சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான மரபு சார் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டு மரபுசாரா பசுமை ஆற்றல் மூலங்களுக்கு உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.
அதற்குத் தேவைப்படும் மின்சார வாகனங்கள், காற்றாலைகள் ஆகியவற்றை உருவாக்கு வதற்கு அரிய மண் தாதுக்கள் (Rare earth elements) அவசியம். இவை நிலத்திலும், நீரிலும் அதிக அளவில் இருந்தாலும், தனியாகக் கிடைப்பதில்லை.
வேறு ஏதேனும் கனிமங்களுடன் சேர்ந்தே இருக்கும். இவற்றைப் பிரித் தெடுத்து தூய்மைப்படுத்துவது சிரமமான செயல். அத்துடன் இந்தச் செயல்களால் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.
விஞ்ஞானிகள் இந்த தாதுக்களைப் பிரித்தெடுக்க எளிய முறையை உரு வாக்கி வருகின்றனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டிரினிட்டி கல்லுாரி ஆய்வாளர்கள் முட்டை ஓடுகளைப் பயன்படுத்தி அரிய மண் தாதுக்களை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்துள்ளனர்.
தாதுக்கள் நிறைந்த கரைசலில் கோழி முட்டையின் ஓடுகளை விஞ்ஞானிகள் வைத்தனர். பின்பு 25 முதல் 205 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடுபடுத்தினர். வெவ்வேறு வெப்பநிலைகளில் வெவ் வேறு தாதுக்கள், ஓட்டின் உள்ள கால்சியம் கார்பனேட் மீது படிந்தன. அதிலிருந்து வேண்டிய தாதுக்களைப் பிரித்தெடுத்தனர்.
மிகவும் சாதாரண பொருளான முட்டை ஓடுகளை வைத்து சுற்றுச் சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப் பில்லாத வகையில் தாதுக்களைப் பிரித்தெடுக்கும் இந்த முறை உலகம் முழுதும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.