‘ஒரு வரலாற்று ஆசிரியரின் வரலாறு’ என்ற அடக்கமும் ஆழமும் அமைந்த தன் வரலாற்றை, ஒப்பனை சிறிதுமிலா உண்மைகளின் உலாவாக அமைத்துள்ளார் – புதினம் போன்ற விறுவிறுப்பு வேக நிகழ்ச்சிகளின் தொகுப்பாகத்திகழும் இந்த அருமையான நூல்!
415 பக்கங்களில் சரடுகள் இல்லா சரித்திரமாகவே உள்ளதை உள்ளபடி உரையாடல் சொற்களைக்கூட சிறிதும் மாற்றாமல் அப்படியே தந்து அதன் பின் ஒளிந்துள்ள உணர்ச்சிப் புலத்தையும் அப்பட்டமாக வாசகர்கள் புரிந்து கொள்ளும்படி எழுதியுள்ளார்.
சிற்சில நேரங்களில் நீதிமன்றங்களில் இருந்து வரும் தீர்ப்புகள்பற்றி நமது நூற்றாண்டு விழா நிறைவு நாயகர் காலத்தை வென்ற கலைஞர் அவர்கள் ‘’முரசொலி’’யில் ஒரு முறை எழுதினார்.
உயர்நீதிமன்றங்களில்கூட சிற்சில வேளைகளில் வித்தியாசமான – அதிர்ச்சிகரமான (அ) நியாயத் தீர்ப்புகள் வந்து விடுகின்றன.
“அவைகள் வழங்கப்பட்ட தீர்ப்புகள் அல்ல மாறாக வாங்கப்பட்ட தீர்ப்புகள்” என்று ஒரு புதுவகையான ரகப் பிரிப்பைச் செய்தார்!
நீதிமன்றங்களில் மட்டுமல்ல – கல்வி மன்றங்களில்கூட பல்கலைக் கழகங்களில் தரப்படும் பட்டங்களில்கூட வாங்கப்பட்ட தீர்ப்பு, வழங்கப்பட்ட தீர்ப்பு என்று இருவகை பகுப்பு தேவைப்படுவதைப் போலவே, பட்டமளிப்பு விழாக்களில்கூட எப்படி வழங்கப்பட்ட மதிப்புறு முனைவர் பட்டம் – (வற்புறுத்தி)வாங்கப்பட்ட முனைவர் பட்டம் என்ற இருவகை உள்ளது என்ற உண்மைகளையும் – ஒப்பனைக்கு இடந் தராது தனது வாழ்வில் உதவியவர்கள், உதவ மறந்தவர்கள், மறுத்தவர்கள் என்ற நன்றி மறந்த அந்த நல்லவர்களைப் பற்றி எப்படி குறிப்பிடத் தவறவில்லையோ அது போலவே எனது இன்ப அதிர்ச்சிக்குரிய வாழ்க்கை நிகழ்வான அழகப்பா பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டத்தை எனக்குத் தந்த போது பின்னணியில் நிகழ்ந்தவைகளையும் இந்நூலில் பதிவு செய்ய அவர்கள் தவறவில்லை.
உண்மைகளுக்கு ஜோடனை செய்யாமல் கூறுவதே இந்தப் புத்தகத்தின் உயர் தன்மை என்பதற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டு என்பதால் அதனை அப்படியே வாசகர்கள் முன் எடுத்து வைக்க விரும்புகிறேன்.
என்றும் களமாடும் நிலையில் எனக்காக, கடமைக்காக, மாறாத மரபு நிலைக்காப்புக்காக துணைவேந்தர் முயன்றுள்ளார். இருந்தாலும் எதிலும் சமரசம் செய்யாதவர் இதில் சற்று விட்டுக் கொடுத்து தான் முதலில் எழுதி, முடிவை முற்றாக செய்து, வெற்றி பெற்றே தீர போர் முறைகளில் கையாளும் சில உத்திகளைப் போலவே, இதிலும்கூட கடைப்பிடித்து சாதித்துக் காட்டியுள்ளார்.
பட்டமளிப்பு விழா என்ற துணைத் தலைப்போடு பக்கம் 208இல் துவங்கும் அத்தகவலை அப்படியே படியுங்கள்.
“நான் அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக வந்தபின்பு பட்டமளிப்பு விழாக்கள் மூன்று நடத்தியிருக்கிறேன்
விழாவிற்கான ஏற்பாடுகளை அனுபவமிக்க அலுவலர்களும், பேராசிரியர்களும் சிறப்பாகச் செய்து முடித்தனர். முதல் பட்டமளிப்பு விழா 2001 ஏப்ரல் 19ஆம் நாள், மாநில ஆளுநரும், பல்கலைக் கழக வேந்தருமான பாத்திமா பீவி தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது பட்டமளிப்பு விழா 2002 மார்ச்சு 4ஆம் நாள் ஆளுநர் பி.எஸ். இராம்மோகன் ராவ் தலைமையில் நடைபெற்றது. பி.டி.ஆர் கமலை தியாகராசன் அவர்களுக்கும், நீதியரசர் கே. நாராயண குரூப் அவர்களுக்கும் மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மூன்றாவது பட்டமளிப்பு விழா 2003 ஏப்ரல் 4ஆம் நாள் ஆளுநர் பி.எஸ். இராம்மோகன் ராவ் தலைமையில் நடைபெற்றது. கி.வீரமணி அவர்களுக்கும், ஆர். இலட்சுமிபதி அவர்களுக்கும் மதிப்புறு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும், தினமலர் செய்தித்தாளின் உரிமையாளர் ஆர்.இலட்சுமிபதி அவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கியது குறித்து இங்கு கூற விரும்புகிறேன். ஒரு நாள், நான் சென்னைக்குச் சென்ற போது, காலை 11.00 மணி அளவில் நானும் நண்பர் மா. செல்வராசனும் பெரியார் திடல் சென்று ஆசிரியர் வீரமணியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு நாங்கள் புறப்பட்டு வெளியே வந்தோம். ஆசிரியரும் எங்களுடனேயே வெளியில் வந்தார். அங்கே நின்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, மா. செல்வராசன் என்னிடத்தில் ஆசிரியரைக் காண்பித்து, “இவருக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுய்யா!” என்று கூறினார். அதுபற்றி செல்வராசன் அதற்கு முன்பு என்னிடம் பேசியதில்லை. திடீரென்று இப்படிச் சொல்லவும் ஒரு கணம் திகைத்துப் போனேன். மறுகணம் செல்வராசன் சொல்வது சரிதான் என்று எனக்குத் தோன்றியது. உடனே நான் “சரி” என்றேன், அதற்கு ஆசிரியர், அதெல்லாம் வேண்டாங்க. என்னை விட்டுருங்க” என்றார். அதற்கு நான், “இல்லண்ணே இது உங்களுக்கு கொடுக்கிற பட்டம் இல்லை. பெரியாருக்குக் கொடுக்கிற பட்டம். அவர் இல்லாததனால இப்ப நீங்க வாங்கிக்க போறீங்க” என்று கூறினேன். பின்னர், நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம்.
நான் காரைக்குடிக்கு வந்ததும், மதுரையிலிருந்த திராவிடர் கழக உதவிப் பொதுச் செயலாளரும், உறவின் முறையில் எனக்குத் தம்பியுமான பி.வரதராசனைத் தொலைபேசியில் அழைத்து, ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பை வாங்கி அனுப்புமாறு கூறினேன். அது வந்ததும் ஆட்சிக்குழுவைக் கூட்டினேன். முன்னதாக நான் சொல்லி வைத்தது போன்று சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியரும், நண்பருமான பன்னீர்செல்வம், ஆசிரியருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அதற்கு முன்பாக ஆட்சிக்குழு உறுப்பினரும், தி.மு.க. தணிக்கைத் குழுத் தலைவருமான வழக்கறிஞர் காசிநாதன், தனியாக என் அறையில் வந்து, “ஆசிரியருக்கு டாக்டர் பட்டம் தர வேண்டாம். தலைவர் கலைஞர் உங்களைக் கோபித்துக் கொள்ளப் போகிறார்” என்று கூறினார். அந்தக் காலகட்டத்தில் தலைவர் கலைஞருக்கும் ஆசிரியருக்கும் நல்ல உறவு இல்லை, அதனால்தான் காசிநாதன் அவ்வாறு கூறினார். “அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவரிடம் கூறிவிட்டு, பல்கலைக் கழகச் சட்டப்படி ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக, தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால், கிட்டத்தட்ட பத்து மாதங்களாகியும் ஆளுநரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆசிரியருக்கு டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என்று ஆளுநருக்குக் கடிதம் எழுதியதாகக் கேள்விப்பட்டேன். நானும் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, கிண்டி ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநரின் செயலரிடம் “ஆசிரியருக்கு டாக்டர் பட்டம் வழங்க அனுப்பிய தீர்மானத்திற்கு ஒப்புதல் கொடுங்கள்; அல்லது மறுப்பதற்கான காரணத்தை எனக்குக் கூறுங்கள்,” என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். அதன்பின்பு பத்து நாட்களில் ஆளுநரின் ஒப்புதல் கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது.
உடனே, பட்டமளிப்பு விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்தேன். அனுபவமிக்க ஆசிரியர்களும், அலுவலர்க ளும் சிறப்பாகச் செய்தார்கள். அழைப்பிதழ்கள் அச்சடித்து ஊடகங்கள் உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டது. விழா நடைபெற அய்ந்தே நாட்கள் தான் இருந்தன. நான் விழா அரங்கில் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். ஆளுநரின் செயலர் சீலா பிரியா பேச விரும்புகிறார் என்று என் உதவியாளர் வந்து என்னிடம் தெரிவிக்கவும், நான் உடனே என்னுடைய அறைக்கு வந்து தொலைபேசியில் பேசினேன்.
அப்போது அவர், “தினமலர் இலட்சுமிபதிக்கும் ஒரு டாக்டர் பட்டம் கொடுங்கள்” என்று கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நான், “என்னம்மா, பட்டமளிப்பு விழாவிற்கு இன்னும் நான்கு நாட்கள் தானே இருக்கு. இப்ப எப்படி முடியும்? இலட்சுமிபதிக்குத் தனியாக ஒரு விழா நடத்தி பட்டம் கொடுத்து விடுகிறேன்.” என்றேன். “அதெல்லாம் தெரியாது. இந்தப் பட்டமளிப்பு விழாவிலேயே அவருக்கும் கொடுக்கணும். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு என்னிடம் பேசுங்கள். இல்லையென்றால், ராஜ்பவன் பக்கம் இனிமேல் வராதீர்கள்,” என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார்.
“ஏதடா வம்பாய்ப் போச்சே” என்று நினைத்தேன். ஆளுநரின் செயலர் கூறியபடி செய்யாவிட்டால், வேறு ஏதாவது பிரச்சினை செய்வார் என்று எனக்குத் தெரியும். எனவே, இலட்சுமிபதிக்கு டாக்டர் பட்டம் வழங்கும் தீர்மானத்தை ஆட்சிக்குழு உறுப்பினர்களிடையே சுற்றுக்குவிட்டு, ஒப்புதல் வாங்கினேன். அதைத் தொலைநகலி மூலம் ஆளுநருக்கு அனுப்பி அவருடைய ஒப்புதலும் வாங்கினேன். அதன்பின் பட்டமளிப்பு விழாவில் ஆசிரியர் வீரமணி, தினமலர் இலட்சுமிபதி இருவருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அழைப்பிதழ் தயாரித்து மீண்டும் அனைவருக்கும் அனுப்பினேன்.
ஒரு வழியாக பட்டமளிப்பு விழா நல்லபடியாக நடந்து முடிந்தது. அதன்பின் எனக்கு நன்றி தெரிவிக்க வந்த இலட்சுமிபதியிடம், “சார் ஓடுற ரயிலில் தாவி ஏறியவரைப் பார்த்து இருக்கிறேன். ஆனால், Take Off -ஆன விமானத்தில் தாவி ஏறியவரை இன்றைக்குத்தான் பார்க்கிறேன். இந்தியப் பல்கலைக் கழக வரலாற்றில் நான்கு நாட்களில் டாக்டர் பட்டம் வாங்கியது, அநேகமாக, நீங்களாகத்தான் இருக்கும்.” என்றேன். அவர் சிரித்துக் கொண்டே, மீண்டும் எனக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டார்.
அன்று மாலையில் காரைக்குடி VKN மாளிகையில் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. ‘வீகேயென்’ கண்ணப்பன் டாக்டர் கி. வீரமணிக்குச் சால்வை அணிவித்துப் பாராட்டினார். மேலும், அந்த விழாவில் கலந்து கொண்ட எனக்கும், தம்பி பி. வரதராசனுக்கும் சால்வைகள் அணிவித்து நன்றி தெரிவித்தார்.
பத்து நாட்களுக்குப் பின்பு, நான் சென்னை சென்ற போது, வழக்கம் போல் தலைவர் கலைஞரைப் பார்க்க அறிவாலயம் சென்றேன். நான் உள்ளே நுழைந்ததுமே, அவர் “நீ வீரமணிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தவனில்ல” என்றார். நான் பதில் ஒன்றும் சொல்லாமல் நின்றேன். என்ன சொன்னாலும், அதை மறுத்துக் கடுமையாக ஏதாவது சொல்வார் என்பதால் பேசாமல் இருந்தேன். பிறகு அவரே “பரவாயில்லைப்பா! அவர் ஒருத்தர்தான் இன்னமும் பெரியாரைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு நீ டாக்டர் பட்டம் கொடுத்தது சரிதான்!” என்று பாராட்டினார். நான் “அப்பாடா!” என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.”
இந்தத் தகவல் எனக்கு சில வாரங்கள் கழித்தே தெரிய வந்தது!
இதுதான் வழங்கப்பட்ட பட்டத்திற்கும், (வற்புறுத்தி) வாங்கப்பட்ட பட்டத்திற்கும் ஒரே மேடையில்…
வாழ்நாளில் தான் எப்போதும் எதிர்நீச்சல் என்றால் இதில்கூடவா என்னையறியாத இந்த எதிர்நீச்சல் என்ற கேள்வி எனக்குள் எழவே செய்தது!
ஆனால் அந்தக் கேள்விக்கு எனக்குள்ளே ஒரு நல்ல விடையும் கிடைத்தது!
‘உன் தலைவனைப் பின்பற்றும் தொண்டனும் அவரைப்போலவே இன்று வரை எதிர்நீச்சல் களத்தில் நிற்கையில் உண்மைத் தொண்டின் இலக்க ணத்திற்கு உன்னை உனது கொள்கை எதிரிகளே உயர்த்தி யுள்ளார்களே’’ – எவ்வளவு அருமை என்பதே அப்பதில்! பட்டத்தைவிட இத்தகவலே எனக்கு மகிழ்ச்சி அதிகம் தந்தது!