சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அறிவிப்பு
சென்னை, ஜூன் 28 கூட்டுறவு சங்கங்களில் உள்ளவாராக்கடன்களை வசூலிப்பதற்காக ‘இ-தீர்வு’ திட்டம் தொடங்க வுள்ளதாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேர வையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று (27.6.2024) வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.1 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும். தானியங்களை பாதுகாப்பாக சேமித்து நல்ல விலை பெறுவதற்காக கூட்டுறவு அமைப்புகள் மூலம் 25,000 மெட்ரிக் டன் கொள்ளளவுடன் நவீன தானிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும். பணியாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக இரு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் ‘பணியாளர் நாள்’ நிகழ்வு நடத்தப்படும். மேலும், பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும். இது தவிர விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில்பெருநகரங்களில் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும். அனைத்து கூட்டுறவு அலுவலகங்களின் பணிகள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் கடன் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் பெருநகரங்க ளில் கூட்டுறவுசில்லறை விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும். பணியாளர்களின் செயல்திறனை மேம்படுத்த விற்பனை ஊக்குவிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நலிந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு புத்துயிரூட்ட ‘கூட்டுறவு இணைப்புச் சங்க ஆதரவுத் திட்டம்’ கொண்டு வரப்படும்.மேலும், நவீன கூட்டுறவு தொழில்நுட்பங்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல சென்னையில் ‘கூட்டுறவு தொழில்நுட்ப மய்யம்’ உருவாக்கப்படும்.
மாவட்ட கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் திறன் மேம்பாட்டு மய்யங்கள் உருவாக்கப்படும். உறுப்பினர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக்குழு கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்படும். மாநில அளவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவுச் சங்கம், பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். கூட்டுறவுசங்கங்களில் உள்ள வாராக்கடன்களை வசூலிக்கவும் விசார ணையை கண்காணிக்கவும் ‘இ-தீர்வு’ திட்டம் தொடங்கப்படும். கூட்டுறவுத் துறையின்கீழ் இயங்கும் ரேஷன் கடைகள்மேம்படுத்தப்படும். புதிதாக கூட்டுறவுசங்கங்களின் 100 கிளைகள் தொடங்கப்படும் என்பன உட்பட 43 அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் ரூ.20 கோடியில்
10 புதிய கைத்தறி குழுமங்கள் உருவாக்கப்படும்
சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஜூன் 28 தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள இடங்களில் 10 புதிய கைத்தறி குழுமங்கள் ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, துணி நூல், கதர் துறை
தொடர்பாக அமைச்சர் ஆர்.காந்தி நேற்று (27.6.2024) வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாட்டில் உள்ள 1,114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு, ஆண்டுதோறும் கூலி உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு கூலியில் 10% அகவிலைப்படி உயர்த்தி தரப்படும். கைத்தறி ஆதரவு திட்டத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டு இனத்தின்கீழ், 3,000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.3 கோடியில் தறி, உபகரணங்கள் வழங்கப்படும். கைத்தறி துணிகள் விற்பனையை அதிகரிக்க, சென்னை தீவுத்திடலில் ஒரு தேசிய அளவிலான கைத்தறி கண்காட்சி ரூ.2 கோடி செலவிலும், 4 மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சிகள் ரூ.1.20 கோடி செலவிலும் நடத்தப்படும்.
சிறீவில்லிபுத்தூரில் ரூ.1 கோடி திட்ட மதிப்பீட்டில் பாவு ஓடுதல், கஞ்சி தோய்த்தல் இயந்திரங்கள் அமைக்கப்படும். கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள இடங்களில் 10 புதியகைத்தறி குழுமங்கள் ரூ.20 கோடிதிட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இதன்மூலம், 2,000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், தறிக்கூடங்கள் அமைத்தல், மேம்படுத்தப்பட்ட தறி, உபகரணங்கள் வழங்குதல் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.
வேலூர், நாகர்கோவில் பகுதிகளில் தேசிய கைத்தறி வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1.50 கோடியில் 2 சாயச் சாலைகள் அமைக்கப்படும். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரூ.66 லட்சத்தில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படும் என்பது உட்பட 22 அறிவிப்புகளை அமைச்சர் காந்தி வெளியிட்டார்.