சென்னை, ஜூன் 25- தமிழ் மொழிக்கு தொண்டு செய்வோருக்கு கலைஞர் பெயரில் ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப் பதக்கத்துடன் புதிய விருது வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று (24.6.2024) அமைச்சர் மு.பெ.சாமி நாதன் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தொடர்பாக அத்துறையின் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலளித்துப் பேசும்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
பிற மொழித் திணிப்பால் தமிழுக்கு வந்த ஆபத்தை எதிர்த்து தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் தியாகிகளை போற்றும் வண்ணம் 2025ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25ஆம் தேதி தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு நினைவகங்களில் வீரவணக்கம் செலுத்தப்படும்.
தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளான ஜுன் 3ஆம் தேதி செம்மொழிநாள் விழாவாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.
தமிழறிஞர்களான ஆறு.அழகப்பன், ராமலிங்கம் என்ற எழில் முதல்வன் மற்றும் சோ.சத்தியசீலன், மா.ரா.அரசு, சு.பாலசுந்தரம், க.த.திருநாவுக்கரசு, இரா.குமரவேலன், கா.வேழவேந்தன் ஆகியோரின் நூல்கள் ரூ.91.35 லட்சம் செலவில் நாட்டுடைமையாக்கப்படும்.
சிறந்த நூல்களை எழுதும் நூலாசிரியருக்கான பரிசுத்தொகை ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாகவும், சிறந்த பதிப்பகத்தாருக்கான பரிசுத்தொகை ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
கவிஞர் முடியரசனுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்படும். தமிழுக்கு தொண்டாற்றுவோருக்கு கலைஞர் கருணாநிதி பெயரில் ரூ.10 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கத்துடன் புதிய விருது வழங்கப்படும்.
சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். டில்லி தமிழ்ச்சங்கத்தின் கலையரங்கத்தை புனரமைக்க ரூ.50 லட்சம் வழங்கப்படும். சென்னை காந்தி மண்டபத்தில், சுதந்திர போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாருக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவச்சிலை நிறுவப்படும்.
மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை அமைக்கப்படும். சீகன் பால்குவுக்கு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும்.
தொல்லியல்துறை இயக்குநராக பணியாற்றிய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சென்னையில் ரூ.50 லட்சத்தில் உருவச்சிலை நிறுவப்படும். அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு கோவையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச் சிலை அமைக்கப்படும்.
மேனாள் குடியரசு தலை வர் ராதாகிருஷ்ணனுக்கு திருத் தணியில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை அமைக்கப்படும். மேனாள் பிரதமர் இந்திரா காந்திக்கு சென்னையில் ரூ.50 லட்சம் செலவில் உருவச்சிலை நிறுவப்படும். விவசாயிகளின் நலன்களுக்காக பாடுபட்ட கரூர் சி.முத்துசாமிக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் உருவச்சிலை அமைக்கப்படும்.
ரெட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளான ஜூலை 7ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாளின் பிறந்த நாளான ஜூன் 1ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
அப்துல்கலாம் பிறந்தநாள்: சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளான அக்டோபர் 9ஆம் தேதி ராமாநாதபுரம் மாவட்டத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ஆம் தேதி சென்னையிலும், எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பிறந்த நாளான செப்டம்பர் 19ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத் திலும் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.