சேலம், ஜூன் 25- சாராயம் விற்ற அ.தி. மு.க. பிரமுகரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60 பேர் பலியானார்கள். இதையடுத்து சாராயம் விற்பவர்களை கைது செய்வதற்கான தீவிர வேட்டையில் காவல்துறையினர் இறங்கினர். அந்த வகையில் சேலம் மாவட்டம் தலை வாசல், ஆத்தூர் பகுதிகளில் காவல்துறையினர் அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சாராய ஊறல் போட்டவர்களையும், சாராயம் விற்றவர்களையும் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வன் மகன் சுரேஷ் என்ற சுரேஷ்குமார் (வயது 40) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அ.தி.மு.க.பிரமுகர்
அவரிடம் சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவர், ஆத்தூர் ரூரல் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார். காவல்துறையினர் சுரேஷ் மீது சாராயம் விற்றதாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கைதான சுரேஷ், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க.மேனாள் விவசாய அணி இணை செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுரேஷ் மீது சாராயம் விற்றதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.