பொருளாதாரச் சூழல் – வினையும் விளைவுகளும்

வீ.குமரேசன்
பொருளாளர், திராவிடர் கழகம்

விலைவாசி மற்றும் நிதிநிலை உறுதித்தன்மையை உறுதி செய்வதே ரிசர்வ் வங்கியின் முக்கியப் பொறுப்பாகும். கடந்த ஜூன் 5 முதல் 7 – ஆம் நாள் வரை நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் பணமதிப்புக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee) கூட்ட நடவடிக்கைகள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் குழுவானது, ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள் மற்றும் பிற நிறுவனங்களை – உயர் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த பொருளாதார வல்லுநர்களை அங்கத்தினர்களாகக் கொண்டதாகும். ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு முறை நடத்தப்படும் இந்தக் கூட்டத்தில் நாட்டில் நிலவிடும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு பணப் புழக்கத்தை நெறிப்படுத்திடவும், நிறுவனங்கள் விதிக்கும் வட்டி விகிதங்களை மாற்றியமைப்பது குறித்தும் முடிவுகளை மேற்கொள்வது இந்தக் குழுவின் முக்கிய நோக்கங்களாகும். இவை பரந்த நிலையில் உயர்மட்டப் பொருளாதாரம் (Macro economics) சார்ந்த முடிவுகளாகும். இப்பொழுது நடைபெற்றுள்ள பண மதிப்புக் கொள்கையில் ரெப்போ விகிதத்திலும் எந்த மாற்றமும் இல்லை. கடந்த எட்டுக் கட்ட நடவடிக்கைகளிலும் இதில் மாற்றம் செய்யப்படவில்லை. மார்ச் 2022-இல் 4 விழுக்காடு விதமாக இருந்த நிலையிலிருந்து உயர்த்தப்பட்ட 6.5 விழுக்காடு என்ற அளவிலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ரெப்போ விகிதம் மாறாமல் இருப்பது எதனால்? நாட்டு பொருளாதார நிலைமை நன்றாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா?
திட்டமிட்டபடி பணவீக்கம் இருக்க வேண்டிய 4 விழுக்காடு அளவிற்கு அதிகமாகவே நீடிக்கிறது. விலைவாசி ஏற்றம் எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை. இந்தச் சூழலில் ரெப்போ விகிதத்தை மாற்றிடுவது உசிதமல்ல என ரிசர்வ் வங்கி கருதியிருக்கக்கூடும்.
* ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாததால், வங்கிகள் விதிக்கும் கடன் வட்டி விகிதத்திலும், வைப்புத் தொகைக்கு வழங்கிடும் வட்டி விகிதத்தில் பெரிய மாற்றம் ஏற்படாது. மாற்றத்தினைக் கொண்டு வருவது சரியான வர்த்தகச் செயல்பாடாக இருக்க முடியாது. வட்டி விகிதத்தை மாற்றுவது நன்மையைவிட அதிக தீமை தருவதாகவே அமையும் என ரிசர்வ் வங்கி கருத்துத் தெரிவித்து உள்ளது.
*  பண வீக்கம் மட்டுப்படாமல் இருப் பதற்கு முக்கியக் காரணமாக இருப்பது உணவுப் பண வீக்கம் (Food inflation) குறையாததே. உணவுப் பொருள்களின் விலை குறையவில்லை. கிராக்கிக்கும் (Demand) வழங்கலுக்குமான (Supply) இடைவெளி குறையவில்லை. நடப்பு பருவகாலம் சரியாக அமைந்து வேளாண்மை விளைச்சல் நல்லபடியாக இருந்தால் உணவுப் பணவீக்கம் குறைந்து நாட்டு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
* ஒட்டு மொத்தத்தில் நாட்டின் முன்னேற்றப் பாதையில் பெரிய முன்நகர்வு நடந்திடும் சூழல் இல்லை என்பதையே ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பணமதிப்பு கொள்கை குழு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

பொருளாதாரம், நிதியியல் அறிவோம்!
பணவீக்கம்: பணவீக்கம் (inflarion) என்பது வணிகப் பொருட்களின், சேவைகளின் விலை ஏற்றத்தில் காணப்படும் விகிதமாகும். பணவீக்கம் என்ற நிலையினைப் போலவே பணவாட்டம் (deflation) என்பதுவும் நிகழும். பண வீக்கத்திற்கு எதிரான நிலை பணவாட்டமாகும். வணிகப் பொருட்களின், விலைகளின் – விலை இறக்கத்தில் காணப்படும் விகிதமாகும். பண வீக்கமும், பணவாட்டமும் ஒரு நாணயத்தின் எதிரெதிரான பக்கங்கள்.
நாட்டுப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்திடும் நெறிப்படுத்திடும் பொறுப்பிலுள்ள ரிசர்வ் வங்கி எப்பொழுதும் விலைவாசி மாற்றங்கள்மீதும், நிலவிடும் பணவீக்கம் அல்லது பணவாட்டம் ஆகிய நிலைகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்தக் கவனத்தின் வெளிப்பாடே, உயர்மட்ட அளவில் ரிசர்வ் வங்கி நெடும் விவாதம் மற்றும் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின் வெளியிடும் பணக் கொள்கை. அதன் மூலம் நிறுவனங்கள் விதித்திடும் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி நெறிப்படுத்தி வருகிறது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி வைத்து நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை திறம்பட வைத்திருப்பது ரிசர்வ் வங்கியின் தலையாய கடமையாகும்.

வட்டிவிகிதம்: வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவன வட்டி விகிதங்களில் (டெபாசிட் & கடன்கள்) மாற்றத்திற்கு உட்பட்டது. நன்கு ஆலோசித்து வட்டி விகிதங்களில் மாற்றத்தினை உருவாக்கவோ, நிலைத்து நீட்டித்திடவோ முடியும்.
ரெப்போ விகிதம்: வங்கிகள் தங்களது பணக் கையிருப்பு குறைவாக இருக்கும்பொழுது ரிசர்வ் வங்கியிடம் குறுகிய காலக் கடனாக பெறும். இந்தக் கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம்தான் ரெப்போ (Repo rate) விகிதம் என்பதாகும். அதிகப் பணக் கையிருப்பு இருக்கும்பொழுது வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெற்றுக் கொள்ளும். இந்தக் கடனுக்கு விதிக்கப்படுவது மீள்ரெப்போ விகிதம் (Reverse Repo rate) ஆகும். இந்த இரண்டு வகையான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி உள்ளது. விதிக்கப்படும் வட்டி விகிதத்தைப் பொறுத்து கடன் வழங்குவது கூடுதலாகவோ, குறைவாகவோ ஆகிடும் வாய்ப்பு ஏற்படும். இந்த வட்டிவிகித நிலையால் பணப்புழக்கம் கட்டுக்குள் வைக்கப்படும்.

வட்டி விகித இடைவெளி: வட்டிக்குக் கடன் வாங்குவது ஒரு வர்த்தக செயல்பாடே. வங்கிகள் தாங்கள் பெற்றிடும் வைப்புத் தொகைக்கு குறைந்த அளவு வட்டியும், வழங்கிடும் கடன்களுக்கு விதிக்கும் வட்டி விகிதம் கூடுதலாகவும் இருக்கும். இந்த இரண்டு வகை வட்டி விகிதங்களுக்கு உள்ள இடைவெளிதான் லாபகரமான நிதி நிறுவன செயல்பாட்டை நிர்ணயிக்கும் எந்த நிதி நிறுவனத்திற்கும் வட்டி விகித இடைவெளி அதிகமாக இருந்தால் அதிக லாபமும் – இடைவெளி குறைந்திருந்தால் குறைந்த லாபமும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். மேலும் நிறுவனங்கள் ஈட்டும் லாப/நஷ்டங்கள் இந்த வட்டி விகித இடைவெளியினைத் தாண்டி பிற காரணியங்களையும் சார்ந்திருக்கும். மேற்கண்ட பொருளாதார காரணீயங்களுக்கு பொதுவெளி சந்தை நிலவரத்தைப் பொறுத்து விதிகளில் மாற்றங்கள் ஏற்படும். விதிகள் இருப்பதாலேயே மாற்றம் தேவையென்பது கட்டாயம் இல்லை என்ற புரிதலுடன் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *