சென்னை, ஜூன் 23 தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (22.6.2024) வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் துவரை உள்ளிட்ட பிற பயறு வகைகளின் பரப்பு விரிவாக்கத்திற்கும், அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கோடை காலத்தில் காய்கறிகள் விலையினைக் கட்டுக்குள் வைக்கும் விதமாக சென்னை மாநகருக்கு காய்கறி அளிக்கக்கூடிய மாவட்டங்களில் நிழல்வலைக் குடில் அமைத்து காய்கறிகள் சாகுபடியினை ஊக்குவித்து காய்கறிகளின் வரத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 25 முன்னணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தேசிய அளவில் சிறந்த மேலாண்மை நிறுவனங்களில் பயின்றவர்களை தலைமைச் செயல் அலுவலர்களாக நியமித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வேளாண் வணிக செயல்பாடுகளை மேம்படுத்திட ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
அதிக காய்கனி வரத்துடன் செயல்பட்டு வரும் 20 உழவர் சந்தைகளில் அவற்றின் செயல்பா டுகளை மேலும் அதிகரிக்கும் விதமாக அவற்றின் கட்டமைப்பு வசதிகள் ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
தேசிய அளவிலான உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் விளை பொருட்களைப் பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் குறித்த பயிற்சிகள் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் அளிக்கப்படும்.
அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் அலங்கார மலர் செடிகள், அலங்கார தாவரங்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்கிட ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் இயங்கிவரும் காய்கறிகளுக்கான மகத்துவ மய்யத்தின் கட்டமைப்பு வசதிகள் ரூ. 1 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
கரும்பில் பயறுவகை பயிர்க ளை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்க 10 மாவட்டங்களில் 5 ஏக்கர் அளவில் 400 செயல் விளக்கத் திடல்கள் ரூ.72 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் கட்டமைப்பு வசதிகள் ரூ.25 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
டிராகன் பழத்தின் உற்பத்தி, பரப்பினை அதிகரிக்க கிருஷ்ண கிரி மாவட்டம், ஜீனூர் அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் டிராகன் பழத்திற்கான செயல்விளக்கத் திடல் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து கள் நிறைந்த உண்ணக்கூடிய வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்ற காளான் வகைகளின் வளர்ப்பானது வேளாண் செயல்பாடாக அறிவிக்கை செய்யப்படும்.. என்று அறிவித்தார்.