபோன்று, தமிழரசனும் தனியே வந்திருந்தால் என்னால் கண்டுபிடித்திருக்க முடியாது. ஏனென்றால், நீண்ட நாள்கள் ஆயிற்று தமிழரசனைப் பார்த்து.
தமிழரசன் துடிப்பாக, சின்ன பையனாக இருக்கின்றபொழுதே அருமையாகப் படிப்பார். தமிழரசன்மீது எனக்கு ஒரு பிரியம் என்னவென்றால், மணமகளுக்குச் சொல்கிறேன்; இப்பொழுது மட்டும் அவர் கெட்டிக்காரர் அல்ல; சிறிய பிள்ளையாக இருக்கும்பொழுதே, மதிப்பெண்கள் நிறைய வாங்குவார். ஆனால், உடலைக் கட்டுப்படுத்துவது இல்லை அன்றைக்குங்கூட.
இந்தக் குடும்பத்தின் சார்பாக அமைச்சர் அவர்களுக்குச் சிறப்பு செய்கிறோம்.
33 திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்று இருக்கின்றன!
தோழர்களே, இந்தத் திருமணம் சுயமரியாதைத் திருமணம். செல்வமணி அவர்கள் சொன்னதுபோன்று, இந்தக் குடும்பத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்கள் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் என்று இப்படி எல்லோரும் கலந்துகொண்ட இந்தக் குடும்பத்தில் நடைபெற்ற 33 திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற்று இருக்கின்றன.
இயக்கக் கொள்கையை வழக்கமாக
ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய குடும்பம்!
இதில் ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், இம்மணவிழாவை சுயமரியாதை மணமுறையில் நடைபெறுவதற்குக் காரணமாக இருப்பதற்காக பாராட்ட வேண்டியது தேசிங்ராஜனையோ, அருள்மொழி யையோ அல்ல. ஏனென்றால், இது எங்கள் குடும்பம். இந்தக் கொள்கையை வழக்கமாக ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய குடும்பம்.
இந்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்திற்கு நூற்றாண்டாகும். நூறாண்டு கண்ட ஓர் இயக்கம் – தலைவர் தந்தை பெரியார், அறிவாசான் அவர்கள் உருவாக்கிய சுயமரியாதைத் திருமணம், பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பூர்வமானதாக்கப்பட்டு, இன்றைக்கு சட்டப்பூர்வமாக அத்திருமணம் செல்லும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு திருமணத்தில், இதுவரையில் வந்த சம்பந்திகளைப் பார்த்தீர்களேயானால், ஒன்றிரண்டைத் தவிர, மீதமுள்ளவர்கள் எல்லாம் புதிதாக அறிமுகமானவர்கள்தான் – கொள்கையிலும்.
மணமகளின் தாய், தந்தையைப் பாராட்டுகிறேன்!
எனவே, முதலில் பாராட்டப்பட வேண்டியவர்கள் யார் என்றால், மணமகளின் தாய், தந்தையைப் பாராட்டி, நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
காரணம் என்னவென்று கேட்டால், இதுபோன்ற ஒரு திருமண முறைக்கு ஒப்புக்கொண்டார்களே, அது பாராட்டப்பட வேண்டியதாகும்.
நேரிடையாக என்னிடம் சொல்வதற்குக் கொஞ்சம் தயங்கினார்கள். பத்தே முக்கால் மணிக்குள் திருமணத்தை நீங்கள் நடத்தி வைத்துவிட்டு, பிறகு உரையாற்றினால் நன்றாக இருக்கும் என்றனர்.
மணமகள் வீட்டாரின் விருப்பப்படியே…
உடனே நான் புரிந்துகொண்டேன். எதற்காக அப்படி அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அதுதான் ‘‘நல்ல நேரம், முகூர்த்த நேரம்” அந்த நேரம் போய்விடக் கூடாது என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்.
இதை வெளிப்படையாக நான் சொல்கிறேன். எதையும் நாங்கள் மறைப்பதில்லை. அவர்களின் விருப்பப்படியே மணமக்களுக்கு உறுதிமொழி கூறி இம்மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.
இதில் ஒரு செய்தி என்னவென்றால், எங்களுடைய திருமண முறைக்கு – புரோகிதர் இல்லாத திருமண முறைக்கு – சடங்கு, சம்பிரதாயம் இன்றி நடைபெறும் இம்மணமுறைக்கு – நம்முடைய தாய்மொழியில் பேசு கின்றோம் – சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லியிருந்தால், யாருக்கும், எதுவும் புரியாது. ஆனால், சுயமரியாதை மணமுறைக்கு, மணமகளுடைய பெற்றோர் ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்.
புதிதாக இரண்டு குடும்பங்கள் இணைகின்ற நிலையில், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.
அவர்களுடைய உணர்வுகளை கொஞ்சம் மதிப்பதினால், எங்களுடைய கொள்கை ஒன்றும் கெட்டுப் போய்விடாது!
ஆகவே, நம்முடைய கொள்கையை மதித்துத்தான், இம்மணமுறைக்கு அவர்கள் ஒப்புக்கொண்டி ருக்கின்றார்கள். எனவே, அவர்களுடைய உணர்வுகளை கொஞ்சம் மதிப்பதினால், எங்களுடைய கொள்கை ஒன்றும் கெட்டுப் போய்விடாது.
என்னுடைய மணவிழா ராகுகாலத்தில் நடைபெற்றது. என்னுடைய வாழ்விணையரும் இங்கேதான் இருக்கிறார். 65 ஆண்டுகள் ஆகின்றன. பிள்ளைகளும் நன்றாக இருக்கிறார்கள்.
எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால், பயப்படக்கூடாது என்பதற்காகத்தான். சம்பந்தி வீட்டாருக்கும் சேர்த்தே சொல்கிறேன். இப்பொழுது எனக்கு 91 வயதாகிறது. முதலமைச்சர்கூட தேர்தலுக்குமுன் சொன்னார், ‘‘இந்த வெயிலில் ஏன் நீங்கள் பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள்; அறிக்கைகளை மட்டும் எழுதுங்கள், அது போதும்” என்றார்.
‘‘இல்லை, இல்லை. இந்தத் தேர்தல் மிகவும் முக்கிய மானதாகும். ஆகவே, பிரச்சாரத்திற்குச் செல்கிறேன்” என்றேன்.
உங்களைப் போன்றவர்களையெல்லாம் பார்க்கும்பொழுது, எனக்கு வயது குறைந்துகொண்டே இருக்கிறது!
அப்படி மக்களை சந்தித்தால், எங்களுக்கு என்ன ஒரு பெரிய லாபம் என்றால், உங்களைப் போன்ற வர்களையெல்லாம் பார்க்கும்பொழுது, எனக்கு வயது குறைந்துகொண்டே இருக்கிறது. இதுபோன்ற மண விழா நிகழ்வுகளில் உங்களையெல்லாம் பார்க்கும்பொழுதுதான், வயது குறையும் – மருந்தினால் அல்ல.
இந்த இயக்கத்தினால், பெண்கள் எல்லாம் நன்றாகப் படித்திருக்கிறார்கள். மணமக்கள் இரண்டு பேருமே எம்.பி.ஏ., படித்திருக்கிறார்கள்.
ஆகவே, அமைச்சர் அவர்கள் மலர்மாலைகளை எடுத்துக் கொடுக்க, மணமக்களை உறுதிமொழி கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைக்கிறேன்.
(மணவிழா முடிந்து, அமைச்சர் அவர்கள் உரையாற்றிய பிறகு மீண்டும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றத் தொடங்கினார்).
நண்பர்களே, இந்தக் குடும்பத்திற்கு எல்லா வகை யிலும், நம்முடைய மாவட்டத்திற்குப் பெருமைச் சேர்க்கக்கூடிய பெருமைகளில், மிக முக்கியமானது – நம்முடைய அமைச்சர் அவர்கள்.
தேர்தல் நேரத்தின்போது, அமைச்சர் அவர்களுக்குக் கடலூர் ஒரு பக்கம்; சிதம்பரம் தொகுதி இன்னொரு பக்கம். தருமபுரி மாவட்டம் முழுக்க இவருடைய பொறுப்பு. அதிலும் சவாலான விஷயங்கள் – முழுவதும் முதலமைச்சர் அவர்கள் நம்முடைய அமைச்சரை நம்பி விட்டார். அந்த நம்பிக்கையின்படியே அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்தார்.
வெற்றிக் கனியை எப்படிப் பறிப்பது என்கின்ற ரகசியம் அமைச்சருக்குத் தெரியும்!
அதைவிட இன்னொரு பெருமை என்னவென்றால், அவர் இளைஞராக இருந்து சட்டக் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில், மிக அமைதியாக இருப்பார். உரையாற்றத் தொடங்கினால், புயலாக மாறுவார்.
தேர்தல் பணி என்றால், இவரை விட்டால் வேறு ஆள் கிடையாது. வெற்றிக் கனியை எப்படிப் பறிப்பது என்கின்ற ரகசியம் இவருக்குத் தெரியும்.
அதனால்தான் கடலூர் மாநகர மேயர், கடலூர் மாநகராட்சித் தேர்தல் வெற்றி இவையெல்லாம் நமக்குப் பெருமை.
என்னதான் நமக்கு உலகப் பார்வை இருந்தாலும், உள்ளூர்ப் பாசம் என்பது மாறவே மாறாது.
தமிழ்நாட்டில் அரிசிப் பஞ்சமும் கிடையாது –
அறிவுப் பஞ்சமும் கிடையாது!
உள்ளூர்ப் பாசம் – கடலூர்க்காரன் என்றவுடன், கடலூர் அமைச்சர் எப்படி இருக்கிறார் என்று அதிக அளவு அக்கறை எடுத்துக்கொள்வோம்.
தமிழ்நாட்டில், அரிசிப் பஞ்சமும் கிடையாது – அறிவுப் பஞ்சமும் கிடையாது.
நம்முடைய தி.மு.க. ஆட்சி இருப்பதினால், இந்தியா வினுடைய ஒப்பற்ற முதலமைச்சராக, ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகராக சாதனை பல புரிந்து வருகிறார்.
பா.ஜ.க. கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் சரிவுதான்!
இன்னுங்கேட்டால், ‘‘இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டாலின் பிரதமராகிவிடுவார்’’ என்று வட மாநில மக்களிடையே பிரச்சாரம் செய்தார்கள். அப்பிரச்சாரம் எடுபடவில்லை. பா.ஜ.க. கூட்டணிக்கு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் சரிவே ஏற்பட்டது.
தமிழ்நாடு அமைச்சரவை பெருமைமிகு அமைச்சரவையாக இருக்கிறது என்றால், அதனுடைய அணிகலன்களில் ஒருவராக நம்முடைய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்
அய்யா கிருஷ்ணமூர்த்தி!
அவருடைய தந்தையார் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீவிரமான சுயமரியாதைக்காரர். எதில் சமரசம் செய்துகொண்டாலும், கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்.
கலைஞர் அவர்களிடத்தில் விவாதம் செய்யக்கூடிய அளவிற்கு, கொள்கை ரீதியாக இருக்கக்கூடியவர்.
எனவே, இந்தக் குடும்பத்திற்கு, அமைச்சருடைய தொடர்பு என்பது, அவர் அமைச்சராக இருப்பதினால்தான் என்று யாரும் நினைக்கவேண்டிய அவசியமில்லை. முழுக்க முழுக்க குடும்ப ரீதியாக ஒரு பற்று உள்ளவர்கள். அந்தப் பற்றின் காரணமாகத்தான், இன்றைக்கு இவ்வ ளவு பணிகள் இருந்தாலும், இம்மணவிழாவிற்கு வந்தி ருக்கிறார்கள். அவருக்கு நன்றி செலுத்திக் கொள்கிறோம்.
(தொடரும்)