சோழரைக் கருவறுத்த கொலைகாரப் பார்ப்பனர்கள்!

சுந்தர சோழனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் திடுக்கிடத்தக்க நிகழ்ச்சியொன்று நடைபெற்று, அவன் மனமுடைந்து இரண் டொரு திங்கள்களில் இறக்கும்படி செய்து விட்டது.
அஃது அவனது முதல் மகனும், பெருவீரனுமாகிய ஆதித்தகரிகாலன் கி.பி.969ஆம் ஆண்டில் சோழ நாட்டில் சில வஞ்சகர்களால் கொல்லப்பட்ட மையேயாம். சிதம்பரம் தாலுகாவைச் சேர்ந்த காட்டுமன்னார் கோயிலுக் கணித்தாகவுள்ள உடையார் குடியில் காணப்படும் கல் வெட்டொன்று அவ்வரசு குமாரனைக் கொன்றவர் யார் என்பதைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது.
அக்கொடுஞ்செயலைத் துணிந்து செய்து முடித்தோர், சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதி ராஜன், பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்போர். அந்நால்வரும் உடன்பிறந்தோர் என்பது அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.

அவர்களும் இருவர், பஞ்சவன் பிரமாதிராஜன், இருமுடிச் சோழ பிரமாதி ராஜன் என்னும் உயர்ந்த பட்டங்கள் பெற்றவராக இருத்தலால் அவர்கள் அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருத்த அந்தணர் ஆவர். அவர்கள் அரசியல் அதிகாரிகளாயிருந்தும் தம் இளவரசனான ஆதித்தகரிகாலனை வஞ்சகமாகக் கொன்றமைக்குக் காரணம் புலப்படவில்லை. கண்டராதித்த சோழன் புதல்வனாகிய உத்தம சோழன் என்பவன், தான் அரச கட்டில் ஏறும் பொருட்டு ஒரு சூழ்ச்சி செய்து அவனைக் கொல்வித்திருக்கக் கூடும் என்பது சிலர் கருத்து. அதனை ஆராய்ந்து முடிவு காண்பதும் ஈண்டு இன்றியமையாததேயாம்.

உத்தமசோழனுக்கு அக்கொடுஞ் செயலில் தொடர்பு இருந்திருப்பின், ஆதித்தகரிகாலன் தம்பியும் குடிகளால் அன்பு பாராட்டிப் போற்றப் பெற்றவனும் பெரிய வீரனுமாகிய முதல் ராசாராசசோழன் அரியணையைக் கைப்பற்றித் தானே ஆட்சி புரியத் தொடங்குவானேயன்றி அதனை அவ்வுத்தமசோழன் பெற்று அரசாள உடன்பட்டுத் தான் ஒதுங்கிக் கொண்டிருக்க மாட்டான். இராசராச சோழன் தன் சிறிய தந்தையாகிய உத்தம சோழனுக்கு நாட்டை ஆட்சி புரிவதில் விருப்பமுள்ள வரையில் அதனை மனத்தால்கூட விரும்புவதில்லை என்று தன் குடிகளிடம் கூறினான் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக்கிடக்கின்றது.

உத்தம சோழன் சூழ்ச்சியானால் தன் தமையன் கொல்லப்பட்டிருந்தால் இராசராச சோழன் அவன்பால் அத்துணை அன்பும் மதிப்பும் வைத்து அவ்வாறு கூறியிருக்க மாட்டான் என்பது ஒருதலை – உத்தமசோழன் இளவரசனாயிருந்தவனைக் கொல்லும்படி செய்து தான் பட்டம் பெற முயன்றிருந்தால் அவனுக்குக் குடிகள் ஆதரவும் அரசியல் அதிகாரிகள் கூட்டுறவும் என்றும் கிடைத்திருக்க மாட்டா. அதனால், உள் நாட்டில் அமைதியின்மையும், கலகமுமே, ஏற்பட்டிருக்கும் ஆனால் சோழ இராச்சியத்தில் எப்பகுதியிலும் குழப்பம் சிறிதுமின்றி உத்தமசோழன் ஆட்சி மிக அமைதியாக நடைபெற்றது என்பது பல கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. ஆகவே, எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகளும், அவர்கள் உடன் பிறந்தார் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்பதும் இக்கொலை நிகழ்ச்சியில் உத்தம சோழனுக்குச் சிறிதும் தொடர்பில்லை என்பதும் நன்கு வெளியாதல் காண்க.

– அறிஞர் டி.வி.சதாசிவ பண்டாரத்தார்,
“பிற்காலச் சோழர் சரித்திரம்”, பகுதி 1, பக்கம் 79-80.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *