சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (25.6.2024) வனத்துறை மானியக்கோரிக்கைமீது உறுப்பினர்கள் முன்வைத்த விவாதத் திற்கு அந்தத் துறையின் அமைச்சர் மா.மதிவேந்தன் பதிலளித்து பேசிய தாவது:-
யானை வழித்தடங்கள் என் றால், யானை வாழ்விடங்களை இணைப்பதற்காக யானைகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் தடங்கள் என்று குறிப்பிடலாம்.வனப்பகுதிகள் இடைவெளியின்றி தொடர்ச்சியாகக் காணப்பட்ட காலத்தில் யானைகளின் நடமாட் டம், வனத்துக்குள்ளேயே இருந்து வந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன்னியாகுமரி தொடங்கி கிருஷ்ணகிரி வரை உள்ள வனப்பகுதிகள், இடைவெளி இல்லாத பரந்து விரிந்து இருந்த காலங்களில் யானைகளால் விவசாயிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் தொந்தரவுகள் இருந்ததே இல்லை.
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட விவசாய நிலங்களின் விரிவாக்கம் மற்றும் பல்வேறு கிராம மேம்பாட்டு பணிகள் நடந்த பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி பாதிப்படைந்துள்ளது. தமிழ்நாட்டின் வனப்பகுதியில் காணப்படும் யானைகளை பாது காக்க பல்வேறு முயற்சிகளை தமிழ் நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
யானைகளின் வழித்தடங்களை இணைப்பதன் மூலம் மனிதன்-யானை முரண்பாடுகளை பெரிதும் குறைப்பதற்காக நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் அறி வுறுத்தலின் பேரில் யானைகள் வழித் தடங்கள் அடையாளம் காண்பதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
யானைகளின் வழித்தடங்களை அறிய முனைவர் ராமன் சுகு மார் தலைமையில் சிறப்புக் குழுவின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. யானை நடமாட்டம் உள்ள மாவட்டம் வாரியாக அந்தந்த பகுதிக் கான யானை வழித்தடங்கள் குறித்த விவரங்களை, மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்தில் விளக்கி மக்களின் கருத்துகள் தொகுக்கப்படும். அதன் அடிப்படையில் இறுதி அறிக்கை சிறப்புக் குழுவால் முடிவு செய்யப்படும்” என்று அவர் பேசினார்.
அப்போது குறுக்கிட்டு, காங்கி ரஸ் உறுப்பினர் அசன் மவுலானா ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பினார். அதில் அவர் பேச பேரவைத் தலைவர் அப்பாவு அனுமதி வழங்கினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:-
அசன் மவுலானா:- யானை வழித் தடங்கள் பற்றி அமைச்சர் பேசுகிறார். யானை வழித்தடங்களை அழித்து கட்டடங்கள் கட்டப்படுகின்றன. சாலையை யானைகள் கடக்கும் பகுதிகளில், யானை கடக்கும் பகுதி என்ற பலகைகளை வைப்பதில்லை. கோவையில் ஈஷா யோகா மய் யத்தை யானை வழித்தடங்களை மறித்து கட்டியுள்ளனர்.
அமைச்சர் மா.மதிவேந்தன்:- யானை வழித்தடங்களைப் பற்றிய முழு அறிவு இன்னும் யாருக் கும் இல்லை. இன்னும் பல விஷயங் களை தெரிந்துகொள்ள வேண்டும். இதை தெளிவுபடுத்தும் வகையில் அதுபற்றி நான் பேசுகிறேன். யானை வழித்தடங்கள் எந்த நிலை யில் உள்ளன? என்பதை அறிய வேண்டும். அடுத்தகட்டமாக அது பற்றிய மக்களின் குறைகேட்டு, அதன் பின்னர்தான் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
குழு அமைக்கப்பட்டு மிகத் தீவிரமாக ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, மக்கள் குறை கேட்டு அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப் படும். எனவே அவசரப்பட்டு எதை யும் நான் கூறவில்லை.
அவை முன்னவரான அமைச் சர் துரைமுருகன்:- யானை வழித் தடங்கள் பற்றி பத்திரிகைகளில் பல செய்திகள் வருகின்றன. வனப் பகுதிகளில் விடுதிகள் அமைத்துக் கொண்டு யானைப் போக்குவரத்தை தடுக்கின்றனர் என்பது பற்றி அசன் மவுலானா கேட்கிறார்.
உங்கள் அனுமதியைப் பெற் றுத்தான் ஈஷா யோகா அந்த இடங்களை பிடித்தார்களா? யானை வழித்தடங்களை தடுத்திருக்கிறார்கள் என்பது உண் மையா? காப்புக்காட்டில் கை வைத்திருக்கிறாரா? இல்லையா? என்பதற்குத்தான் அவர் பதில் கேட்கிறார்.
அமைச்சர் மா.மதிவேந்தன்:- யானை வழித்தடங்கள் பற்றி பொதுவாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஈஷா பற்றிய முழு விவரங்களை தெரிந்த பிறகுதான் நான் பதில் சொல்ல முடியும். தெரியாமல் அறைகுறையாக நான் எதையும் சொல்லக்கூடாது. அதுபற்றி ஆய்வு செய்த பிறகுதான் விதி முறைகளை மீறியிருக்கிறார்களா? தேவையான அனுமதியை பெற்றுள்ளார்களா? என்பதை பார்த்துவிட்டு விளக்கம் அளிக்கிறேன்” என்று அவர் கூறினார்.
ராமேஸ்வரம் தீவில் ரூ.15 கோடியில் சூழல் சுற்றுலா மேம்பாடு
மேலும், வனத்துறை அறிவிப்பு களை அமைச்சர் டாக்டர் மா.மதி வேந்தன் வெளியிட்டார். அதில், மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத் தில் உள்ள சமூக அமைப்புகள் மூலம் ராமேசுவரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும்.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வன உயர்பயிற்சியக மரபியல் பிரிவில், பூர்வீக இன விதை பெட்டகம் ரூ.10 கோடியில் நிறுவப்படும். வனப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், காடுகளை மீட்டெடுப்பதில் புதிய பரிமா ணங்களை கொண்டு வருவதற்கும், புதிய தமிழ்நாடு மாநில வனக் கொள்கை – 2024 வெளியிடப்படும்.
டாக்டர் ஏஜேடி ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது ரூ.25 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ.1 கோடியில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும். இது இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்துக்கு அடுத்தபடியாக அமையும் 2ஆவது இரவு வான் பூங்காவாக இருக்கும்.
முதலைகள் பாதுகாப்பு மய்யம்: தமிழ்நாட்டின் கடற்கரைக்கு ஆண்டுதோறும் ஆலிவ் ரிட்லி (சிற்றாமை) ஆமைகள் மற்றும்பச்சை ஆமைகள் வருகின்றன. இந்த ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுக்கு ரூ.1 கோடி யில் ஆமை பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
தஞ்சாவூர் கோட்டம் கும்பகோ ணம் சரகம் அணைக்கரையில் முதலைகள் பாதுகாப்பு மய்யம் ரூ.2.50 கோடியில் அமைக்கப்படும்.கூடலூர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆர்கிடேரியங்கள் ரூ.3 கோடியில் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில் உள்ள 40 மலை யேற்ற வழித்தடங்களை தமிழ்நாடு அரசு கண்டறிந்துள்ளது. அந்த வழித் தடங்களுக்கான வரைபட புத்தகங்கள் உருவாக்கப்படுவதுடன், அத்தடங்களின் அடிப்படை வசதிகள் ரூ.4 கோடியில் மேம்படுத் தப்படும் என மொத்தம் 10 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.