திருமண விருந்தில் சத்தமாக “சோறு கொண்டு வாங்க” என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை.
காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்தி ருக்கிறார்கள்.
சோறு என்பது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நம்முடன் வரு கிறது.
“பெருஞ்சோற்று உதியன்” என்ற அடை மொழியுடன் புறநானூற்றில் வேந்தர்கள் வந்து போகிறார்கள். ஆனால், திட்டமிட்டு சோறு கீழான ஒன்றாகவும், சாதம் உயர்வான ஒன்றாகவும் மாற்றப்படுகிறது.
இழிவு செய்யும் இடங்களில் மறக்காமல் சோறு எனக் குறிப்பி டப்படுகிறது. “சோத்துக்கு வழியில்லாதவர்” என பேசப்படுவதைப் பார்க்கி றோம். “சாதத்துக்கு வழியில்லாதவர்” என எழுதப்படுகிறதா? காரணம்? அதன் பின்னால் உள்ள அரசியல்.
“கல்யாண சமையல் சாதம்” என்று புகழ்ந்து பாடல் வரும். “எச்ச சோறு” என்று இகழ்ந்து வசனம் வரும். இதில் இருந்தே இதன் பின்னுள்ள அரசியலைப் புரிந்து கொள்ளலாம்.
உச்சக்கட்டமாக வீடு களில் பிள்ளைகளை திட்ட “தண்டச் சோறு” என்ற இடம் வரை வந்து நிற்கிறது. எங்காவது “தண்ட சாதம்” என்று சொல்வதுண்டா?
சாதம் என்ற சொல், பிரசாதம் என்ற சொல்லின் விகுதி. பிரசாதம் என்பது உயர்வான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கோயில்களில் பூசனைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தேங்காய் – பழம் போன்றவற்றுக்குப் பிரசாதம் என்று பெய ரிடப்பட்டுள்ளது. மதிப்பிற்குரிய ஒன்றாக பொது இடங்களில் பிரசாதம் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லின் சரிபாதி சாதம் என்பது போல பெயர் சூட்டுவிழா கண்டுள்ளது.
இது வெறும் வட மொழிச் சொல் – தமிழ்ச் சொல் வேறுபாட்டை அறிவதற்கானதல்ல. தமிழ்ச் சொற்களை தாழ்வான ஒன்றாக, நம் மனத்திலே பதிய வைத்து நம்மையே அச்சொல்லைச் சொல்ல முடியாமல் போகும் அளவுக்கு, மாற்று வதற்குப் பின்னுள்ள அரசியல்.
தாய்மொழியில் பேசவும் முடியாத ஒருவன், எப்படித் தாய்மொழிக்காகச் சிந்திக்கச் செய்வான்?
– கிருஷ்ணமூர்த்தி என்பவரின் எக்ஸ் தள பதிவு.
– முரசொலி, 24.6.2024
இதைப் படித்தவுடன் 1941 இல் வானொலியில் உ.வே.சாமிநாதய்யர் சொன்னது நினைவிற்கு வருகிறது.
‘ஓர் ஏழை வேலைக்கார னைப் பார்த்து, சோறு தின்றாயா?’ என்று கேட்க லாம். ஆனால், ஒரு கனவானைப் பார்த்துப் ‘போஜனம் ஆயிற்றா?’ என்று கேட்வேண்டும்.
துறவிகளைப் பார்த்து ”பிட்சை ஆயிற்றா என்று கேட்கவேண்டும்’’ என்று வானொலியில் பேசினார் உ.வே.சாமிநாதய்யர்.
எப்படி இருக்கு?
– மயிலாடன்