பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.
சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக் மகாநாட் டில் பேசிய பம்பாய்த் தலைவர் சர். பிரோஸ் சேத்னா, அம்மகாநாட்டுக்குத் தலைமை வகித்த சர். கே.வி.ரெட்டி நாயுடுகாரு அவர்களைப் பாராட்டிப் பேசுகையில் சென்னை ஆக்டிங் கவர்னர் பதவியை அவர் வெகு திறமையாக நிர்வகித்து, அகில இந்தியப் புகழ்பெற்று விட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், இந்த விஷயத்தை வழக்கப்படி “தேசிய” தின சரியான “ஹிந்து’’வும் அபேதவாத தினசரியான ‘இந்தியன் எக்ஸ்பிரசும்‘ பிரசுரம் செய்யவே இல்லை. யோக்கியப் பொறுப்புள்ள எந்தப் பத்திரிகையும் இம்மாதிரி செய்திகளை மறைக்கவே செய்யாது. கட்சி வித்தியாசம் பாராட்டாமல் சகல கட்சிச் செய்திகளையும் பிரசுரம் செய்ய வேண்டியதே பொறுப்பு வாய்ந்த பத்திரிகைகளின் கடமையென, பண்டித ஜவஹர்லால் சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்திருந்த போது ஒரு பத்திரிகைக்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், பிரஸ்தாப விஷயம் கட்சி சம்பந்தமானதுமல்ல. ஒரு பொறுப்பு வாய்ந்த தலைவர் மற்றொரு இந்தியப் பிரமுகரைப் புகழ்ந்து பேசிய பேச்சை அந்த இரண்டு பத்திரிகைகளும் அமுக்கி விட்டது, மிகவும் கேவலமான செயலாகும். தேசியமும், சமதர்மமும் பேசும் அப்பத்திரிகைகள் உண்மையில் வகுப்புவாதப் பத்திரிகைகளாக இருப்பதை தேச மக்கள் இப்பொழுதாவது உணர்வார்களாக!
– ‘விடுதலை’ – 12.11.1936