தமிழ்நாடு அரசின் உயர் கல்வி மன்றத் துணைத் தலைவராக மிகச் சிறப்புடன் கடமையாற்றும் பகுத்தறிவுப் பேராசிரியர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் ‘ஒரு வரலாற்று ஆசிரியரின் வரலாறு’ என்ற தலைப்பில் அவரே எழுதியுள்ள தன் வரலாற்று புத்தகத்தை சில நாள்களுக்கு முன் நேரில் வந்து தந்தார் – பெற்று மகிழ்ந்தேன்.
கால நெருக்கடி, கடமைகளின் அழுத்தங்களுக்கி டையேயும் விட்டு விட்டுத்தான் என்னால் படிக்க முடிந்தது.
‘தன்’ வரலாறு என்ற தனித் தன்மை படைத்த இந்த நூல் ஒரு நல்ல படைப்பிலக்கியம் ஆகும்!
எது இலக்கியம்? என்பதில் சிலர் காலத்தை வீணடித்து ஏதேதோ கூறி – பொருளுக்குள் புகாமலேயே பொருந்தா விவாதங்களில் ஈடுபடுவோர் பலர் உண்டு.
“Literature is the Best Record of thoughts”
‘‘இலக்கியம் என்பது சிறந்த கருத்துகளின் தொகுப்பு’’ என்று அமெரிக்க இலக்கிய மேதை எமர்சன் எழுதினார்!
‘‘இலக்கு + இயம் = இலக்கியம் என்பது ஒரு குறிக்கோளுடன் சிறப்பான வகையில் எழுதப்படும் கருத்தோவியமாகும். சிறந்த இலக்கியம் – இலக்கியத்தின் வரையறை அதுதான்’’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
தன் வரலாறு என்ற முறையில் எழுதப்படும் பலவும் சிறந்த இலக்கிய சீலங்களே – யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளா விட்டாலும்!
இந்த நூல் ஒப்பனை இல்லாத – நூலாசிரியர் போலவே எளிமையும் இனிமையும் – படிக்கப் படிக்கத் தெவிட்டாமல் தொடர்ந்து படித்து மகிழும் இளைஞர்கள் பலரும் முதல் தலைமுறையிலிருந்து ஒருவர் எப்படி படிப்படியாக வளர்ந்து, பல்வேறு இன்னல்கள் – இடுக்கண்கள், சமூக, பொருளாதார தடைக்கற்களைத் தாண்டி முன்னேறிய வரலாறு, ‘நம்மால் முடியுமா?’ என்று அஞ்சும் – மேல் படிப்புப் படிக்கத் தயங்கும் – பல ஒடுக்கப்பட்ட சமுதாய கிராமப்புற நகர்ப்புற மாணவர்கள் – புதிய இளைய தலைமுறையினருக்கு அவர்களது அச்சத்தை அகற்றிடும் ஓர் அரிய பாட நூல் போல் உள்ளது!
புதினம் போல் வேகமாக நிகழ்வுகளை தொகுத்துக் கூறுகிறார் நூலாசிரியர்; ஒளிவு – மறைவு சிறிதும் இல்லாமல்!
‘‘எப்படி உங்களால் இவ்வளவு உறுதியாக – ஒப்பனை இல்லாது தோலுரிக்கப்பட்ட உண்மைகளின் உலாவாக – இந்நூல் உள்ளது என்று கூறுகிறீர்கள்?’’ என்ற வினாவை ஒருவர் எழுப்பலாம்!
என் வாழ்விலும், அவரது அரிய சாதனை, அதன் பங்களிப்பை நாங்கள் யாரும் எதிர்பார்க்காமலேயே பகிர்ந்துள்ளதால் அது அப்பட்டமாக நடந்தவைகளை அப்படியே (ஒரு எழுத்தும் சொல்லும் மாறாமல், மறைக்காமல்) எழுதியுள்ளதைப் படித்தேன். பரவசமடைந்தேன் – சில நிகழ்வுகளை சிலர் இப்படிப்பட்ட நூல்களில் எழுதாது மறைப்பார்கள். இவரோ தயக்கமின்றி, உண்மைகளை தனது எளிய குடும்பம் –சிறு வயது வாழ்க்கை என்றாலும் – தான் ஒரு பகுத்தறிவுவாதி என்பதை துவக்க அறிமுகத்திலேயே குறிப்பிடுகின்றார் அச்சத்திற்குஇடம் தராமல்.
‘‘குடிப் பெருமையோ குலப் பெருமையோ, கொஞ்சம்கூட இல்லாத ஒரு சாதாரண குடும்பத்திலே பிறந்தவன் நான் என்று அறிஞர் அண்ணா அடிக்கடி கூறுவார். அதைப் போலவே நானும் குடிப்பெருமையோ குலப் பெருமையோ கொஞ்சம்கூட இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். மற்றபடி ‘‘அவர் ‘எவரெஸ்ட் சிகரம் – நான் பள்ளத்தாக்கு’ என்பதுதான் சரியான மதிப்பீடு’’ ஆகும் என்றே துவங்குகின்றார்.
(தொடரும்)