– தொகுப்பு: வீ. குமரேசன்
மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023-ஆம் ஆண்டு ஜூலை 21, 22, 23 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற்றது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் (International Association of Tamil Research) முன்னெடுப்பில் கோலாலம்பூரில் உள்ள பழைமையான மலேயா பல்கலைக்கழக (Universiti Malaya) வளாகத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் பன்னாட் டுத் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள், கல்வியாளர்கள் எனப் பலதரப்பட்டோரும் பங்கேற்றனர்.
மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். முதல் நாள் பொது அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் நிறைவுரையினை ஆற்றினார். வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர் தலைவரின் உரை மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும், குறிப்பாக ஏற்பாட்டாளர்களுக்கும் மன நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்தது. ஆய்வாளர்களிடையே தமிழ் மொழி குறித்த வருங்கால வளர்ச்சி வடிவமைப்பையும், சமுதாயப் பயன்பாட்டையும் பற்றிய ஒரு புத்தாக்கச் சிந் தனையை விதைத்தது என்பது பெரும்பாலான பேராளர் களின் கருத்து வெளிப்பாடாக இருந்தது. தமிழர் தலைவர் உரையாற்றுவதற்கு முன்னதாக தமிழ் மொழி குறித்து சில மாறுபட்ட கருத்துகளை மேடையில் உரையாற்றிய பெரு மக்களில் சிலர் வெளிப்படுத்திய வேளையில், அந்தக் கருத்து களுக்கெல்லாம் பதிலாக, புத்தாக்க விளக்கமாக, திராவிட அறிஞர்களின் கருத்தினைக் கொண்டு நிறைவாகப் பதில ளித்து மாநாட்டு நடவடிக்கைகளைத் தமிழர் தலைவர் நெறிப் படுத்தினார் என்பதுதான் உண்மை நிலை. மாநாட்டில் பங் கேற்றோருக்கு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழறிஞர் தனிநாயகம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை அமைத்து உலகளாவிய அளவில் தமிழ்மொழி வளர்ச்சி குறித்து கலந்துறவாட வேண்டும் என விரும்பி அதற் கான முயற்சியில் அர்ப்பணிப்போடு இறங்கிச் செயல்பட்டார்.
பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மன்றம்(International Institute for Tamil Research) தனிநாயக அடிகளாரின் முன்னெடுப்பில் 1964ஆம் ஆண்டு டில்லியில் அமையப் பெற்றது. அந்தப் பணியில் அவருக்கு உறுதுணையாக இருந் தவர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜீன் பில்லியோஜாய் ஆவார்.
தமிழ் மொழி பற்றிய பல்துறை ஆய்வுகள் பன்னாட்ட ளவில் நடைபெற வேண்டும்; அவை குறித்து ஆய்வறிஞர்கள் சந்தித்து, விவாதித்து தமிழ் மொழியின் அந்தந்தக் காலத் தேவைகள், அறிவியல் தொழில் நுட்பங்கள், கணினி வளர்ச்சி ஆகிய தளங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்று தமிழ் வளர்ச் சிக்கும், தமிழர்தம் மேம்பாட்டிற்குமான பணிகள் ஒருங்கி ணைக்கப்பட வேண்டும் என்பவைதான் அந்த மன்றத்தின் சீரிய நோக்கங்களாகும். அந்தப் பணிகளுக்கான வாய்ப்பினை வழங்குகின்ற வகையில் உலகத்தமிழ் மாநாடுகள் உலகின் பல நாடுகளில் நடத்தப்பட வேண்டும் என்று முடிவாகியது. அப்பொழுது மலேயா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பொறுப்பில் இருந்த தனிநாயகம் அடிகளாரின் முயற்சியில் முதல் உலகத் தமிழ் மாநாடு 1966ஆம் ஆண்டு மலேசியா நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. தொடர்ந்து உலகத் தமிழ் மாநாடுகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றன. அந்தந்த நாட்டு அரசாங்கங்களின் ஆதரவுடனும் பங்கேற்புடனும் நடைபெற்றன. 2ஆம் மாநாடு 1968ஆம் ஆண்டு சென்னை யிலும் (அறிஞர் அண்ணா தமிழ்நாட்டு முதலமைச்சர்), 3ஆம் மாநாடு 1970ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரிசிலும் நடைபெற்றன.
4ஆம் மாநாடு யாழ்ப்பாணத்திலும் (இலங்கை), 5ஆம் மாநாடு மதுரையிலும் (எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு முதலமைச்சர்), 1987ஆம் ஆண்டில் 6ஆம் மாநாடு கோலாலம்பூரிலும், 7ஆம் மாநாடு மொரிஷியஸ் நாட்டு போர்ட் லூயிஸ் நகரிலும் நடைபெற்றன. 1995ஆம் ஆண்டில் 8ஆம் மாநாடு தஞ்சை யிலும் (ஜெயலலிதா தமிழ்நாட்டு முதலமைச்சர்) மீண்டும் கோலாலம்பூரில் 2015ஆம் ஆண்டு 9ஆம் மாநாடும் நடை பெற்றன. 2019ஆம் ஆண்டு 10ஆம் மாநாடு சிகாகோ (அமெரிக்கா) நகரத்தில் நடைபெற்றது.
தமிழ் மொழிக்குச் செம்மொழிப் பெருமையை இந்திய அரசு வழங்கிய வேளையில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி முயற்சியில் 2010ஆம் ஆண்டு, உலகச் செம்மொழி மாநாடு கோயம்புத் தூரில் சிறப்பாக நடந்தேறியது.
தற்சமயம் 2023ஆம் ஆண்டு ஜூன் 21, 22, 23 ஆகிய மூன்று நாள்கள் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 11ஆம் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளையும் ஒருங் கிணைப்புப் பணிகளையும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ சிறீ த. மாரிமுத்து அவர்களும் அவருக்கு உதவியாக தமிழ்நாட்டைச் சார்ந்த நந்தன் மாசிலா மணி அவர்களும், ஏற்பாட்டுப் பணிகளுக்கு உறுதுணையாக ஓம்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் தியாகராஜன் அவர்க ளும் பல நிறுவனங்களும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பங்காற்றினர்.
தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்றோர்:
தமிழ்நாட்டிலிருந்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்பு கள், தமிழார்வலர்கள், கல்வியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பேராளர்களாகப் பங்கேற்றனர். மிகப் பலர் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு அரங்கங்களில் படைத்து, விளக்கி, விவாதித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிட தமிழ்நாட்டுத் தலை வர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழர் தலைவர்
திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மூன்று நாள் மாநாட்டிலும் பங்கேற்றார். முதல் நாள் நிகழ்வுகளின் நிறைவுரையினை பொது அரங்கில் (மலேசியா நாட்டு மேனாள் பிரதமர் துன் அப்துல் ரஹ்மான் பெயரில் அமைந்த அரங்கம்) ஆற்றினார்.
தமிழ் நாட்டின் மேனாள் அமைச்சர் அ.தி.மு.க. பொறுப் பாளர் வைகைச் செல்வன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் செந்திலதிபன், விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சி. மகேந்திரன், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.பாலபாரதி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) மதுக்கூர் ராமலிங்கம், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா (சட்டமன்ற உறுப்பினர்), தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் (தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்), திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ‘நக்கீரன்’ இத ழின் நிறுவனரும் ஆசிரியருமான கோபால் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக, கல்லூரி கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மேனாள் அரசு அதிகாரிகள், மாணவர்கள் பலர் மாநாட்டில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
இந்தியாவில் தமிழ்நாடு தாண்டி, பிற மாநிலங்கள், வெளி நாடுகள் – குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இலங்கை, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலிருந்தும் தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கம் கூட்டும் செயல்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்று, மாநாட்டு நடவடிக்கைகளுக்குச் சிறப்புச் சேர்த்த னர்.
தமிழர் தலைவரின் கோலாலம்பூர் வருகை
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்றிட தமிழர் தலைவர் ஆகஸ்ட் 8- அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் கிளம்பிச் சென்றார். சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு அங்கிருந்து மலேசியாவிற்கு புறப்பட்டு வந்தார். தமிழர் தலைவரின் வருகைக்கு முன்பாகவே கழகப் பொருளாளர் வீ. குமரேசன் (இக்கட்டுரையாசிரியர்), துணைப் பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் இரு வரும் ஜூலை 19 அன்றே சென்னையிலிருது கிளம்பி கோலா லம்பூர் வந்துவிட்டனர். தமிழர் தலைவரின் வருகையை முன்னமே அறிந்திருந்த மலேசியா வாழ் திராவிடர் கழகத் தோழர்கள் தலைவரை வரவேற்கும் வகையில் முன்னேற் பாடுகளைச் செய்திருந்தனர்.
தமிழர் தலைவரை வரவேற்ற மலேசிய தோழர்கள்
ஜூலை 20 அன்று மாலை 7:20 மணி அளவில் தமிழர் தலைவர், கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தின் முதலாம் முனையத்தை வந்தடைந்தார். மலேசியாவும் சிங்கப் பூரும் 1965ஆம் ஆண்டு வரை ஒரே நாடாக மலேயாவாக இருந்தன. பின்னர் தனித்தனி நாடுகளாகிவிட்டன. வெளிநாட் டிலிருந்து வருகை தந்தோருக்கான பரிசோதனைகளை முடித் துக்கொண்டு தமிழர் தலைவர் வருகை அரங்கிற்கு (Arrival) வர, அங்கு காத்திருந்த தோழர்கள் பெருமகிழ்ச்சியுடன் ஆசிரியர் அவர்களை வரவேற்றனர். உடன் உதவியாக மானமிகு இராஜராஜன் அவர்கள் வந்திருந்தார். மலேசிய மாந்த நேய திராவிடர் கழக மதியுரைஞர் ரெ.சு. முத்தையா, தலைவர் நாகபஞ்சு, மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் சா.ரா.பாரதி, பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் இளங்கோவன், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் மலேசியா கிளையின் தலைவர் மு. கோவிந்தசாமி, செயலாளர் இரா. அன்பழகன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தனர்.
மலேசிய திராவிடர் கழகத்தின் பொருளாளர் கிருஷ்ணன் மிகுந்த நெழ்ச்சியுடன் ஒரு செய்தியினைச் சொன்னார், தமிழர் தலைவரின் முதல் மலேசியா பயணத்தில், விடுதியில் தங்கும் பொழுது அவருக்கு உதவியாக தலைவருடன் ஒரே அறையில் தான் தங்கியதை பெருமையுடனும் மகிழ்ச்சியுட னும் குறிப்பிட்டுப் பேசினார். எத்தனை வெளிநாடுகளுக்குத் தமிழர் தலைவர் பயணம் சென்றிருந்தாலும், அங்கு வாழு கின்ற தமிழ்த் தோழர்களைச் சந்தித்திருந்தாலும், மலேசிய நாட்டுப் பயணமென்பது ஆசிரியர் அவர்களுக்கு முக்கியத் துவம் வாய்ந்தது; தனித்தன்மை மிக்கது; உள்ளத்திலே நெருங்கிய உறவுகளைச சந்திப்பது போன்றதாகும். காரணம் – தந்தை பெரியாரும் அன்னை நாகம்மையாரும் முதன் முதலாக 1929இல் பயணம் சென்ற வெளிநாடு மலேசியாதான். அடுத்து தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் 1954இல் மியான்மர் ரங்கூனில் உலக புத்தமத மாநாட்டில் பங்கேற்று பின்னர் வருகை தந்ததும் மலேயாதான். இந்த இரண்டு பயணங்களிலும் பெரியாரின் வருகை அங்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த தமிழர்கள் – அவர்களின் வழித் தோன்றல்களின் வாழ்க்கையிலேயே பெரும் தாக்கத்தை – மேம்பாட்டை ஏற்படுத்தியது. முதல் பயணத்தின் தாக்கத்தை இரண்டாவது பயணத்தின் பொழுது தந்தை பெரியார் அவர்களே தமிழர்தம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை, குறிப்பாக மலேசிய நாட்டு இரப்பர் தோட்டங்களில் உழைத்து வந்த தமிழர்களின் வாழ்க்கைத் தர உயர்வில் காண முடிந்தது. மேலும் ‘திராவிடர் கழகம்‘ என அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் நாடும் மலேசியாதான். அந்த வகையில் தமிழர் தலைவர் மலேசியா நாட்டிற்கு வருகை தரும்பொழு தெல்லாம் பெரியார் கண்ட தமிழர்தம் எழுச்சி, பெரும் மகிழ்ச்சி உணர்வுடன்தான் இருந்துள்ளார்கள். தமிழர் தலைவரின் இந்த வருகையின் போதும், மலேசிய இயக்கத் தோழர்களின் கொள்கை உறவு சார்ந்த – உரிமை சார்ந்த மகிழ்ச்சியில் திளைத்தார். தமிழர் தலைவரை வரவேற்க உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டாளர்களும் விமான நிலையத்தில் காத்திருந்தனர். தலைவரை அழைத்துச் செல்ல வாகனத்துடன் வந்திருந்தனர். ஏற்பாட்டாளர்களிடம், தாம் இயக்கத் தோழர்களுடன் தங்கும் விடுதிக்கு நேராக வந்துவிடுவதாகச் சொல்லிய பின் அனைவரும் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் நகருக்குக் கிளம்பிச் சென் றோம். விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேர வாகனப் பயணம்.
ஒரு மணி நேரப் பயணத்தில் கடந்த கால மலேசியப் பயண நினைவுகள்
தமிழர் தலைவருடன் தோழர்கள் வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், விமான நிலையத்தில் தம்மை வரவேற்ற பொழுது ரெ.சு. முத்தையாவும் நாகபஞ்சுவும் அளித்த மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தந்தை பெரியார் 144-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலரைப் (சமூக நீதி மலர்) புரட்டிப் பார்த்துக்கொண்டே கடந்த காலத்தில் மலேசியா வருகை தந்த நினைவுகளில் ஆசிரியர் மூழ்கிப்போனார். மலேசியா நாட்டிற்கு வந்த தனது முதல் பயணத்தையும், அந்தக் காலத்தையும் நினைவுகூர்ந்தார். “1968ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்ற வேளையில் நான் மலேசியா நாட்டிற்கு வந்தேன்.’’ அப் பொழுது மலேசிய இயக்கத்தின் முதல் நிலைத் தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு மாநாட்டில் பங்கேற்கச் சென்று விட்டனர். பிற தோழர்கள்தான் இருந்தனர்’’ என ஆசிரியர் கூறியதும், ரெ.சு. முத்தையா, ‘‘ஆமாம். நானும் அந்நாளில் தொடக்கநிலைத் தோழனாக இருந்தேன். உங்கள் நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளில் ஈடுபட்டேன்” என்று கூறி மகிழ்ந்தார். மலேசியா நாட்டு வடக்குப் பகுதியி லிருந்து கெடா, சுங்கை பட்டாணி, பினாங்கு, பட்டர் வொர்த், ஈப்போ, தாபா, கோலா லம்பூர், செலாங்கூர், மலாக்கா, ஜோகூர் என தென்பகுதி முழுவதும் பயணம் செய்து பல கூட்டங்களில் பேசியதை நினைவுகூர்ந்தார். அந்தக் காலத்தில் சந்தித்த மூத்த தோழர் களை நினைவுகூர்கையில், அவர்களது மறை விற்குப் பின் னர் சந்தித்த அவர்களது வழித்தோன்றல்களை யும் ஆசிரியர் கேட்டறிந்தார்.
பேசிக்கொண்டே, ‘சமூகநீதி நாளின் மலரின்’ பக்கங்களைப் பார்த்துக் கொண்டே, படித்துக்கொண்டே வந்த ஆசிரியர் அவர்கள். மலருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய தமிழர் களுள் மூத்தவரான டான் சிறீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களைக் குறிப்பிட்டு, அவரை இந்த முறை பயணத்தில் சந்திக்க வேண்டும்; அவரைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து அறிந்திட தோழர்களை ஆசிரியர் பணித்தார்.
கடந்த முறை, 2015இல் கோலாலம்பூரில் நடைபெற்ற 9ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்றதையும் நினைவு கூர்ந்து பேசினார்.
ஒரு மணி நேரப் பயணம் சென்றதே தெரியவில்லை.
தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். கோலாலம்பூர், ஜலன் கிளங் லாமா பகுதியில் பேர்ல் இன்டர்நேசனல்(Pearl International) விடுதியில் (மொத்தம் 23 தளங்கள் கொண்ட வளாகக் கட்டடத்தில் 5 முதல் 23 முடிய உள்ள 19 தளங்களைக் கொண்ட விடுதி) தமிழர் தலைவருக்கும் பிற சிறப்பு அழைப்பாளர்கள், பேச்சாளர்களுக்கும் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். விடுதியின் வரவேற்புத் தளத்திற்கு வந்ததும் மாநாட்டு வரவேற்புக் குழு சார்பாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் உரிமையாளர் மு. சுப்பையா மற்றும் பிற தோழர்கள் தமிழர் தலைவரை வரவேற்றனர். விடுதி அறைக்குச் சென்றதும், தோழர்களுடன் சிறிது நேரம் உரையா டியபின், அடுத்தநாள் – மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு காலை 9:30 மணிக்குப் புறப்பட வேண்டும். காலையில் சந்திப்போம் எனக் கூறி தோழர்களை அனுப்பி வைத்தார். மாநாடு நடைபெறும் மலேயா பல்கலைக்கழகத்திற்கு மூன்று நாள்களும் சென்றுவர பயண வசதி பற்றி மாநாட்டு ஏற்பாட் டாளர்கள் கேட்ட பொழுது, இயக்கத் தோழர்களுடன் வந்து விடுவதாகவும் தனியாக வாகனம் தேவையில்லை என்றும் தமிழர் தலைவரின் ஒப்புதல் பெற்று தெரிவித்துவிட்டோம்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
முதல் நாள் நிகழ்ச்சிகள் – 21.07.2023
மூன்று நாள் மாநாட்டு நிகழ்ச்சிகளும், இன்றைய மலேசியாவும் சிங்கப்பூரும் ஒன்றாக – மலேயா நாடாக இருந்த பொழுது உருவாக்கப்பட்ட மலேயா பல்கலைக்கழக (Universiti Malaya) வளாகத்தில் நடைபெற்றன. பொது நிகழ்ச்சிகளாக, தொடக்கவிழா, முக்கிய பொழிவுகள், நிறை வுரை ஆகியன மட்டும் மலேசிய நாட்டு மேனாள் பிரதமர் துன் அப்துல் ரஹ்மான் அரங்கிலும், ஆய்வுக் கட்டுரை வழங்கல், ஆய்வுப் பொழிவுகள் ஆகியன சிறப்பு விரிவுரை அரங்குகளிலும் நடைபெற்றன. முறையான தொடக்க விழா நிகழ்வு இரண்டாம் நாள் மாலையில் இருந்தாலும், மாநாட்டின் முதல் நாள் என்பதால் பொது அரங்கில் அனைத்துப் பேச்சா ளர்களும் பங்கேற்கின்ற வகையில் நிகழ்வுகள் தொடங்கின.
விடுதியிலிருந்து கிளம்பி 15 நிமிடப் பயணம், போக்கு வரத்து நெரிசல் காரணமாக 30 நிமிடங்களாகி, மாநாடு தொடங்கிடும் வேளையில் தமிழர் தலைவர் அரங்கம் வந்த டைந்தார். அங்கே நுழைவு வாயிலில் மாநாட்டு ஏற்பாட்டா ளர்கள் தமிழர் தலைவரை வரவேற்று உள்ளே அரங்கத்திற்குள் அழைத்துச் சென்றனர். மாநாட்டுச் செயலாளர் நந்தன் மாசிலாமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் பகுதியில் முன் வரிசையில் தலைவரை அமரச் செய்தார். தமிழர் தலைவரின் வருகையைப் பார்த்த மலேசிய நாட்டு முக்கிய விருந்தினர்கள், மேனாள், இந்நாள் அமைச்சர்கள், தமிழறி ஞர்கள், தமிழர் தலைவருடன் அறிமுகம் ஆகாவிடினும், அறிந்திருந்த பெருமக்கள் அனைவரும் ‘வணக்கம்‘ தெரிவித்து வரவேற்றனர். வரவேற்புரையாற்றிய மாநாட்டு ஏற்பட்டாளர்களுள் ஒருவரான ஓம்ஸ் அறக்கட்டளையின் தலைவர் மதிப்பிற்குரிய தியாகராஜன் அவர்கள் வரவேற்புரை முடிந்ததும் தமிழர் தலைவரிடம் வந்து அவர்கள் வழக்கப்படி காலைத் தொட்டு வணக்கம் தெரிவித்தார். (காலைத் தொட்டு வணக்கம் தெரிவிப்பது சுயமரியாதைக்கு எதிரானது; மரியா தையை சமத்துவநிலையில் இருந்து அளித்தால் போதுமானது‘ என தியாகராஜன் அவர்களைப் பின்னர் தமிழர் தலைவர் சந்திக்கும் பொழுது தெரிவித்தார்.)
மாநாட்டுக் குழுவின் தலைவர் பேராசிரியர் டத்தோ சிறீ டி. மாரிமுத்து தலைமையுரை ஆற்றினார்.
முதல் பேச்சின் முடிவில் சலசலப்பு
மாநாட்டில் பங்கேற்றுவிட்டு உடனே சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்ததால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் முதலாவதாக உரையாற்றினார். இயல்பாக “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற மாநாட்டு நோக்கத்தை யொட்டி அவர் உரையாற்றிய வேளையிலும், சலசலப்பு ஏற்படுத்திட வேண்டும் என்ற நோக்கில் மத அமைப்பிலிருந்து ஒருவர் குரல் எழுப்பிட முனைந்த வேளையில் இயக்கத் தோழர்கள் பரவலாக அவரிடம் நெருங்கினர். எதிர்ப்பினைப் பார்த்ததும் குழப்பம் ஏற்படுத்திட நினைத்த அவர் அடங்கி விட்டார்.
மலேசிய நாட்டு அமைச்சர் சரசுவதி கந்தசாமி
அடுத்து உரையாற்றிய மலேசிய நாட்டு அரசின் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு அமைச்சருமான மாண்புமிகு சரசுவதி கந்தசாமி அவர்கள் தனது பேச்சில், தான் தமிழ்ப் பள்ளியில் படித்துத்தான் இந்த நிலையினை அடைய முடிந்தது என்பதையும், தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு மலேசிய அரசு உறுதுணையாக இருக்கும் என்பதையும் குறிப் பிட்டார். அவர் உரையாற்றிட செல்லுவதற்கு முன்பாக முறையாக அறிமுகம் ஆகாத நிலையிலும் தமிழர் தலைவர் அருகில் வந்து வணக்கம் தெரிவித்து வணங்கி விட்டு மேடை யில் ஏறியது நெகிழ்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டையும் கடந்து, தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, தமிழ் மொழி வளம் பெற வேண்டும் என எவரெல்லாம் விரும்பு கின்றனரோ அவர்களிடையே தமிழர் தலைவரது பணிகள் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதன் அடையாள மாகவே தமிழர் தலைவர் மீது மாண்புமிகு அமைச்சர் காட்டிய மரியாதை வெளிப்படுத்தியது.
தமிழ்நாட்டுக் கல்வி பற்றிய தவறான தகவலுக்கு சுப.வீ. தந்த சரியான பதிலடி
தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற தேசியக் கட்சியின் பொறுப் பாளர் என தன்னை வெளிப்படுத்திக்கொண்ட ஒருவர் தனது உரையில் தமிழ்மொழி பற்றி அதிகமாகப் பேசிய கலைஞர், தனது ஆட்சி அதிகார காலங்களில் தமிழ்நாட்டில் தமிழ்மொழி கற்பதைக் கட்டாயப் பாடமாக்க எதுவும் செய்திடவில்லை என போகிறபோக்கில் கூறிவிட்டுச் சென்றார். அத்தகைய பேச்சு வெளிநாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு எந்த வகையிலும் தொடர்பில்லாதது.
அடுத்து உரையாற்ற வந்த திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், தனக்களிக்கப்பட்ட தலைப்பைத் தாண்டிப் பேசுவது முறையல்ல என்றாலும், அந்த மாநாட்டில் கலைஞரைப் பற்றிய தவறான தகவல்கள் பதிவாகிவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வில் உண்மை வரலாற்றை எடுத்துக் கூறினார்.
“முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு முதல மைச்சராக இருந்த தொடக்க காலக்கட்டத்திலேயே தமிழ் மொழியினை கல்வியில் கட்டாயப் பாடமாக்க அரசாணை பிறப்பித்துவிட்டார். ஆனால், அந்த ஆணையினை எதிர்த்து தமிழ்மொழிக்கு எதிரான ஆதிக்கவாதிகள் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்று விட்டனர். இன்னும் வழக்கு நிலுவையில்தான் உள்ளது.
வரலாறு குறித்து சரியான தகவலைச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை; பொய்யான தகவலைச் சொல்லாதிருக்க பலர் கற்றுக்கொள்ள வேண்டும்“ என முன்னர் பேசிய ‘தமிழருக்கு’ சரியான பதிலடியைக் கொடுத்துவிட்டு, தனது உரைத் தலைப்பான “புதுக் கவிதையில் தமிழ் மொழிப் போக்கு’ என்பது குறித்துப் பேசி அமர்ந்தார்.
(தொடரும்)