கேள்வி 1: கோவில்களில் எச்சில் இலைமீது உருளும் வழக்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிர்ப்பு வலுக்கிறதே?
– பா.முகிலன், சென்னை-14
பதில் 1: “வேகக் காற்றில் உயரமான கம்பங்களில் ஏறிக்கொண்ட எச்சிலைகளுக்குக் கூட, அது நிரந்தர இடமாக இருக்காது” என்பது ஒரு பழமொழி.
இறுதிச் சுற்று என்பது – இறுதிச் சிரிப்பில்தான் நியாயங்களின் வெளிச்சம் தெரியும்; விரியும்!
—
கேள்வி 2: மீண்டும் தன்னுடைய வழக்கமான பணியை (வெளிநாடு செல்வது) தொடங்கி விட்டாரே பிரதமர் மோடி?
– கு.கல்பனா, நெல்லிக்குப்பம்
பதில் 2: அது அவர் வழி! இந்தியாவை ‘விஸ்வகுரு’வாக்க வேண்டுமே!
—
கேள்வி 3: கேரளாவில் அணை கட்டப்படும் என்று அறிவித்து, ‘‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர், கேரளாவிற்குப் பாதுகாப்பு” என்று கேரள நீர்வளத் துறை அமைச்சர் சொல்லியிருக்கிறாரே?
– செ.செல்வம், செங்கல்பட்டு
பதில் 3: நம் உரிமையை, நியாய அடிப்படையை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியுமா? கேரள நீர்வளத்துறை அமைச்சர் வேறு எப்படி பேசுவார்?
—
கேள்வி 4: தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது நாட்டு நலனுக்கு நல்லதா?
– நெ.குமார், கன்னியாகுமரி
பதில் 4: அடுத்த முறை அப்பதவியும், தகுதியும் கூட அ.தி.மு.க.வுக்குக் கிடைக்காமல் செய்யவே அது வழிவகுக்கும் என்பதை தொலைநோக்கோடு அவர்களுக்கு அறிவுறுத்த அங்கும் அனுபவசாலிகள் இல்லையா? “சி.பி.அய்.யினர் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா?” என்று அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் பேரவையிலேயே கேட்டது மறந்து விட்டதா? பா.ஜ.க.வின் மாயவலைக்குள் சிக்கலாமா?
—
கேள்வி 5: மக்களவைத் தலைவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்க வழிவகை செய்யாமல் தேர்தல் நடத்தப்படுகிறதே?
– க.சரவணகுமார், கள்ளக்குறிச்சி
பதில் 5: நமது ஜனநாயகம் மீண்டும் தனது சிறகுகளை விரிக்கத் துவங்கியுள்ளது!
போகப்போக எதிர்க்கட்சியின் பங்களிப்பும், பணியும் பல பரிமாணங்களில் அதன் வீச்சைக் காட்டும் என்பதற்கான அடையாளம்!
—
கேள்வி 6: மணிப்பூரிலிருந்து பாதுகாப்புப் படையினரை வெளியேற்றச் சொல்லி மகளிர் ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியானதுதானே?
– கே.ஏழுமலை, நீலகிரி
பதில் 6: பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே அதன் முழு வலி தெரியும்! எனவே, அவர்கள் நிலைப்பாடு – கோணத்தில் நியாயம் இருக்கவே செய்யும்!
—
கேள்வி 7: கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படும்பொழுது மட்டும், அரசு துறைகள் விரைவாக செயல்படுகின்றன; வருமுன் காக்கும் திட்டம் அரசிடம் இல்லையா?
– க.இளங்கோ, வந்தவாசி
பதில் 7: இயங்கும் அரசு இயந்திரங்களின் பழுது இதுபோன்ற நேரங்களில்தான் புலப்படுகிறது; அவற்றையும் கண்காணித்து அவ்வப்போது ஆய்வுகள் இடையறாமல் செய்து வருமுன் காப்பது மிகவும் அவசரம் – அவசியம்!
—
கேள்வி 8: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறாரே, அவருக்கு உங்கள் அறிவுரை என்ன?
– மு.வெங்கட், பெங்களூரு
பதில் 8: அவரது ஆற்றல் அப்பணியைச் செய்ய அவருக்குத் துணை நிற்கும்! நாளும் அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாடு அவரிடம் தென்படுகிறதே! அதுபோதும்!
—
கேள்வி 9: சில தமிழ் நாளேடுகளில் வெளி வரும் செய்திகளில் அதிகமாக ஒற்றுப் பிழை இருக்கிறது; ஒற்றுப் பிழையோடு செய்திகள் வெளிவரலாமா?
– கி.அசோக், கோவை
பதில் 9: ஒற்றுப்பிழைகள் திருத்தப்பட வேண்டும். செய்திப் பிழையே (உண்மைக்கு மாறாக) ஏராளம் வருகின்றனவே – அவற்றை எப்படி எதிர்கொள்வது?
அதற்கு முதலில் தீர்வு காண முயல வேண்டாமா?