சென்னை, ஜூன் 28– இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மனநலசேவை வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பொது மறுவாழ்வுத் துறையின் அறிவிப்புகளை அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் 26.6.2024 அன்று வெளியிட்டார். அதில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து மண்டபம் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் புதிதாக அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டமானது நெடுஞ்சாலைகள் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் மேம்படுத்தப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மரம் நடுதல், நாற்றங்கால் அமைத்தல், வீட்டு தோட்டங்கள் அமைக்கும் திட்டம் சுற்றுச்சூழல். காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 103 மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் மனநல மேம்பாட்டை நோக்க மாக கொண்டு, மனநல சேவைகள் வழங்கும் திட்டம் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.