சென்னை ஜூன் 27 தமிழ்நாடு அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.83,694.65 கோடி கூடுதல்வரி வருவாய் கிடைத்துள்ளதாக வணிகவரித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வணிகவரித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வணிகவரித் துறையால் ஜிஎஸ்டிவரி இழப்பீடு இல்லாமல் கடந்த2020-2021-ஆம்ஆண்டில் வசூலிக்கப்பட்ட மொத்த வரி ரூ.85,867.86 கோடியாகும். இதை ஒப்பிடும்போது 2021-2022-ஆம் ஆண்டில் ரூ.11,988.83 கோடி அதிகமாக ரூ.97,856.83 கோடி வசூலிக்கப்பட்டது.
அதேபோல், 2022-2023-ஆம் ஆண்டில் ரூ.31,567.62 கோடி அதிகமாக ரூ.1 லட்சத்து 17,435.48 கோடியும், 2023-2024-இல் ரூ.40,138.06 கோடி அதிகமாக ரூ.1 லட்சத்து 26,005.92 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 ஆண்டுகளில் ரூ.83,694.65 கோடி வரி வருவாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுடன் சேர்த்து கணக்கிடும்போது,
கடந்த 2020-2021-இல் ரூ.10602.82 கோடி சேர்த்து ரூ.96,470.69 கோடியும், 2021-2022-இல் ரூ.7,235.80 கோடி சேர்த்து ரூ.1 லட்சத்து 5,092.63 கோடியும், 2022-2023-இல் ரூ.16,214 .83 கோடி சேர்த்து ரூ.1 லட்சத்து 33,650.31 கோடியும், 2023-2024-இல் ரூ.4574.20 கோடி சேர்த்து ரூ.1 லட்சத்து 30,580.12 கோடியும் தமிழ்நாடு அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
சட்டவாரியான மொத்த வரி வருவாயை பொறுத்தவரை, ஜிஎஸ்டி மூலம் 45.67 சதவீதமும், ஜிஎஸ்டி இழப்பீடு மூலம் 3.50 சதவீதமும், மாநில ஜிஎஸ்டி மூலம் 31.46 சதவீதமும், மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்டவை மூலம் 0.41 சதவீதமும்.
மீதம் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி மூலமும் வரி வருவாய் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கிறது. 2021-2022-இல் வரிவசூல் ரூ.11,988.83 கோடி அதிகரித்து ரூ.97,856.83 கோடி கிடைத்துள்ளது.