பேராசிரியர் வெள்ளையன்
தமிழிலே பேசுகின்ற நான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் கருத்தையும் இங்கே கூறிக் கொள்ள விரும்புகிறேன். ஒலி வடிவத்தை மாற்ற வேண்டுமென்று தந்தை பெரியார் சொல்லவில்லை. வரி வடிவத்தை மாற்ற வேண்டுமென்று தான் தந்தை பெரியார் கூறுகிறார். பெரும் பெரும் புலவர்கள் பேராசிரியர்கள் மகா வித்வான்கள் மஹாமஹோபாத்தியாயர்கள் போன்றவர்களுக் கெல்லாம் தோன்றாத இந்தச் சிந்தனை நம் வெண்தாடி வேந்தரின் எண்ணத்தில் தான் பிறந்தது.
247 எழுத்துக்களையும் 29 எழுத்துக்களாகச் சுருக்கிக் காட்டுகின்ற ஆராய்ச்சியை எந்தத் தமிழ்ப் பேராசிரியரும் சிந்தித்துப்பார்க்காத அந்தக் காலத்திலேயே கும்பகோணம் அரசினர் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
பன்னிரண்டு உயிர் எழுத்தையும் 5 எழுத்தாக ஆக்கிக் காட்டிய மாமேதை நமது அய்யா தந்தை பெரியார் அவர்கள். அய், ஔ என்ற இரண்டு எழுத்துகளையும் அய், அவ் என்றே எழுதினால் எந்தக் குந்தகமும் வந்து விடாது. அ, இ, உ, எ, ஒ, என்ற ஒவ்வொரு எழுத்துக்களோடு கால் வாங்குகின்ற குறியை, அதாவது என்ற குறியைச் சேர்த்து எழுதினால், அ- என்பதை ஆ என்று ஒலிக்கலாம் இ-, என்பதை ஈ என்று ஒலிக்கலாம், இப்படியே மற்ற உயிர் எழுத்துக்களுக்கும் சேர்த்துக் கொள்ளலாம், ஆங்கிலத்தை போலவே தமிழிலும் 5 உயிர் எழுத்துக்கள் என்று ஆகிவிடும். இன்னும் சில குறியீடுகளையும் உரு வாக்கிக் கொண்டால், 131 வரி வடிவங்களை 29 ஆகச் சுருக்குவதற்கு வழி இருக்கிறது என்பதை தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்டுள்ள “எழுத்துச் சீர்திருத்தம்” என்ற நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
247 எழுத்துக்களும், பேதம் வளர்த்திடப்பெரும் பெரும் புராணங்களும் இதிகாசங்களும் தமிழிலே ஏராளமாக இருப்பதால் தான் இதனைக் காட்டு மிராண்டி மொழி என்று தந்தை பெரியர் அவர்கள் கூறி வருகின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன்.
இதிகாசத்திலும் புராணத்திலும் மட்டும்தான் நம்மை இழிவு செய்திருக்கிறார்கள் என்பதல்ல இலக்கணத்திலும் கூட நம்மை இழிவு படுத்தியிருக்கிறார்கள். “வச்சணந்தி மாலை” எனப்படும் வெண்பாப்பாட்டியல் என்னும் நூல், எழுத்துக்களில் கூட, பார்ப்பன எழுத்து, அரச எழுத்து, வணிகர் எழுத்து, சூத்திர எழுத்து என்று வருணப்பாகுபாட்டை வகுத்துக் காட்டுகிறது.
உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டும் முதலில் உள்ள மெய்கள் ஆறும் பார்ப்பன எழுத்துக்களாம் அடுத்துள்ள மெய்கள் ஆறும் சத்திரிய எழுத்துக்களாம்; அடுத்த 6இல் ழ, ள ஆகிய இரண்டும் சூத்திர எழுத்துக்களாம், மற்ற நான்கும் வணிக ஜாதி எழுத்துக்களாம். இப்படி எழுத்துக்களிலே கூட ஜாதிப் பாகுபாட்டைப் புகுத்தியுள்ளார்கள். இதை பார்க்கின்ற பகுத்தறிவு மேதையாம் எங்கள் அய்யா தந்தை பெரியார் காட்டு மிராண்டி மொழி என்று ஏன் கூறமாட்டார்? தந்தை பெரியார் அவர்களின் எரிப்புப் போராட்டத்திற்கு உரியவைகளில் இதுவும் ஒன்று என்று கூறி பேராசிரியர் வெள்ளையன் தன்பேச்சை முடித்துக் கொண்டார்.
( திருச்சி சிந்தனையாளர் பேரவையின் சார்பாக 27.9.1970இல் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவில் திருச்சி சிந்தனையாளர்
பேராசிரியர் வெள்ளையன் உரை )