சென்னை, தஞ்சை, திருச்சியில் ரூ.1,146 கோடியில் 6,746 நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் 110 விதியின் கீழ் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிப்பு

viduthalai
2 Min Read

சென்னை ஜூன் 29 “சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப்பகுதிகளில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பில், மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் நேற்று (28.6.2024) 110-விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கை: “மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைமக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழச் சிறந்த பல திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு நகர்ப்புற வாழ் மேம்பாட்டு வாரியப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் இதுவரை 29,439 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 1,70,462 தனி வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 172 திட்டப் பகுதிகளில் 79,094 அடுக்குமாடிக் குடியிருப்புகளும், 89,429 தனி வீடுகளுக்கான கட்டுமானப் பணிகளும் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டப் பணிகளுக்காக ரூ.6,685 கோடி செலவிடப்பட்டுள்ளது. புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் பணியில் மட்டும் கவனம் செலுத்தி, அத்துடன் நின்றுவிடாமல், இந்த அரசு பழைய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மறுசீரமைப்பிலும் கவனம் செலுத்துகிறது.

சென்னை மற்றும் இதர நகரங்களில் வாரியத்தால் பல ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சில நீண்டகாலப் பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்துள்ளன. இந்தக் குடியிருப்புகளை முறையாகக் கணக்கெடுத்து, அவற்றை மறுகட்டுமானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுகட்டுமானத்திற்குப் பின் இக்குடியிருப்புகள், புதுமையான, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் பழைய குடியிருப்புகளில் முன்னர் வாழ்ந்த குடும்பங்களுக்கும், இதே திட்டப் பகுதிகளின் அருகில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது, தமிழ்நாடு முழுவதும் 1,93,891 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றுள், 28,643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் அடுத்த 3ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும். இதன் முதற்கட்டமாக, 2024-2025ஆம் ஆண்டில் சென்னை மாநகரில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப்பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர் மற்றும் திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில் உள்ள 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானமும் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *