வி.சி.வில்வம்
பெரியாரின் பேச்சு மற்றும் எழுத்துகள் மனோவியல் (Psychology) ரீதியானது. ஒரு இனம் படித்து முன்னேற என்னென்ன தேவை என்பதைக் கண்டறிந்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்! ஒரு இனம் ஒடுக்கப்பட்ட போது, அவர்களை மீட்டெடுக்கும் வழிகளைக் கண்டறிந்து, அதில் வெற்றி கண்டவர். மனிதகுலத்தின் அத்தனைப் பிரச்சினைகளையும் இவ்வாறே அலசிப் பார்த்தவர்.
குறிப்பாகப் பெண்ணினத்தின் பிரச்சினைகளை ஒரு பெண்ணாலே உணர முடியாத நிலையில் முழுமையாக உள்வாங்கி, உணர்ந்து, ஆக்கபூர்வமாகத் தீர்வு கண்டவர். எங்களுக்குத் தந்தை மட்டுமல்ல; எங்கள் தாயும் பெரியார் தான் என்று பெண்கள் சொல்லுமளவு, இச்சமூகத்தில் பெரும் வீச்சை உண்டாக்கியவர். அதனால் தான் இறந்து 50 ஆண்டுகள் ஆகியும் தினமும் பேசு பொருளாக (Trending) இருக்கிறார்.
திராவிடர் இயக்க மகளிர் சந்திப்பில் இன்று நாம் காணும் தோழர் கலைச்செல்வி, “இந்த இயக்கத்தில் இருப்பதே எனக்குப் பலம் தான்”, என்கிறார். எப்பேற்பட்ட மன தைரியத்தைப் பெரியார் வழங்கியிருக்கிறார் பாருங்கள்! ஒரு ஆரோக்கியமான சமூகத்தை நமக்குத் தந்து சென்றிருக்கிறார்!
வாருங்கள்… நேர்காணலுக்குச் செல்வோம்!
வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்? எப்போது திராவிடர் கழகத்திற்கு வந்தீர்கள்?
எனது பெயர் கலைச்செல்வி. சொந்த ஊர் கோயமுத்தூர். 1977 ஆம் ஆண்டு பிறந்தேன். தற்போது 47 வயதாகிறது. 1995 இல் எனக்குத் திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் சா.சிவக்குமார். எங்கள் திருமணத்தை தி.க.செல்வம், பேராசிரியர் இராஜகோபால், பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி வானவராயர் ஆகியோர் நடத்தி வைத்தனர்.
எனது இணையர் தாலி கட்டாமல் தான் திருமணம் செய்வேன் என உறுதியாகக் கூறினார். எங்கள் வீட்டில் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பின்னர் ஒப்புக் கொண்டனர். திருமணத்திற்குப் பிறகே எனக்குப் பெரியார் கொள்கை அறிமுகமானது.
எனினும் 2002 ஆம் ஆண்டு கோவை சுந்தராபுரத்தில் குடும்பச் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் ஆசிரியர் கி.வீரமணி அய்யா கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சியே எனக்குத் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து கோவையில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வேன். எனது இணையரின் கொள்கை அணுகுமுறையும் சிறப்பாக இருக்கும்!
குடும்ப உறுப்பினர்கள் குறித்துக் கூறுங்கள்?
மகள் பெயர் இனியா. மகன் பெயர் தமிழ் நியூட்டன். இருவருமே பெரியார் கொள்கையைப் பின்பற்றக் கூடியவர்கள். மகள் இனியா அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். மகன் தமிழ் நியூட்டன் மோட்டார் பந்தயங்களின் போது ஒளிப்படம் எடுக்கும் பணியைச் செய்து வருகிறார். பணியின் பொருட்டு வெவ்வேறு மாநிலங்களுக்கும் சென்று வருவார்.
எனது பெற்றோர் எங்களுடனே இருக்கின்றார்கள். தொடக்கத்தில் அவர்கள் சாஸ்திர, சம்பிரதாயம் பார்ப்பவர்களாக இருந்தார்கள். நாளடைவில் அது மாறிவிட்டது. எனது இணையரின் அணுகுமுறைகள், எனது தனிப்பட்ட வளர்ச்சி, பிள்ளைகளின் திறமைகள் இவைகளைப் பார்க்கும் போது, அது கொள்கையின் வளர்ச்சியாகப் பிரதிபலித்தது. அந்த வகையில் எனது பெற்றோரும், எங்களின் கொள்கை வழிக் குடும்பத்தில் இணைந்து விட்டார்கள். அத்துடன் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆர்வலர்களாகவும் மாறிப் போனார்கள்.
இயக்க நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த அனுபவங்கள் குறித்துக் கூறுங்கள்?
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், தீச்சட்டி எடுத்து சென்றது புது அனுபவமாகவும், பெருமையாகவும் இருந்தது. அந்நிகழ்வில் உயர் ஜாதியினர் எனப்படுவோர் இடையூறுகள் செய்தனர். அதையும் மீறி சிறப்பாக நடந்தது.
அதேபோன்று கோவை சுந்தராபுரத்தில் 2013 அன்று எனது தலைமையில் புரட்சிப் பெண்கள் மாநாடு நடைபெற்றது. அதில் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு “பெண் உரிமைப் போராளி” எனும் பட்டம் வழங்கப்பட்டது. பிறகு கணியூரில் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடும் சிறப்பாக நடைபெற்றது.
கோவை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், சத்தியமங்கலம், சென்னை, ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளேன். மாவட்ட மகளிரணி செயலாளர், மண்டலச் செயலாளர் பொறுப்புகள் வகித்துள்ளேன்.
போராட்டத்தில் கைதாகி சிறை சென்ற
அனுபவம் உண்டா?
ஆசிரியர் அறிவித்த அத்தனைப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளேன். எனது தலைமையிலும் மகளிரணி ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளது. மனுதர்ம எரிப்புப் போராட்டம் உள்ளிட்டு 10 முறை சிறை சென்றுள்ளேன்.
ஆசிரியர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க “தை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு” என்பதை வலியுறுத்தி, கோவையில் பொங்கல் வைத்து, பொது மக்களுக்கு வழங்கினோம். அதனையயொட்டி தமிழ்ப் புத்தாண்டு நாளன்று கைது செய்யப்பட்டோம்.
கோவையில் ஆசிரியர் பங்குபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் குடும்பத்துடன் கலந்து கொள்வோம். ஆசிரியர் எப்போதும் பாசத்தோடு விசாரிப்பார். சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல் போனால், “கலைச்செல்வி வரவில்லையா?” என நினைவாகத் தோழர்களிடம் விசாரிப்பார்.
பெரியார் கொள்கையால் நீங்கள் அடைந்த பயன்கள் என்ன?
இந்தக் கொள்கைக்கு வந்த பிறகு, எனக்குள் இருந்த பய உணர்வு நீங்கிவிட்டது. கூடுதல் தெளிவு பெற்றதாக உணர்கிறேன். எனக்குத் தெரிந்த தையல் தொழிலை மேம்படுத்தி, சொந்தமாகக் கடை நடத்தி வருகிறேன். ஓரளவு வருமானமும் ஈட்டுகிறேன். இதற்கான தன்னம்பிக்கையை இந்தக் கொள்கையின் மூலமே பெற்றேன்.
குடும்பத்தை வழிநடத்தவும், எதையும் பேசி முடிவெடுக்கும் திறனும் அதிகரித்துள்ளது. எனக்குள் இருக்கும் சமூகச் சிந்தனைகள் அறிவியல் செய்திகளை அறியவும், அதன்படி பின்பற்றவும் வழிவகை செய்கிறது. யாரையும் எதிர்பாராமல் தனியாகச் சென்று வரவும், தனித்தன்மைகளை வளர்த்துக் கொள்ளவும் பெரும் உதவியாய் இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் உதவிகள் என்றாலும், “தோழர்கள் இருக்கிறார்கள்” என்கிற எண்ணம் நம் தைரியத்தை அதிகப்படுத்துகிறது. அதிகாலை 3 மணிக்கு எனது உறவினர் ஒருவருக்குத் தொடர்வண்டியில் மாரடைப்பு ஏற்பட்டது. செய்தியை என்னிடம் சொன்னார்கள். நான் உடனே தோழர்களைத் தொடர்பு கொண்டேன். அவ்வகையில் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கோயம்புத்தூர் சந்திரசேகர், தஞ்சாவூர் ஜெயக்குமார், திருப்பத்தூர் எழிலரசன், அண்ணா சூசைராஜ் உள்ளிட்ட அனைத்துத் தோழர்களும் மின்னலென செயல்பட்டு உதவி செய்தனர். ஒரு பெண்ணாக அந்த நள்ளிரவிலும் அனைவரையும் தொடர்பு கொண்டு, வேகமாகச் செயல்பட இந்தக் கொள்கையே காரணம்! உறவினர்கள் மத்தியிலும் பெரும் அங்கீகாரத்தை இந்நிகழ்வு பெற்றுத் தந்தது!
திராவிடர் இயக்கத்தால் ஏற்பட்ட
சமூக மாற்றங்கள் என்ன?
மகளிர் தமது சொந்த உழைப்பில், வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் பெருகிவிட்டன. வேலையின் பொருட்டும், பொதுவாகவும் வெளியிடங்களுக்குச் செல்வதும் அதிகரித்துவிட்டது. ஜாதி வேற்றுமைகள் குறைந்துள்ளது. இடஒதுக்கீட்டால் கல்வி, வேலை வாய்ப்புகள் உயர்ந்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மேலோங்கியது. சுயமரியாதைத் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுவதுடன், பெண்ணடிமைத்தனமும் குறைந்துள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியில் இயக்க மகளிர் 5 பேர் இருந்தோம். மாதம்தோறும் 5 மகளிர் குடும்பங்களும் இணைந்து, அதிகம் ஈடுபாடு காட்டாத தோழர்களின் வீடுகளுக்குச் செல்வோம். ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினைகள், பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தால் பேசுவோம். நம்மால் சரிசெய்ய முடிகிறது என்பதைவிட ஆறுதலாய், ஆதரவாய் இருக்க இந்தச் சந்திப்புகள் பெரிதும் உதவின. அதேபோல மாதம் ஒரு வீட்டில் சந்தித்து கலந்து பேசியும், விருந்துண்டும் மகிழ்வோம்! இதன் பயனாக 40 க்கும் மேற்பட்ட மகளிர் நமது இயக்கத்திற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் நிகழ்ச்சிகள், மாநாடுகள் என்றால் தனியாகச் செல்ல மாட்டோம், குடும்பம், குடும்பமாகவே செல்வோம். “கோவையில் மகளிர் படையே வைத்துள்ளீர்கள்” என ஆசிரியர் ஒருமுறை கூறினார். அந்த வாழ்த்தில் மகளிர் படையே மகிழ்ச்சியில் திளைத்தோம்!
சுந்தராபுரம் பகுதியில் அசுரர் எழுச்சி நாள் நடத்தப்படுவதாக அறிந்தோம்.
அதுகுறித்து விளக்குங்கள்?
சுந்தராபுரம் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி அன்று அசுரர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. சந்திரசேகர், சிற்றரசு, தமிழ்முரசு, தமிழ்ச்செல்வம், செந்தில்நாதன், குமரேசன், இலை கடை செல்வம் உள்ளிட்ட பல தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வர். இயக்கத்தினர் குடும்பம், குடும்பமாகப் பங்கு பெறுவர். மாட்டுக்கறி விருந்து நடைபெறும். பெரியார் பிஞ்சுகளின் ஆடல், பாடல், கவிதை, பேச்சுப் போட்டிகள் நடைபெறும். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பரிசுகள் வழங்கி, தீபாவளி பண்டிகை குறித்தும், அசுரர் எழுச்சி நாள் குறித்தும், நமது தலைவர்கள் குறித்தும் எளிமையாக விளக்கிச் சொல்லப்படும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் குடும்பச் சந்திப்பு நடத்துவதன் மூலம், பிள்ளைகள் தம் சம வயது நண்பர்களுடன் கொள்கைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.