பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் அற்புதமான படைக்கலன் உள்ள ஓர் எழுத்தாயுத தொழிற்சாலை ஆகும்
விடுதலைக் களஞ்சியங்கள் தரும் பழைய வரலாறும் நாம் பெறும் புதிய பார்வையும்!
“91 என்ன எண்ணுப் பெயர்தானே?
தொண்டுக்கு அவரென்றும் முன்னத்தி ஏரே!
எண்ணத்தின் பரப்பெல்லாம் பெரியாரின் பேரே
என்றைக்கும் அவர் எம்மை தாங்கும் அடி வேரே”
என்று பாமாலை சூட்டி. வரலாற்றை அறியப்படுத்த வாழும் வரலாறாக வந்திருக்கிற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தின் நூறாவது நூலாய்வில் உரையாற்ற அழைத்தார் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம்.
1.7.2022 அன்று தொடங்கி வாரம் தோறும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு அறிவுசார் கூடலாக, அலசலாக நடைபெற்று வந்த நூலாய்வு நிகழ்வுகள் நூறைத் தொட்ட நாள் 21.6.2024 அந்நாளில் இணைய வழியில் “விடுதலைக் களஞ்சியம் தொகுப்புகள்” ‘‘பழைய வரலாறு புதிய பார்வையும்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி உரையாற்றிய நிகழ்விற்கு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலர் பாவலர் சுப. முருகானந்தம் அனைவரையும் வரவேற்றார்.
ஆசிரியரின் வியக்க வைக்கும்
வாசிப்புப் பழக்கம்!
“நடமாடும் திராவிடக் களஞ்சியமாக 80 ஆண்டுகளாக இந்தத் திராவிட இயக்கத்தைப் பற்றி முழுமையாக அறிந்து அதை நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிற ஆசிரியர்
அவர்களோடு காரில் பயணிக்கையில் ஒவ்வொரு இடத்தைக் கடக்கும்போதும் அந்த இடத்தில் வாழ்ந்த நம் தோழர்களை நினைவு கூர்ந்து சொல்வார்.. மிகப்பெரிய வரலாறாக நமக்கது கிடைக்கும்.
நம்முடைய தோழர்கள் யாரேனும் அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் வாழ்க்கையில் உயர்ந்ததைப் பற்றியும் எழுதினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து நம் தோழர்களை தலைமீது தூக்கி வைத்து கொண்டாடுபவர்.அவரின் வாசிப்புப் பழக்கம் மிகுந்த வியப்பைத் தருகிறது. காலையில் மதுரையில் அவரைச் சந்தித்து ஒரு நூலைக் கொடுத்து விட்டு மாலையில் கூட்டத்திற்கு அவரைச் சந்திக்கச் செல்கையில் அந்த நூலை பெரும்பாலும் வாசித்து முடித்து அதில் என்ன சொல்லி இருக்கிறது என்பது மட்டுமல்ல நூல் எப்படி இருக்கிறது என்பதற்கான விமர்சனமும் கொடுப்பார். நான் அவரிடம் கற்றுக் கொண்டது ,நூலில் வாசித்த முக்கியமான செய்திகளை மையினால் வரி வரியாக ஹைலைட் செய்து வைக்கும் பழக்கமாகும். மீண்டும் முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள அது உதவும்.
இத்தகைய நம் தலைவரின் உயிர் நாடி விடுதலைதான்” என்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா. நேரு தலைமையுரை ஆற்றினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் பெரியார் பற்றி பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் எழுதிய பாடலையும் ஆசிரியர் பற்றி பாவலர் சுப. முருகானந்தம் எழுதிய பாடலையும் தோழர் கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடி செவிகளில் இனிமை கூட்டினார்.
தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் தன் ஆய்வுரையை வழங்கினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் என்ற
அமைப்பு ஏன் உருவாக்கப்பட்டது?
“சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை நோக்கிய காலகட்டத்தில் வைக்கத்தில் ஜாதி தீண்டாமை பாராமை நெருங்காமை என்ற சமத்துவத்திற்கு எதிரான நிலைகளை தந்தை பெரியார் வென்று காட்டி இரண்டு அரசுகள் கேரளா அரசு தமிழ்நாடு அரசு முதலமைச்சர்கள் சந்தித்து சிறப்பாக வைக்கத்திலும் தந்தை பெரியார் நினைவிடத்திலும் நூற்றாண்டு விழா நடத்திய நிலையில் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்றெல்லாம் வந்து கொண்டிருக்கக் கூடிய சூழலில் அதையெல்லாம் வேதகால நாகரிகமாக காளை மாட்டுக்கு பதிலாக குதிரையைக் கொண்டு வந்து உள்ளே காட்டும் அளவிற்கு முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள் மீண்டும் நுழைய முயற்சி செய்யும் சூழ்ச்சிப் பொறியை முறியடித்து தங்களுடைய எழுதுகோலை எல்லாம் போர்க்கருவிகளாக ஆக்கக்கூடிய சிந்தனையாளர்கள், பொழுது போக்குக்காக அல்ல பொழுதை எப்படிப் போக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக பொழுதை எப்படி நகர்த்திப் பயனுற வேண்டும் என்று எடுத்துக்காட்டுவதற்காக அமைக்கப்பட்டது தான் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் என்ற அற்புதமான ஒரு படைக்கலன் உள்ள ஒரு எழுத்தாயுத தொழிற்சாலை ஆகும்.”
உங்களைத் தவிர உறவுகள் வேறில்லை
என நினைப்பவன்!
“அத்தகைய பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தை அருமையாக முனைவர் நேரு சிறப்பாக அத்தனை தோழர்களின் ஒத்துழைப்போடு, வருகின்றவர்களை எல்லாம் வரவேற்று இளைஞர்களெல்லாம் பெரிய அளவிற்கு தலை சாய்ந்த கதிராக வரக்கூடிய வாய்ப்புகளை உருவாக்குவது போல நல்ல பயிற்சி கொடுக்கிற வகையில் இந்த 100 நிகழ்வுகளை சலிப்பில்லாமல் சங்கடமில்லாமல் நடத்தி சரித்திரம் படைத்திருக்கிறார்கள். நெஞ்சம் நிறைந்த பாராட்டை இங்கே திரண்டிருக்கக்கூடிய அத்தனைத் தோழர்களுக்கும் அதைக் கண்டு மகிழக் கூடிய ஒருவனாக, உங்களில் ஒருவனாக, உங்களுக்காக இருக்கக் கூடிய ஒருவனாக உங்களைத் தவிர வேறு யாரும் உறவுகள் கிடையாது என்று கொள்கை உறவுகளையே அதிகம் நினைக்கக்கூடிய ஒருவனாக நின்று உங்களுக்குப் பாராட்டு சொல்லுகின்ற வாய்ப்பாகத்தான் இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது.
இங்கு நல்ல நூல்களை எடுத்துக்காட்டுவதோடு நல்ல எழுத்தாளர்களையும் அடையாளம் காட்டுகிறார்கள். கருத்து மழை பொழியக்கூடிய இந்த நூல் நிகழ்ச்சிகளிலே புதுப்புது விளைச்சல்களைக் கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். பல பேருக்கு முதலில் எழுத முடியுமா பேச முடியுமா என்னும் தயக்கம் இருக்கும். ஆனால் முடியும் என்று தான் இந்தத் தொடர்ச்சியான நிகழ்வுகள் காட்டுகிறது. ஏற்கனவே எழுத்துப்பணியில் வெற்றி பெற்றிருக்கிறவர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தி அதனுடைய ஆழ அகலம் நீளம் சிறப்புப் பரிமாணங்களை எல்லாம் எடுத்து சொல்லக்கூடிய அற்புதமான நல்ல பணியை 100 கூட்டங்கள் வாயிலாக சிறப்பாக செய்தமைக்காக உளமார்ந்த நன்றியை- பாராட்டைத் தெரிவிக்கிறேன், பெருமைப்படுகிறேன்.”
தோல்வியைக் கைதூக்கி விட்ட பெரியார்!
விடுதலைக் களஞ்சியம் என்பது மற்று நூல்களை விட மாறுபட்ட ஒன்று. மற்ற நூல்கள் ஒரு கருத்தை மய்யமாக வைத்துச் சொல்வது. இதுவோ ஒரு அரசியல் ஆவணம். 1937 காலத்தில் நம்மில் பலர் பிறக்காதவர்கள். அப்போது அரசியல் எப்படி இருந்தது என்பது நமக்குத் தெரியாது. நீதிக்கட்சிக்கு அரசியலில் தோல்வி ஏற்பட்ட சூழல். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு வெற்றிக்கு உரிமை கொண்டாடக் கூடியவர்கள் ஏராளம் பேர்; தோல்வி என்பது ஒரு அனாதை அதை யாரும் நெருங்க மாட்டார்கள் என்பதாகும் . ஆனால் தந்தை பெரியார் அதிலும் மாறுபட்டு தனித்தன்மை உடையவர். மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்து வளர்த்து ஆளாக்கி அவர்களுக்கு தங்களுடைய முகப்பெழுத்துகளையே வைத்தார்கள். அதுபோல விடுதலை ஏடு கைவிடப்பட்ட குழந்தையாக இருந்த நேரத்திலே எடுத்து நடத்தியதோடு ,இப்படிப்பட்ட ஏடுகள் இல்லாததால் தான் நீங்கள் தோற்றீர்கள் என்று பலரையும் சிந்திக்க வைத்தார். வேகமாகப் போராடு என்று களத்தில் நிற்கக்கூடிய வீரனுக்கு ஒரு பாடம் போல கற்றுக் கொடுத்தார். இந்த வரலாற்றுக்குப் பின்னால் இருக்கிற தத்துவம் தான் நமக்குப் பாடம். இது புதினம் அல்ல. பல சகாப்தங்களை எப்படி மாறி இருக்கிறது; பல படையெடுப்புகளை எப்படி வென்றிருக்கிறோம் எனும் ஆவணங்கள்.
பெரியார் எழுதிய கடிதம்!
‘வியர்வையைக் கொடுத்ததோடு இரத்தத்தையும் கொடுத்து இரவெல்லாம் இதைக் காப்பாற்ற பாடுபட்டேன். காலையில் 7 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு சென்றிருக் கிறேன்’ உலகப் பொருளாதார நிபுணராக புகழ்பெற்ற ஆர்.கே. சண்முகம் அவர்களுக்கு தந்தை பெரியார் எழுதிய கடிதம் உருக்கமானது.
திராவிட இயக்கம் எங்களுக்கு என்ன செய்தது என்று சில போலிகள்- கூலிகள் கேட்க வருபவர்களுக்கு முகமூடியை எடுத்து உண்மையைக் காட்டக்கூடிய அளவுக்கு ஆதாரங்கள் இதிலுள்ளது. தனக்கென்று வந்த வாழ்வைக் கூட அடுத்தவர்களுக்கு வர வேண்டும் என்று சவுந்தர பாண்டியனார் ஆதிதிராவிட சகோதரருக்கு விட்டுக் கொடுத்த வரலாறு உள்ளது.
ஆண்டிகளுக்காகப் போராடிய அரசர்கள்!
டாக்டர் டி எம் நாயர், சர்பிட்டி தியாகராயர், நடேசனார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், பனகல் அரசர் பொப்பிலியரசர் இப்படி நீதிக்கட்சித் தலைவர்கள் வரிசையாக அரசர்களாக இருந்தாலும் ஆண்டிகளுக்காகப் பாடுபட்டார்கள். அரண் மனைக்குள்ளே இல்லாமல் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்பட்டார்கள் கீழே இறங்கி வந்தார்கள் கீழே இருப்பவர்களை உயர்த்துவதற்காக வந்தார்கள். திராவிடம் என்று அடையாளப்படுத்த எண்ணினாலும் பார்ப்பனர் அல்லாதார் என்று அழைத்த சூழலில் தந்தை பெரியார் தான் அதற்கு உண்மை வடிவம் கொடுத்து அல்லாதவர்கள் என அழைக்க வேண்டாம் திராவிடர்கள் என அழைப்போம் என்று திராவிடர் கழகமாகவே பின் மாறிப்போனது. ஒரு பொதுமையைப் பெற்றது. அப்போது நீதிக் கட்சி தோற்றாலும் தோல்விக்கான காரணங்களை பெரியார் விளக்கிச் சொன்னதும் பின்னர் நாம் வென்றதும் தொடர் வரலாறு.
இந்தியாவெங்கும் ஒத்த சிந்தனைகள்!
ஒத்த கருத்துள்ள புரட்சியாளர்களை ஒன்று சேர விடாமல் மொழிப் பிரச்சனை மிகுந்திருந்த காலத்தில் மகாராஷ்டிரத்தில் ஜோதி பாபுலே இந்தச் சிந்தனைகளை முன்னெடுத்திருக்கிறார்… நீதிக்கட்சியின் தாக்கத்தால் இந்திய நாட்டில் முதன் முதலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு ஆணையாகப் போட்டு பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தவர் மன்னர் சாகு மகராஜ் .
அம்பேத்கர், வைக்கம் அவருக்கு எவ்வளவு பயன்பட்டிருக்கிறது என்பதை பெருமையாகச் சொல்லி இருக்கிறார் .அதைப் பார்த்துட்டு தான் மகத் குளத்தினுடைய புரட்சியை அவர் செய்திருக்கிறார். இப்படி எல்லாவற்றுக்கும் அடித்தளம் இருந்தாலும் ஆவணப் படுத்துவதில் சிக்கல் இருந்திருக்கிறது. இப்படிக் கொஞ்சம் இருப்பதை அகழ்வாராய்ச்சி போல எடுத்துக் கொண்டு இப்போது சொல்கிறோம். நம் தலைவர்கள் யாரெல்லாம் உயர்த்தி காட்ட வேண்டுமா அவர்களெல்லாம் மறைக்கப்பட்டு இருக்கிறார்கள். அதைத் தோண்டி எடுத்து இப்போது கொடுக்கிறோம்.
ராஜாஜிக்கு எதில் மகிழ்ச்சி…
பார்ப்பனியம் எந்த நிலையில் இருந்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தங்களுடைய தத்துவத்தை பாதுகாக்கத் தவறுவதில்லை.
சக்கரவர்த்தி திருமகன் எழுதும் போது அதற்கு எழுதிய முன்னுரையில் ராஜாஜி இப்படி எழுதுகிறார், “நான் பதவியில் இருந்ததை விட எனக்குப் பெரிய மகிழ்ச்சி இப்படி புராணங்களை எழுதுவதுதான்” என்று செல்கிறார் என்றால் இதை எல்லாம் பெரியார் தான் சரியாக அடையாளம் கண்டார்.
வரலாறு பழைய வரலாறு தான் ஆனால் புதிய பார்வை ஏன் தேவைப்படுகிறது? ஆரியம் எந்த வழிமுறையை கையாளுகிறது சூழ்ச்சி எப்படி இருக்கிறது? என்பதெல்லாம் நாம் அறிந்து கொண்டால் நமக்கு சோர்வு வராது. அதற்குத்தான் இந்த விடுதலை களஞ்சியம்.
பழைய வரலாற்றில் புதிய பார்வை!
தொகுதி இரண்டில் ஒரு கட்டுரை. கே.பி சுந்தராம்பாள் நடித்த நந்தனார் என்ற பக்திப் படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுகையில்
காங்கிரசே உயிராகக் கொண்டிருக்கும் ஆனந்த விகடன் பத்திரிகை தென்னை மரமும் எருமை மாடும் தான் படத்தின் முக்கியமான நடிகர்கள் என்று எழுதியது.
அதோடு அம்மையாரைப் பற்றி இழிவாக எழுதியது. திருமதி சுந்தராம்பாள் காங்கிரஸ் அபிமானியாக இருந்தாலும் இப்படி அவரை எழுதியது பார்ப்பனர் அல்லாதவர் என்ற ஒரே காரணத்தால் தான் என்று கண்டித்தவர்கள் தந்தை பெரியாரும் நகரத்தூதன் பத்திரிகை ஆசிரியரும்தான்.. நம்மவர்கள் எப்போதும் சூதுவாது அற்றவர்கள் அதனால் அவர்களை இஷ்டம் போல ஆட்டி பார்ப்பனர்கள் பயனடைந்து கொள்கிறார்கள் என்று எழுதினார்கள். இந்தச் சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் பொருத்திப் பார்த்தால் நமக்குக் கண் திறக்கும். ஆகவேதான் இடங்கள் மாறும் களங்கள் மாறும் உருவங்கள் மாறும் ஆனால் தத்துவங்கள்- வழிமுறை அதேதான் இருக்கும். இதைத்தான் பழைய வரலாற்றை அறிந்து புதிய பார்வை கொள்வது என்கிறோம்.
‘மைனாரிட்டிஸ் இன் த மெட்ராஸ்’ என்ற நூலில் சரஸ்வதி அம்மையார் 1916 இல் பார்ப்பனர்களின் ஆதிக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், சென்னையில் தேர்ந்தெடுக்கப்படும் பதவிகளாக இருந்தாலும் நியமிக்கப்படும் பதவியாக இருந் தாலும் இரண்டிலும் அவர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்துடன் எழுதியிருக்கிறார். இப்படி இருந்த இடத்தில் தான் ஒரு நூற்றாண்டில் பார்ப்பனர் அல்லாதார், ஒடுக்கப்பட்டோர் அமர்ந்திருக்கிறார்கள். இதுதான் சுயமரியாதை இயக்கத்தின் வெற்றி. பல்வேறு பிரச்சாரக் கருவிகளை வைத்திருந்த போதும் ஒரே ஒரு விடுதலை, ஒரே ஒரு குடியரசு, ஒரே ஒரு பகுத்தறிவு, ஒரே ஒரு திராவிட நாடு இப்படிப் பட்ட பத்திரிகைகளால் தான் இந்தக் கருத்துகள் வளர்ந்தது. எனவே இது ஒரு தகவல் களஞ்சியம் அல்ல; வந்த வரலாறுகளைச் சொல்லி வருகின்ற சோதனைகளை எதிர்கொள்வதே இதன் நோக்கமாகும்” என தன் ஆய்வுரையை முன்வைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் .
நிகழ்வின் இறுதியாக “ஆசிரியர் விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்றப்பின் விடுதலை மின்னிதழாகவும் எட்டுப்பக்க அளவிலும் விடுதலை மலர்கள் மற்றும் காலண்டர்கள் ஆகியவற்றின் தொடர்ச்சியும் விடுதலை ஞாயிறு மலர் தொடக்கமுமென்று பல வகைகளிலும் மேலும் மேலும் காலத்திற்கேற்ப மெருகு கூட்டி வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
எந்த ஒன்றிலும் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்று தான் எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். அவர் ஒரு அறிக்கை கொடுத்தால் அதில் நாம் கடந்து வந்த வரலாறு முழுவதுமாக இருக்கும் நாம் செல்ல வேண்டிய பாதையும் தெள்ளத் தெளிவாக இருக்கும்.
அன்றாடம் நம்மோடு விடுதலை இதழ் வழி உரையாடி நம்மை வழிநடத்துகிற ஆசிரியரின் அயர்விலா உழைப்புக்கு நன்றி தெரிவிப்போம்” என்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் ம.கவிதா நன்றி கூறி முடித்தார்.
நிகழ்வில் திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணை பொதுச்செயலாளர்கள் இன்பக்கனி, பிரின்சு என்னாரெசு பெரியார்,பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைத்தலைவர்கள் கோ.ஒளிவண்ணன், ஞானவள்ளுவன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.