இன்று சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் அவர்களின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் (1931). உத்தரப்பிரதேசம் அலகாபாத் சமஸ்தானத்தின் மன்னருக்கு மகனாகப் பிறந்த விசுவநாத் பிரதாப் சிங் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகநீதிக்காகத் தன் பிரதமர் பதவியை இழந்தவர்.
சமூகநீதிக்காக நூறு பிரதமர் நாற்காலிகளையும் இழக்கத் தயார் என்ற பெருமகன் அவர். திராவிடர் கழகத்தின் மீதும் அதன் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்மீதும் பற்றும் பாசமும் கொண்டவர்.
அன்னை மணியம்மையார் சிலையைத் திறந்து வைத்தவர் (1.10.1994). திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடத்தை திறக்க தம் துணைவியாருடன் வருகை தந்து மகிழ்ந்தவர். (23.12.1992)
ஹிந்தியில் அவர் எழுதிய கவிதை நூலை தமிழாக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்தது திராவிடர் கழகமே. அந்த நூல் வெளியீட்டு விழாவைத் திருச்சிராப்பள்ளியில் நடத்தியதும் திராவிடர் கழகமே. அந்த நூல் மூலம் கிடைக்கும் வருவாயை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அளிப்பதாக அறிவித்தார் என்றால் அவரின் ஆழமான உள்ளன்பைப் புரிந்து கொள்ளலாம்.
அந்த விழாவில் அவர் ஆற்றிய உரையில் தெறித்த சமூகநீதி ஒளி முத்துகள் காலங் கடந்தும் ஒளி வீசக் கூடியவை.
“இந்த நாட்டிலே இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை – சூத்திரன் என்று சொல்லப்படுகின்ற பிற்படுத்தப்பட்ட மக்களை – வருணம் என்று சொல்லக் கூடிய ஜாதி அமைப்பு அவர்களுடைய உள்ளங்களிலே விலங்கை மாட்டி – அவர்களை நடமாடும் வெறும் எந்திர மனிதர்களாக்கியது. அதனால்தான் தந்தை பெரியார் சுயமரியாதை என்ற ஆணியை அந்த ஜாதி அமைப்பின் தலையைப் பார்த்து மிகச் சரியாகவே அடித்தார்கள்.
நாம் 400 ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்றுக்குச் செல்வதைவிட, 4000 ஆண்டுகளுக்கு முன்பு கைபர் போலன் கணவாய் வழியாக நாட்டுக்குள் படையெடுத்து அங்கே உருவாக்கி வைத்த அடிமைத்தனம் ஒழிந்தாலொழிய பிரச்சினைக்குத் தீர்வே இல்லை.
மண்டல் அமலாக்கம் என்பது வெறும் சம்பளத்திற்கான வேலை வாய்ப்பு மட்டுமல்ல; அதிகார வர்க்கத்தில் நமக்குப் பங்கு கிடைக்க வேண்டும் என்பதுதான்.
ஏனென்றால் சாதாரணமான ஏழை மக்களுக்கான “ரேசன்கார்டு” கிடைப்பதைக்கூட முடிவெடுப்பது அதிகார வர்க்கம்தான். எனவேதான் மண்டல் அமலாக்கம் என்பது அதிகாரப் பங்கீடு என்கிறோம். எனவே திராவிடர் கழகத்தை எங்களோடு ஒப்பிட மாட்டேன். ஏனென்றால் அது அரசியலிலே ஈடுபடக் கூடிய இயக்கமல்ல; ஆனால் அரசியலில் ஈடுபடுகிற கட்சிகளில் எங்களுடைய ஜனதா தளம்தான் கட்சிப் பொறுப்புகளில் 60 சதவிகிதத்தை ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதே போல நாட்டின் அனைத்து அதிகார மட்டத்திலும் ஒதுக்கீடு செய்யப்பட்டாலொழிய நாட்டில் முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
வீரமணி அவர்களே, உங்களை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் இங்கே இருக்கக்கூடிய மக்களுக்குக் கல்வியை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். எதன் மூலமாக இந்தச் சமுதாயத்தை உயர்த்த முடியுமோ, அந்த மூலத்தைத் தொட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் உங்களுடன் பணியாற்றக் கூடியவர்களும் ஒரு அடித்தளமானப் பணியைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஏனென்று சொன்னால் புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது – மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்யக் கூடிய பணியைவிட உயர்ந்த பணிகளை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். எனவே உங்களைப் பாராட்டுகிறோம்.
அரசியலிலே எனது நண்பர் ராம்விலாஸ் பஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியைப் பெறுகிறேன். அதேபோல, சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே, உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்” என்று உள்ளந்தொட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தினார். நமது சமூகநீதிக்காவலர் வி.பி. சிங் அவர்கள் –
தந்தை பெரியார் பற்றி வி.பி.சிங் அவர்களின் கணிப்புதான் என்ன?
“Minds are changed by social reforms and social reformers, like periyar E.V.R. Who have revered Greater Service for Social order and Social Service than did Prime Ministers or parliamentarians” (The Hindu 29.12.1992)
“சமூக நீதிக்காகவும், சமூக மாற்றத்திற்காகவும் பெரியார் அளித்த உழைப்பும், பங்களிப்பும் பிரதமர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தவைகளைவிட அதிகம் மக்களின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணமானவர்கள் பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளே!” (‘தி ஹிந்து’ 29.12.1992) என்று சமூகவியல் கண்ணோட்டத்தோடு கணித்தவர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களிடம் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டவர் வி.பி. சிங். செய்தியாளர் பேட்டி ஒன்றில் கூறும்போது கலைஞர் அவர்கள் – ‘பிரதமர்களுள் எனக்குப் பிடித்தவர் வி.பி.சிங்’ என்று கூறியதுண்டு.
மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்தியதற்காக அதுவரை அவர் ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுத்து வந்த பிஜேபி தன் ஆதரவை விலக்கிக் கொண்டது (இன்றுவரை சமூகநீதிக்கு எதிராகத் தானே – ஆர்.எஸ்.எசும், அதன் அரசியல் வடிவமான பிஜேபியும் – செயல்பட்டு வருகின்றன).
வி.பி.சிங் பிரதமர் பதவியைத் தூக்கி எறிந்த நிலையில் தமிழ்நாட்டில் அவருக்கு சென்னை முதல் குமரி வரை மிகப் பெரிய சிகப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டு, வி.பி.சிங் அவர்களுடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் இணைந்து சமூகநீதி சங்கநாதம் செய்தனர் (1990 டிசம்பர் 8,9).
விருதுநகரில் பேசும்போது வி.பி.சிங் கொட்டிய உணர்ச்சி அசாதாரணமானது.
“இந்த நாட்டின் கோடான கோடி சூத்திரர்களில் நானும் ஒருவன்!” – என்றாரே! அரச குடும்பத்தில் பிறந்த அந்தப் பெருமகனாரின் உரை சாதாரணமானதா!
டில்லியில் பெரியார் மய்யத்தை ஆதிக்க வாதிகள் இடித்த சூழலில் பிரதமர் வாஜ்பேயி அவர்களைச் சந்தித்து வாதாடிய வி.பி. சிங் அவர்களை நாம் மறக்க முடியுமா? அன்னை மணியம்மையார் சிலையை சென்னையில் திறந்து வைத்தவரும் அவரே! (1.10.1994) கே.ஆர். நாராயணன் அவர்களைக் குடியரசு துணைத் தலைவராக முன்மொழிந்தவரும் அந்தப் பெரு மகனாரே!
சிறுநீரகம் அவருக்குப் பழுதடைந்த நேரத்தில் மாற்றுச் சிறுநீரகம் தேவைப்பட்ட சூழலில் திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்வந்த காட்சியைக் கண்டு நெகிழ்ந்து போனார் பெரு மகனார் வி.பி. சிங்.
சென்னை தியாகராயர் நகர் பிட்டி தியாகராயர் அரங்கில் திராவிடர் கழகத்தின் சார்பில் வி.பி.சிங் படத் திறப்பு விழா நடைபெற்றது. (12.12.2008)
அந்நிகழ்ச்சியில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வி.பி. சிங் அவர்களுக்குத் தலைநகரம் சென்னையில் ஒரு சிறப்பான நினைவுச் சின்னத்தை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வி.பி. சிங் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்த நமது முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் இளவல் வீரமணி சொன்னது எனக்கிட்ட கட்டளை என்றார்.
கலைஞர் அவர்களின் அந்த எண்ணத்தை சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றினார்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் செம்மாந்து நிற்கும் வி.பி.சிங் சிலையை நமது முதலமைச்சர் திறந்து வைத்து சமூகநீதிக்கான நன்றி உணர்வை வெளிப்படுத்தினார். (27.11.2023).
வி.பி.சிங் அவர்களை எண்ணினால் எண்ண அலைகள் வீசிக் கொண்டே இருக்கும். அவர் மறையவில்லை. சமூகநீதியின் சின்னமாய் நம் நெஞ்சில் நிலைக்கிறார்.
அவர் விரும்பிய சமூகநீதியின் எல்லையை எந்த விலை கொடுத்தும் தொடுவோம்! வாழ்கிறார் வி.பி.சிங்.