சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் இயக்கம் பார்ப்பனரல்லாத மக்களிடையே, ’இது சூத்திர, பஞ்சம மக்களை, பெண்களை படிக்கச் சொல்கிற இயக்கம்! அப்படிப் படித்தால், வேலை வாய்ப்புகளைப் பெறலாம். அப்படிப் பெற்றால் ஆடு, மாடு மேய்ப்பது உள்ளிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம். முக்கியமாக சுயமரியாதை பெறலாம்’ என்ற எண்ணத்தை விதைத்தது! அத்தோடு மட்டுமல்ல, அந்த விதையை முளைக்க வைக்க, அந்த விதையை வளர வைக்க பல்வேறு முன்னெடுப்புகளையும் செய்து கொடுத்தது. அதனால் பலரும் படிக்க முன்வந்தனர்! முன்னுக்கும் வந்தனர்!
அப்படிப் படிக்கும் உந்துதலைப் பெறுவதற்காகவே திராவிடர் கழகத்தில் சேர்ந்தவர்தான் தடம் மாறாத பெரியார் தொண்டராக இன்றைக்கும் சென்னை ஓட்டேரியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் கி. சிட்டிபாபு! அவருக்கு இப்போது வயது 80. அவர் இன்னமும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார்.
மூப்பின் காரணமாக மறதி ஏற்பட்டுவிட்டதைத் தவிர வேறெந்த குறையும் அவருக்கு இல்லை. இந்த இழப்பையும் ஈடுசெய்ய அவரது மகன் பாஸ்கர், அவர் இருந்து கூட்டங்கள் நடத்தியதற்கான மினிட்ஸ் புத்தகம் மூலம் சில தரவுகளை சேகரித்து வைத்துக்கொண்டு, அதன் மூலம் அவரது நினைவுகளை மீட்டுவிடலாமா? என்றொரு முயற்சி செய்தார். 23.5.2024 அன்று பிற்பகலில் அந்த முயற்சிக்கு உறுதுணையாக பெரியார் வலைக்காட்சியும் இணைந்து முடிந்தவரை சிலவற்றை வெளியே கொண்டுவர முயன்றுள்ளோம். அந்த நேர்காணல்தான் இது.
கேள்வி: உங்கள் பெயர், பிறந்த ஊர்,
பூர்வீகம் இதைப்பற்றி சொல்லுங்கள்…
பதில்: பெயர் சிட்டிபாபு, திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் எனது பிறந்த ஊர். 1944 இல் பிறந்தேன். அப்பா கிருஷ்ணன், அம்மா சீத்தம்மா.
கேள்வி: சென்னைக்கு எதற்கு, எப்போது வந்தீர்கள்?
பதில்: (பாஸ்கர் உதவியுடன் பதில் சொன்னார்) நானும் எனது உடன் பிறந்த சகோதரர் வெங்கடேசன் இருவரும் தி.மு.க.வில் இருந்தோம். அங்கே இருந்தால் வேலைகளால் சரியாக படிக்க முடியாது. ஆகவே திராவிடர் கழகத்திற்கு போய்விடு’ என்று எனது அண்ணன் வெங்கடேசன் தான் சொன்னார். அவர்தான் எனக்கு பெரியார் கொள்கைகளைச் சொல்லிக் கொடுத்தார். எங்கம்மா எங்களை சாமி கும்பிட அழைத்துச் செல்வார். அதைக்கண்டு எங்கள் அண்ணன் வெங்கடேசன் திட்டுவார். இதனால் வீட்டில் எப்போதுமே தகராறுதான். அதையும் மீறி எங்களை உருவாக்கியவர் எனது சகோதரர் வெங்கடேசன்தான். அவரை ’வெங்கிட்டு’ என்றுதான் அழைப்பார்கள். புள்ளையார் பொம்மை உடைக்கிறது அப்படி, இப்படின்னு அவர்தான் தீவிரமாக இருப்பார்.(பாஸ்கர் நினைவூட்டியபடியே இருந்ததால் தொடர்ச்சியாகப் பேசினார்) சின்ன வயதில் என்னை மாடு மேய்க்க விட்டார்கள். ஆகவே படிப்பதற்காக எனது 10 வயதில் சென்னைக்கு வந்தேன். அயனாவரத்தில் இருக்கும் சிட்டிபாபு பள்ளியில் சேர்ந்தேன். 10 ஆம் வகுப்பு வரையிலும் படித்தேன். அதன் பிறகு வண்ணையில் உள்ள தியாகராயர் கல்லூரிக்கு அருகிலிருக்கும் அய்.டி.அய்.யில் மெக்கானிக்கல் படிப்பில் சேர்ந்தேன். அந்த சான்றிதழை வைத்து பி.அண்ட்.சி. மில்லில் பிட்டர் பணியில் சேர்ந்தேன். அன்றைய நிலைமையில் பி.அண்ட்.சி. மில்லில் 10,000 பேர் வேலை செய்தனர். தொடக்கத்தில் எனக்கு 50 ரூபாய் ஊதியம் கொடுத்தார்கள். பணி நிரந்தரம் ஆனவுடன் 150 ரூபாய் கொடுத்தார்கள்.
கேள்வி: பி.அண்ட்.சி. மில்லில் நடந்த முக்கியமான நிகழ்வு ஏதாவது நினைவிலிருக்கிறதா?
பதில்: (பாஸ்கர் சங்கராச்சாரியாரை நினைவுபடுத்திய பிறகு பேசினார்) நான் பி.அண்ட்.சி. மில் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்தேன். அப்போது அங்கே கூட்டம் நடத்தியிருக்கிறேன். அதைவிட 1981 இல் சென்னையில் வில்லிவாக்கத்திலுள்ள கோயில் குடமுழுக்கு நடத்துவதற்கு வந்த சங்கராச்சாரியாரை, வரக்கூடாது என்று கருப்புக்கொடி காட்டி முற்றுகையிட்டனர். நானும் அதில் ஈடுபட்டேன். 40 பேரை கைது செய்தார்கள். நானும் 15 நாள் சிறையில் இருந்தேன்.
கேள்வி: உங்கள் இயக்கப்பணி குறித்து சொல்லுங்கள்
பதில்: (பாஸ்கர் கூட்டம் நடத்திய இடங்கள், பேச்சாளர்கள் என ஒவ்வொன்றையும் நினைவு படுத்தி, அது குறித்து சொல்லுங்கள் என்று ஊக்கப்படுத்திய பிறகு, நினைவுக்கு வந்த சிலவற்றை பகிர்ந்தார்) புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு, பட்டாளம் மகாலட்சுமி தியேட்டர், அஞ்சு லைட் ஆகிய இடங்களில் கூட்டம் நடத்தியிருக்கிறேன். இறையனார், செல்வேந்திரன், பூங்குன்றன் (கவிஞர் கலி.பூங்குன்றன்), அருள்மொழி ஆகியோர் வந்து பேசியிருக்கிறார்கள். அப்போ தெல்லாம் அருள்மொழிக்கு வழிச்செலவுக்கு 50 ரூபாய் கொடுப்போம். (அதையெண்ணி இப்போது வாய்விட்டுச் சிரிக்கிறார்) வடசென்னை மாவட்ட பொருளாளர் தாந்தோணி என்னை அதட்டி, கூட கொஞ்சம் வாங்கிக் கொடுப்பார். புலவர் கண்மணியை அழைத்து கூட்டம் நடத்தியிருக்கிறேன்.
புரசைவாக்கம் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாடு வடசென்னை சார்பில் நடைபெற்றது. அதில் நானும் பங்கேற்றேன். அதன்பிறகு கருநாடகத்தில் தமிழ் நடிகர்கள் தாக்கப்பட்டபோது, செல்லப்ப முதலி தெருவில் ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோரை அழைத்து கூட்டம் நடத்தினேன். அப்போது வடசென்னையில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் இருந்தனர்.
(சிங்காரவேலு, குணசீலன், வில்லிவாக்கம் தியாகராஜன், பி.அண்ட்.சி. மில் சாமிக்கண்ணு, தம்பரசு, அயனாவரம் செல்வதாசன், பக்தவச்சலம், பெரம்பூர் பாலகிருஷ்ணன், எமரோஸ், தட்சிணாமூர்த்தி, கி.ராமலிங்கம், பூவை நா.இளங் கோவன், பெரம்பூர் தியாகராசன், கருங்குழி கண்ணன், பி.அண்ட்.சி. மில் தீனன், கணபதி, எத்திராஜ் போன்றோரின் பெயர்களைச் சொன்னார். 50 க்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள் என்று சொன்னவர் அதில் பகுதி பேரைக்கூட சொல்ல முடியவில்லை. அதுவும் மகன் பாஸ்கர் துணையுடன் தான் அதுவும் சொல்ல முடிந்தது. தாந்தோணி, குணசீலன் ஆகியோர் பற்றிய நினைவு வந்தவுடன் அம்மாடி… என்று ஆச்சரியப்பட்டார். அவர்களின் தீவிரமான இயக்கப்பணி பற்றி சற்றே கனிவுடன் நினைவு கூர்ந்தார்)
கேள்வி: ஆசிரியர் பற்றி உங்கள் நினைவில் உள்ளதை சொல்லுங்கள்
(அவர் முற்றும் மறந்துபோய் தனது மகனைப் பார்க்க, பாஸ்கர் மம்சாபுரம் நிகழ்வை சொல்கிறார். பிறகு ஆங்… என்றபடி பேசுகிறார்)
பதில்: “ஆசிரியர் மம்சாபுரத்தில் தாக்கப்பட்ட போது, வெள்ளாளத் தெரு, செல்லப்ப தெரு ஆகிய இடங்களில் கே.ஏ.மதியழகன், பொன்முடி, பூங்குன்றன் (கவிஞர் கலி.பூங்குன்றன்) ஆகியோரை அழைத்து கண்டனக் கூட்டம் நடத்தினேன்.
1989இல் ஜனதா தளத்தில் உள்ள கலிவரதனை வைத்து, மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்திய போது, திருச்சி செல்வேந்திரனை வைத்து கூட்டம் போட்டிருக்கிறேன். நமது இயக்கத்திற்கு 1984 எழுச்சியான காலகட்டம். நம்ம கூட்டங்களுக்கு நன்றாக கூட்டம் சேரும். மூடநம்பிக்கை எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினோம். டவுடன் பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலிருந்து ஓட்டேரி பிரிக்ளின் சாலை வழியாக சுந்தரம் பிள்ளைத் தெருவில் ஊர்வலம் முடிவடைந்தது. ஆசிரியரை குதிரை வண்டியில் வைத்து அழைத்து வந்தார்கள். வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் தாந்தோணி, வெங்கடேசன், பக்தவச்சலம் போன்றவர்கள் முன்னிருந்து இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
(இதில் இவரது பங்களிப்பும், பங்கேற்பும் இருக்கிறது. ஆனாலும் மறதி காரணமாக நானும் கலந்துகொண்டேன் என்றே சொல்கிறார். அதற்கு மேல் அவருக்கு வேறு நினைவுகள் வரவில்லை)
கேள்வி: உங்கள் சகோதரர் உங்களை அழைத்துச் சென்ற முதல் கூட்டம் நினைவில் இருக்கிறதா?
பதில்: (அவர் பாஸ்கரைப் பார்க்கிறார். பாஸ்கர் ஆண்டை நினைவூட்ட) ”ம்… 1967 இல் அண்ணா பேசிய கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.”
அதைப்பற்றியும் வேறு எந்த நினைவும் அவருக்கு இல்லை.
கேள்வி: உங்களுக்கு எப்போது திருமணம் நடந்தது?
பதில்: (இந்த ஆண்டையும் பாஸ்கர்தான் நினைவூட்டினார்) 1969 இல் வைதீகத் திருமணமாக நடந்தது. அவ்வளவுதான்.
கேள்வி: உங்கள் இயக்கப் பயணத்தில்
ஏதாவது எதிர்ப்பு இருந்ததா?
பதில்: (அவர் மறுபடியும் பாஸ்கரைப் பார்க்க, அவர் நினைவூட்ட) ”அய்யோ… (அச்சத்துடன் பேசுகிறார்) ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, என்னை கல்லால் அடித்தார்கள். தி.க.காரன் வீடுடா… அடிடா… என்று சொல்லியே வீட்டுக்கதவை எல்லாம் அடித்து நொறுக்கிவிட்டார்கள். பிறகு ஆசிரியரிடம் சென்று நடந்ததைச் சொன்னோம். அவர் அவசரப்பட வேண்டாம், பொறுமையாக இருங்கள் என்று சொன்னார்.
கேள்வி: பெரியாரை நேரில் சந்தித்திருக்கிறீர்களா?
பதில்: ம்… (சிட்டிபாபு தடுமாறினார். பாஸ்கர் ஒரு பெயரை நினைவூட்ட) அய்யோ… (வியப்புடன் பேசுகிறார்) நடேசன் அந்தக் காலத்திலேயே பக்கா தி.க.காரர். அவர்தான் என்னை, எங்கள் அண்ணன் வெங்கடேசன், புலிகேசி என்பவர் பையன் மூவரையும் தி.க.வில் சேர்த்துவிட்டார். நடேசன் இப்போது இறந்துவிட்டார். சி.வி.எம்.அண்ணாமலை (காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்களின் தாத்தா) புலவர் நடேசனின் நண்பர். அந்த சி.வி.எம்.அண்ணாமலை நடேசனிடம் அண்ணாவை அழைத்து கூட்டம் போடலாம் என்று சொன்னார். கூட்டம் நடந்தது. ஆனாலும், 1978 இல் தான் ஓட்டேரி பிரிக்கிளின் சாலை 5 ஆவது சந்தில் திராவிடர் கழக கிளைக்கழகம் அமைப்பு ரீதியாக உருவானது.
பெரியாரை சந்தித்த போது, அவருக்கு மாலை போட்டேன். ‘வணக்கம் அய்யா’ என்று சொன்னேன். அய்யாவும் எனக்கு ‘வணக்கம்’ சொன்னார். தி.மு.க. வட்டச் செயலாளர் கோபால் சாமி தான் என்னை பெரியாரிடம் அழைத்துச் சென்றார். அப்போது, “பெரியார் நிறைய கேள்வி கேட்பாரு. அவரு ‘கடவுள் இருக்காரா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்று சொல்லவேண்டும்” என்று சொல்லிக்கொடுத்து என்னை அழைத்துச் சென்றார். ஆனால், பெரியார் கேட்டவுடன், விவரம் இல்லாமல் ‘இருக்கிறது’ என்று சொல்லிவிட்டேன். கோபால்சாமி என்னைப் பார்த்து டேய்.. டேய்.. என்று பதறினார். நான் புதியவன் என்று புரிந்துகொண்ட பெரியார், ‘கடவுள் இல்லை’ என்று சொன்னார். அந்த கோபால்சாமியும் இப்போது இறந்துவிட்டார்.
இப்படியாக துண்டு துண்டாகத்தான் அவரால் பேச முடிந்தது. ஆனால், அவர் நினைவில் ’தாந்தோணி’ என்ற பெயர் மட்டும் அழுத்தமாக பதிந்துள்ளது. மற்ற பெயர்க ளெல்லாம் ஏதாவது குறிப்பு சொன்னால் மட்டுமே ஏதோ கொஞ்சமாகப் பேசுகிறார்.
அதற்குப் பிறகு சொன்னதையே சொல்லிக்கொண்டு இருந்தார். எப்படியாவது அப்பாவிடம் உள்ள தகவல்களை சேகரித்து விடவேண்டும் என்றிருந்த பாஸ்கருக்கு, முக்கிய மான வரலாற்றுக் குறிப்புகளை எல்லாம் இப்படி மறக்கும்படி ஆகிவிட்டதே என்று மிகவும் வேதனைப்பட்டார். அதைக் கண்டு நமக்கும் இதயம் கனத்தது. அப்படித் திரும்பத் திரும்ப சொன்னதில்கூட, தான் ஒரு ‘பெரியார் தொண்டன்’ என்பது மட்டும் தவறாமல் அவரது பேச்சில் இழையோடிக் கொணடேயிருந்தது. பிறகு அவருக்கு மறந்துவிட்டதைக் கூட, இதெல்லாம் ஆசிரியருக்குத் தெரியும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்.
முன்னதாக பாஸ்கரின் மகள்களான இலக்கியா, இளையமதி இருவரையும் மிகுந்த உற்சாகத்துடன் நமக்கு அறிமுகம் செய்தார். இன்றைக்கும் அப்பழுக்கில்லாத பெரியார் தொண்டராகவே ஆனந்தமாக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கருப்புச் சட்டையை போட்டுக் கொண்டதாலேயே அவருடைய அகத்தில் பொலிந்த அந்த கொள்கைக் கம்பீரம், புறத்திலும் தெளிவாகத் தெரிந்தது.
திராவிடர் கழகத்தில் சேர்ந்தால் படிக்கலாம், வேலைக்குப் போகலாம் என்று 70 ஆண்டுகளுக்கு முன் எண்ணி வந்த சிட்டிபாபு அப்படியே படித்து, சென்னை ஓட்டேரியில் சொந்தமாக வீடு கட்டி, பிள்ளைகளை படிக்க வைத்ததோடு அல்லாமல் இயக்க உணர்வையும் ஊட்டியே வளர்த்திருக்கிறார். பாஸ்கரும் அதையே தொடர்கிறார். அந்த மன நிறைவு அவரது முகத்தில் ‘பளிச்’ சென்று தெரிந்தது. அதே நிறைந்த மனதோடும், உற்சாகத்தோடும் வாசலுக்கே வந்து நம்மை வழியனுப்பி வைத்தார்.
– உடுமலை வடிவேல்
படங்கள்: சதீஷ்