திருக்கழுக்குன்றம், ஜூன் 25- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் வேதகிரீஸ்வரர் கோவிலின் மலையடிவாரத்தில் பக்தவத்சலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் வளாக பகுதியில், தனியார் அமைப்பினர், சமய நிகழ்ச்சிகள், யோகா உள்ளிட்ட வற்றை, கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நடத்துவர். பன்னாட்டு யோகா நாளை முன்னிட்டு, தனியார் அமைப்பினர், 23.6.2024 அன்று காலை கோவில் வளாகத்தில் யோகா நிகழ்த்த, நிர்வாகத்திடம் அனுமதி கோரினர்.
கோவில் நிர்வாகம் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததாக தெரிகிறது. ஆனாலும், நிகழ்வில் பங்கேற்குமாறு, 22.6.2024 அன்று இரவு, சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்பட்டது. பிரச்சினை எதுவும் ஏற்படாமல் இருக்க, கோவில் நிர்வாகத்தினர், திருக்கழுக்குன்றம் காவல்துறையினரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர், 23.6.2024 அன்று காலை 6:00 மணிக்கு, கோவிலின் நுழைவாயில் பகுதிகளில் முகாமிட்டனர். கிழக்கு வாயிலை மட்டும் திறக்கப்பட்டு, மற்ற வாயில்கள் மூடப்பட்டன. ஆனால், எந்தவித அத்துமீறல் முயற்சியும் நடக்காத நிலையில், காவல் துறையினர் திரும்பிச் சென்றனர்.
மகளிருக்கான சிறப்பு
உடற்பயிற்சிக் கூடம் விரைவில் திறப்பு
சென்னை, ஜூன் 25- சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
மகளிருக்கு தனியாா் சாா்பில் பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பெண்களிடையே உடற்பயிற்சியின் முக்கி யத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்பட்டு வருகிறது.
தனியாா் உடற்பயிற்சி கூடத்தில் அதிக கட்டண வசூல் காரணமாக நடுத்தர மற்றும் விளிம்பு நிலையில் உள்ள பெண்களால் அணுக முடியாத நிலையுள்ளது.
இதற்கு தீா்வு காணும் வகையில் மாநகராட்சி சாா்பில் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சி கூடங்கள் அனைத்து வாா்டுகளிலும் அமைக்கப்படும் என நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சி அறிவித்தது.
இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி பகுதிகளில் ஆண்களுக் கான உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதேபோல, மகளிருக்கு வாா்டுக்கு ஒரு உடற்பயிறச்சி கூடம் எனும் வீதத்தில் ‘எம்பவா் உடற்பயிற்சி கூடம்’ எனும் பெயரில் அமைக்க முதல்கட்டமாக ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டது.
தற்போது இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இந்த உடற்பயிற்சிக் கூடங்கள் பயன்பாட்டு கொண்டுவரப்படும் என்றனர்.