சென்னை, ஜூன் 23 ஊரகப் பகுதிகளில் மழை நீரை சேகரித்து வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் 5,000 புதிய சிறு குளங்கள் ரூ.250 கோடியில் அமைக்கப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (22.6.2024) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டார். அதில், மாநில நிதிக்குழு, ஒன்றிய நிதிக்குழு நிதியுடன் ஒருங்கிணைந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பழுதடைந்துள்ள 500 ஊராட்சி அலுவலக கட்டடடங்கள் தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.150 கோடியில் கட்டப்படும்.
10 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் தலா ரூ.6 கோடி வீதம் மொத்தம் ரூ.60 கோடியில் கட்டப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலக வளாகம் ரூ.10 கோடியில் கட்டப்படும். திருவாரூர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் திட்ட இயக்குநர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் தலா ரூ.2 கோடி வீதம் மொத்தம்ரூ.10 கோடியில் கட்டப்படும்.
ஊரக பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகளை தொடர்ந்து கண்காணித்திடவும், தரத்தை உறுதிசெய்யும் பொருட்டும் ஊரக வளர்ச்சித்துறை கள அலுவலர்களுக்கு ரூ.44 கோடியில் 480 புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
கழிவு நீர் குட்டைகள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 2,500 கிராம ஊராட்சிகளில் உள்ளமேய்க்கால் நிலங்களை பாதுகாத்து, மேம்படுத்திடும் பொருட்டு கசிவுநீர் குட்டைகள் மற்றும் மரம் நடுதல் போன்ற பணிகள் ரூ.400 கோடியில் மேற்கொள்ளப்படும். ரூ.50 கோடியில் 5,000 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் தானியங்கி முறையில் இயக்கப்படும்.
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள்
ஊரக பகுதிகளில் 10 புதிய மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.20 கோடியில் அமைக்கப்படும். 10 எரிவாயு தகன மேடைகள் ரூ.25 கோடியில் கட்டப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ரூ.168 கோடியில் 1,100 புதிய குழந்தை நேய வகுப்பறைகள் கட்டப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ரூ.60 கோடியில் பழுது பார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஊரகப்பகுதிகளில் 500 அரசு பள்ளிகளில் ரூ.100 கோடியில் சுற்றுச்சுவர் கட்டப்படும். ஊரகப்பகுதிகளில் 500 சிறுபாலங்கள் ரூ.140 கோடியில் கட்டப்படும். ஊரகப்பகுதிகளில் முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் ரூ.60 கோடியில் கட்டப்படும்.
மழை நீரை சேகரித்து…
ஊரகப்பகுதிகளில் மழைநீரை சேகரித்து வேளாண் பணிகளை மேம்படுத்தவும், நிலத்தடிநீர்மட்டத்தை உயர்த்திடவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் 5,000 புதிய சிறு குளங்கள் ரூ.250 கோடியில் அமைக்கப்படும் என மொத்தம் 15 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.