இசையும் ஆடலும் திராவிடர் கலையே!

குடந்தை க.குருசாமி
தலைமைக் கழக அமைப்பாளர்

பெரியார் திறந்தவெளி பல்கலைக்கழகம் 09.03.1985 &
10.03.1985 ஆகிய இரு நாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருத மயம், ஆதிக்கம் பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது.
அதில் ஆராய்ச்சி பூர்வமான இசை மற்றும் நடனம் பற்றிய கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டன. இசையும் ஆடலும் சமஸ்கிருத மயமாக்கப்பட்டவை! என்னும் பொருள் பற்றிய கருத்தரங்கில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி இசை ஆராய்ச்சியாளர் பா.தண்டபாணி கீழ் வருமாறு ஒரு செய்தியை குறிப்பிட்டுள்ளார்.

5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிந்துவெளி மக்கள் இசைக்கலையிலும் ஆடல் கலையிலும் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தனர் என்பதை உலக நூல்கள் எல்லாம் அய்யம் திரிபற கூறுகின்றன.
சிந்துவெளி மக்கள், நாகரீகம் மிக்க திராவிடரே! என்பதும், இசை நடனம் முதலானவற்றில் சிறந்து விளங்கினார்கள் என்பதும்,
திராவிட பெருங்குடி மக்களின் கலை வளத்தை பற்றி ஆராயும்போது 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆய்ந்த நூல்களின் வாயிலாக தெரிய வருகிறது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
தலை, இடை, கடைச்சங்க காலங்களில் தமிழ்நாட்டில் இருந்த தனி இசை நூல்களில் பெருநாரை, பெருங்குறுகு பேரிசை, சிற்றிசை, முறுவல், நாடகத் தமிழ் நூல், சயந்தம் குணநூல், செயிற்றியம், இசை நுணுக்கம், பரூவ பாரதீயம், பரத சேனாபதியம், கூத்த நூல், இந்திர காளியம், பஞ்ச மரபு, என்பன சில ஆகும்.

அவற்றுள் பஞ்ச மரபு தவிர மற்ற இசை நூல்கள் யாவும் அழிந்து போயின. அந்த இசை நூல்களில் இருந்து சிற்சில பாடல்களைச் சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் மேற்கோள்களாக குறிப்பிட்டுள்ளார் .
அவை முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருதயாழ், நெய்தல் யாழ் என்பன ஆகும். நிலத்துக்குரிய சிறு பண்களை யாழின் பகுதி என்றனர். எனவே தான் தொல்காப்பியர் தான் எழுதிய இலக்கண நூலில் ஒவ்வொரு வகை நிலத்துக்கும் முதற்பொருளையும் கருப்பொருளையும் கூறப் புகுந்த இடத்து கருப்பொருள்களின் வரிசையில் யாழையும் பறை யையும் சேர்த்துள்ளார். இசையையும் ஆடலையும் வளர்த்த கூத்தர்களை பற்றியும் தொல்காப்பியம் கூறுகிறது. எனவே, சரித்திர காலத்திற்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இசை கூத்து முதலிய கலைகள் வளர்ந்தோங்கி இருந்தன என்பது தெரிய வருகிறது. என்ற செய்திகளை நம் மனதில் நிறுத்தி திருமதி ராணி குரு அவர்களின் இசை மற்றும் நடன செயல்களை பார்க்க கேட்டுக்கொள்கிறோம்.
கும்பகோணம் என்பது அக்ரஹாரங்கள் நிறைந்த பகுதியாகும், சங்கராச்சாரியாரின் தலைமை பீடம். கும்பகோணம் நான்கு வேதங்களையும் கற்றுத் தருகிற பாடசாலைகள் நிறைந்த பகுதி.

கும்பகோணம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகப் பெரிய இந்துமத விழாவான மகா மகம் நடைபெறும் பகுதியாகும், கும்பகோணத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான மிகப்பெரிய கோவில்கள். அவற்றில் பல 2000 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளன.
தலைசிறந்த சிற்பங்கள், ஓவியங்கள், கட்டுமான முறைகள் கொண்ட கோவில்கள் நிறைந்த பகுதி.
கோவில்கள் அதிகமாக இருக்கிற பகுதி என்றாலே அங்கு சாஸ்திர சம்பிரதாயங்கள், பூஜைகள், புனஸ்காரங்கள், ஜாதிய கோட்பாடுகள், மனுதர்மங்கள் இவைகள் எல்லாம் வேரூன்றி இருக்கும்.
ஆரிய கலைக்கும் கர்நாடக இசைக்கும் பஞ்சம் இருக்காது. 97 சதவீதமாக இருக்கிற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டி கொழுப்பதற்காகவே புரியாத மொழியில் பாடுகின்ற பாடலும், அருவருக்கத்தக்க நடனங்களும் பாரம்பரியமாக அரங்கேறிக் கொண்டிருந்த பகுதி இது.

நாட்டியம் ஆடும் பெண்களுக்கு தந்தையர்கள் இருக்க மாட்டார்கள். வழிவழியாக தாய் தான் இருப்பார்கள். ஆண் குழந்தைகளாக இருந்தால் இசைகள் வாசிப்பதற்கும், பெண் குழந்தைகளாக இருந்தால் நடனத்திற்கும் கோவிலுக்கு பொட்டுக் கட்டி விடுவதற்கான சடங்கு சம்பிரதாயங்கள் இந்தப் பகுதியில் அதிகமாக இருந்தது.
பிச்சை பிராமணர்கள் முதல், எல் அண்ட் டி கம்பெனி, ஆர் அண்ட் ஆர் பேருந்து கம்பெனி, டிவிஎஸ் பேருந்து கம்பெனியில் வேலை செய்யும் பணக்கார பார்ப்பனர்கள் வரை குடியிருந்து வந்திருக்கிறார்கள்.

இந்தப் பகுதியில் உள்ள அரசு ஆடவர் கல்லூரியில் சமீப காலங்கள் வரை தலையில் டர்பன் கட்டி நெற்றியில் நாமமோ பட்டையோ போட்டுக் கொண்டு இருந்த பார்ப்பன பேராசிரியர்கள் தான் அதிகமாக இருந்தார்கள். திராவிட சமுதாயத்தை சேர்ந்த பேராசிரியர்கள் ஏதோ கணக்கிற்கு ஒருவரோ இருவரோ என்று தான் இருந்த நிலை.
ஆனால், இன்று தலைவர் தந்தை பெரியார், தந்தை பெரியாரின் சிந்தனையை முனை மழுங்காமல் எடுத்துச் செல்லும் மதிப்பிற்குரிய தமிழர் தலைவர், தந்தை பெரியாரின் முதல் மாணவரான பேரறிஞர் அண்ணா, சீடரான பெருந்தலைவர் காமராஜர், குருகுலம் சென்ற முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் தமிழர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவே உழைத்தார்கள்.
அந்த உழைப்பின் பயனாக 97 சதவீதம் திராவிட சமுதாயத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தோழர்கள் இன்றைக்கு அந்த கல்லூரிக்கு பேராசிரியராக வந்து விட்டார்கள் என்பது தந்தை பெரியார் என்ன சாதித்தார் என்ற கேள்வி கேட்க்கும் அதிமேதாவிகளுக்கு பதிலாகும்.

கடவுளை மறுத்து நடனக் கலையை வென்ற பகுத்தறிவாளர்!
இந்த நிலையில் தான் பார்ப்பனர் கோட்டையில்
எங்களைத் தவிர யாருக்கும் பரதநாட்டியம் வராது,
எங்களைத் தவிர யாருக்கும் கர்நாடக இசை வராது,
எங்களைத் தவிர யாருக்கும் வீணை வாசிக்க வராது, கலைக் கடவுள் பிராமணர்களுக்கு தான் ஆசீர்வாதம் செய்துள்ளார்! என்று சொல்லிக் கொண்டிருந்த மமதையான பேச்சுக்களை உடைத்து
1989இல் கும்பகோணத்தில் அறிவு பரதநாட்டிய பயிற்சியகம் என்ற ஒரு பரதநாட்டிய பயிற்சிப் பள்ளியை எனது இணையர் ராணி குரு துவங்கினார்.

இவர் திராவிடர் கழகத்தின் புலனாய்வு குழுவில் இடம் பெற்றிருந்த திருவலஞ்சுழியைச் சார்ந்த டாக்டர் கே.ஆர். குமார் – ஜெயமணி குமார் ஆகியோரின் புதல்வி ஆவார். சித்த மருத்துவரான டாக்டர் கே. ஆர். குமார் அவர்களுடைய மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை பாராட்டி, சென்னையில் மதிப்பிற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் புரொபசர் என்ற பட்டத்தை வழங்கினார். அது முதல் தனது 95ஆம் வயதில் கே.ஆர்.குமார் மறையும் தறுவாய் வரையில் டாக்டர் புரொபசர் கே.ஆர். குமார் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்தார்.
கும்பகோணத்தில் நூறு ஆண்டுக்கு மேலாக இயங்கி வருகின்ற வாணி விலாச சபா என்கிற தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இலவச பரதநாட்டிய பயிற்சிப் பள்ளியில் ராணிகுரு பயிற்சிப் பெற்று கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், வீணை, முதலிய கலைகளை கற்றுத் தேர்ந்தபின் தனியே வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்.
1989 முதல் 2024 வரை ஏறக்குறைய இடைவெளி இல்லாமல் 35 ஆண்டு காலம் பல்வேறு இன்னல்களுக்கு இடையில்தொடர்ந்து இந்தப் பயிற்சிப் பள்ளியை நடத்தி இருக்கிறார்.

இதில் பயிற்சி பெற்ற குழந்தைகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் நல்லத் தமிழ் பாடல்களுக்கு நடனமாடியும், மதிப்பிற்குரிய திராவிடர் கழகத்தினுடைய தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கு பெறுகின்ற மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களிலும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க பாடல்களுக்கு நடனமாடியும் வருகிறார்கள்.
கும்பகோணத்தை சுற்றி இருக்கிற திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், குடவாசல், நாச்சியார் கோவில், வலங்கைமான், ஆலங்குடி, சுவாமிமலை, போன்ற பல பகுதிகளில் தனியார் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு நாட்டியப்பயிற்சி வழங்கி சிறப்பான நடன வாரிசுகளை உருவாக்கி உள்ளார்.

பரதநாட்டிய பயிற்சி என்பது ஒரு குழந்தைக்கு உடம்பில் இருக்கிற கண்கள், கழுத்து, கைகள், விரல்கள், இடுப்பு, கால்கள், போன்ற அனைத்து அவயவங்களையும் முறையாக இயங்கவைக்கும் ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்தப் பயிற்சியை செய்வதற்கும் கடவுளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.
ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் நடனப் பயிற்சியால் பாடல்களை தாளத்துடன் நினைவில் நிறுத்தி, அதைப் பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் மேடைக் கூச்சம் இல்லாமல் செய்து காட்டும் துணிச்சல் குழந்தைகளுக்கு உண்டாகிறது.
பார்ப்பனர்களின் கோட்டையில் வாழ்ந்து கொண்டு, கடவுளுக்காகத்தான் கலை என்கின்ற நிலையை மாற்றி, உடற்பயிற்சிக்காகவும் நினைவாற்றலுக்காகவும் தமிழ் வளர்ச்சிக்காகவும் தினந்தோறும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ராணி குரு அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *