தந்தை பெரியாரவர்கள் 10.3.1954-ஆம்தேதி சின்ன கிருஷ்ணா புரத்திலும் ஏத்தாப்பூரிலும் பேசியதன் சுருக்கம் வருமாறு:-
“இந்த மாவட்ட சுற்றுப்பயணத்தில் உங்கள் ஊருக்கு வந்து உங்கள் முன்னிலையில் பேசும்படியான வாய்ப்புக் கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நேற்றைய தினம்தான் 104 டிகிரி காய்ச்சலில் கஷ்டப்பட்டேன். நேற்று மாலைதான் 101 டிகிரிக்கு குறைந்தது. இன்று காலையில் ஒன்றும் இல்லை. இப்போது சற்று 99 டிகிரி இருக்கிறது. இருந்தாலும் என் கருத்தை முடிந்தவரையில் பேசுகிறேன்.
பகவான் செயல் என்பது மறைந்து மறுமலர்ச்சி
பெரும்பாலும் கிராமங்களில் உள்ள மக்களாகிய நீங்கள் ஏதோ வேலை வெட்டி செய்துகொண்டு காலங்கழித்துக் கொண்டு இருப்பீர்கள். மற்றபடி ஏதோ திருவிழா, சாமி உற்சவம் என்பவைகளில் ஈடுபட்டு அவைகளில் உற்சாகப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் இன்று கிராமங்களில் ஒரு புதிய உணர்ச்சி தோன்றியுள்ளது. முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் ஏதோ பகவான் செயல் என்று கருதி வந்தார்கள். இப்போது பகவான் செயல் என்பது சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வருகின்றது. அவனவன் தானும் கொஞ்சம் சொந்தத்தில் முயற்சி செய்தால்தான் வாழமுடியும் என்கின்ற எண்ணமும் இப்பொழுதுதான் ஏற்பட்டு, அது மக்களிடையே பரவி வருகின்றது. இந்த நாட்டை ஏறக்குறைய இருநூறு வருட காலம் வெள்ளைக்காரன் ஆண்டான். அவன் இந்த நாட்டு மக்களுக்கு அறிவு வரும்படியாக படிப்பு முதலியவைகளை சொல்லி வந்ததனால் நம் மக்களும் சற்று புத்திசாலிகளாகிக் கொண்டு வந்தார்கள். சுமார் ஆயிரக்கணக்கான வருடங்களாகவே கூலிக்காரன் மகன் கூலிக்காரனே, மேளம் அடிக்கிறவன் மகன் மேளமடிப்பவனே, உழுபவன் மகன் உழுபவனே, பறையன் மகன் பறையனே, சக்கிலி மகன் சக்கிலியே – என்பதாகவே இருக்க வேண்டும்; அதைவிட்டு மேலே போகக்கூடாது என்கிற நிலைமையிலேயே வைத்திருந்தது. நாமெல்லாம் முன்னே எல்லாவற்றையும் பகவான் செயல் என்று இருந்தது போய், நம்முடைய சுய முயற்சியினால் நாம் வரமுடியும் என்கிற நிலை, வெள்ளைக்காரன் வந்த பிறகு. அவைகளையெல்லாம் தலையெடுக்க ஒட்டாதபடி ஆக்கினோம் என்று இன்றைய அரசாங்கமே நினைக்குது. இப்படிப்பட்ட இந்த முயற்சியைப்பற்றி திராவிடர் கழகத்தைத் தவிர வேறு யாருக்கும் கவலையில்லை.
ஜாதி அளவுக்குத்தான் படிப்பா?
ஒரு வண்ணார் மகனும், ஒரு நாவிதன் மகனும், ஒரு பறையன் மகனும், ஒரு படையாட்சி மகனும், அவனவன் ஜாதி அளவுக்குத் தான் படிக்கணும் என்று செய்துவிட்டான். ஏன்? அவனெல்லாம் படித்துவிட்டால் பார்ப்பானுக்கு இருக்கிற மரியாதை போயிடும். வெள்ளைக்காரன் இங்கே வந்த பிறகு தாழ்த்தப்பட்டவரை சட்டசபைக்கு அனுப்பி விட்டான்; தாழ்த்தப்பட்டவரை கலெக்டராக்கி விட்டான். இன்னும் மற்ற நம் ஜனங்களுக்கெல்லாம் உயர்பதவிகள் கொடுத்தான். இப்போ ஜனங்களெல்லாம் தம் மக்களைப் படிக்க வைக்கணும்னு நினைக்கிறார்கள். இதைப் பார்த்ததும் இந்த பார்ப்பன அரசாங்கம் நம் படிப்பிலேயே இந்தச் சர்க்காரை எப்படியாவது ஒழிக்க வேணும். இதை ஒழிக்க வேண்டுமானால், முதலிலே இந்தப் பார்ப்பான் ஒழியணும் ஏன்? பார்ப்பான்தானே சர்க்கார்? இவர்கள் ஏமாற்றுகிற ஒவ்வொன்றிலிருந்தும் நம் ஜனங்களைத் தப்பித்து விடுவது என்றால், அது முடியாத காரியம். ஆகவேதான் பார்ப்பானை ஒழிப்பது என்று முடிவு செய்தோம். பார்ப்பானைத் துரத்தமுடியுமா? என்று கேட்பீர்கள். வெள்ளைக்காரனையே துரத்திவிட்டோமே? அவன் கிட்டயாவது, படை, துப்பாக்கி, பீரங்கி, விமானம் இருந்தது. இந்த அன்னக் காவடிப் பார்ப்பான்கிட்ட என்ன இருக்கிறது? நீங்கள் இதற்குத் தயாராக இருக்கணும்.
புத்தியைத் தீட்ட வேண்டும்
நீங்கள் ஒவ்வொருத்தரும் பிரசாரகர் ஆகணும். அப்படி வந்தால்தான் இந்த நாட்டுக்கு நல்ல நிலை வரும். இந்த நாட்டில் பொதுவாழ்வு என்று சொல்லிக் கொண்டு இருப்பவன் அத்தனை பேரில் யாரையாவது எடுத்துக்கொண்டாலும் சரி, அவன் உள்ளத்தில் ஒன்று வைத்துக்கொள்வான்; வெளியில் ஒன்று செல்வான். இப்படியே நம்மை எல்லோரையும் காட்டுமிராண்டியாக்கி, இழி மக்களாக்கி வைத்துவிட்டார்கள். எதையும் நாம் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். நான் இந்தக் கல்வித்திட்டத்தைப் பற்றி எதிர்த்து எழுதுகிறேன் என்றால், அதை மட்டும் படித்தால் போதாது. அதை எதிர்த்து எவனாவது எழுதியிருந்தால் அதையும் படிக்கணும். படித்து எது சரி, எது தப்பு என்று பார்க்கணும். உங்கள் புத்தியை அப்படித் தீட்டணும். இதையெல்லாம் செய்ய நமக்கு வெள்ளைக்காரன் கொடுத்த படிப்பு இருக்கின்றது. இந்த ஒலி பெருக்கி எதனாலே, ரேடியோ எதனாலே, தந்தி எதனாலே, மோட்டார் எதனாலே, ஆகாய விமானம் எதனாலே என்பதை எல்லாம் பார்க்கவேண்டும். இதையெல்லாம் படிக்கணும், கேட்கணும். அதைப்பற்றி நன்றாக ஆராய வேண்டும். அதனால்தான் நான் இப்படி குறைந்த விலையில் புத்தகம் போட்டு விற்க ஏற்பாடு செய்தேன். நானும் இப்படி அலை கிறேன். இன்றைக்கு மட்டும் மூன்று பேச்சுக்கள் பேசியுள்ளேன். இன்று மத்தியானம் மூன்று மணிக்கு சின்னக் கிருஷ்ணாபுரத்தில் பேசினேன். பிறகு இவ்வூர் (ஏத்தாப்பூர்) பஞ்சாயத்து வரவேற்பில் பேசினேன். இப்போது இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் தொழிலாளி என்று சொல்கிறவன் எவனானாலும் சரி, விறகு உடைப்பவனானாலும் சரி, விவசாயம் செய்கிறவனானாலும் சரி, செருப்புத் தைப்பவனானாலும் சரி, இவனெல்லாம் கக்கூசு எடுப்பதும் மனிதனின் தலைவிதி என்றால், அப்படி தோட்டி வேலை செய்வது மனிதனின் தலைவிதி என்றால், அந்த எடுக்கிற தொழிலில் பார்ப்பானிலும் அல்லவா இருக்கவேண்டும். தோட்டி வேலையில் இரண்டு பார்ப்பானாவது இருக்க வேண்டுமல்லவா? போலீஸ் வேலை பார்ப்பது மனிதன் தலைவிதி என்றால், அதிலே பார்ப்பான் இருக்கவேண்டாமா?
திராவிடம் தனிநாடு ஆக வேண்டும்
இந்த கம்யூனிஸ்டுகள் ஏதோ கலகம் பண்ணி, நாசம் இன்னும் என்னென்ன பண்ணமுடியுமோ அவ்வளவும் பண்ணி, இன்னும் 8 அணா கூலி சேர்த்து வாங்கித்தர முடியுமே தவிர, அவனை அந்த இழிதொழிலிலே இருந்து மாற்றப் பாடுபடமுடியுமா? இதுதான் நான் கேட்கும் கேள்வியாகும் அல்லது தொழிலாளர்களை முதலாளி களாக்கப் பாடுபடுகின்றாயா? இந்த நிலை ஏன்? இந்த நாட்டு கம்யூனிஸ்டுகளை நம்பி தொழிலாளர்கள் ஏமாந்து போகக்கூடாது. இவன் மட்டுமா தொழிலாளி? இவங்க அப்பன் தொழிலாளி, இவங்க பாட்டன் தொழிலாளி, இவங்க முப்பாட்டனும் தொழிலாளி. ஏனப்பா இந்த நிலை? இதை நீங்கள் சிந்திக்க வேண்டும். மேலும் இந்தத் திராவிட நாடு ஒரு தனி நாடாக, இலங்கை மாதிரி, பாகிஸ்தான் மாதிரி, பர்மா மாதிரி ஆனால் எவ்வளவு வசதியாக இருக்கலாம் என்பதையும் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
கிருஷ்ணன் யோக்யதைதான் என்ன?
பார்ப்பான் எதை வேண்டுமானாலும் சொல்லுவான். இதைக் கேட்கிற தமிழன் சிந்திக்கவேண்டாமோ? இந்த நாட்டில் கிருஷ்ணன் ஒரு கடவுள். அவன் பண்ணினதெல்லாம் ஆபாசம். அவன் பெண்கள் குளிக்கிற இடத்துக்குப் போனான். அங்கேயிருந்த பெண்களோட சேலையை எல்லாம் தூக்கிக்கிட்டு மரத்தில் ஏறிக்கொண்டு அந்தப் பெண்களை நிர்வாணமாகக் கையைத் தூக்கிக்கிட்டு புடவையைக் கேட்கச் சொன்னான். இதையும் படமாக்கி நம்மை கும்பிடச் சொல்கிறான், பார்ப்பான். நம் முட்டாளும் அதை வைத்து கும்பிடு கிறானே. இது எவ்வளவு முட்டாள்தனம்! இதுதான் தொலையட்டும். இந்த 1954-ஆம் வருடத்திலேயும் நம்மை மடயன், தாசிமகள், வேசிமகன் என்று சொல்கிறான் என்றால் இதைப்பற்றி நாம் என்ன கருதுவது?
போராடத் துணிந்து விட்டேன்
இந்த 1954-ஆம் வருடத்திலும் நம் ஜனங்கள் காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இந்த நிலைகளை எல்லாம் போராடி போக்குவதற்குத் துணிந்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரையில் சாவதற்கோ அல்லது சுட்டுச் கொல்லப்பட்டால் அதற்கோ எப்போதும் தயார் என்கிற மாதிரித் தானே மூட்டை முடிச்சோடு தயாராகத்தானே இருக்கிறேன். நானும் 13 கேஸ்களில் அகப்பட்டிருக்கிறேன். அந்த 13 கேஸ்களிலும் 13 முறை சிறைக்குப் போயிருக்கிறேன். எதிலும் நான் எதிர் வழக்காடி யதே இல்லை. இப்படிபட்ட துணிவோடு இருப்பதால்தான், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஏதொன்றும் எதிர்பார்க்காமல் வேலை செய்கிறோம். நாங்கள் ஒன்றும் பயந்தாங்கொள்ளி பசங்களல்ல. இங்கே ஒன்றும் அங்கே ஒன்றும் சொல்லிவிட்டு ஓடிவிடும் தந்திரக்காரனுமல்ல. இப்பகூட நான் முன்பெல்லாம் பேசியதற்கு மாறாகப் பேசுகிறான் என்று சிலர் சொல்லுகிறார்கள். கையிலே ஒரு புண் ஏற்படுகிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். புரையோடிப் போய்விட்டது என்றால், அதற்கு கார மருந்து போட முதலில் அதற்கு மருந்தைத் தடவிப் பார்த்தேன். அதற்கு மேலும் அந்த புண் புரையோடிப் போனால் கம்பியை விட்டு அல்லது கத்தியால் கிழித்து ஆற்ற வேண்டியதாய் இருக்கும். அதற்கும் அதிகமானால் கையையே வெட்டி எடுக்கிறாயே என்றால் இதற்கு வேறுவழி என்ன இருக்கிறது சொல்லுங்கள். நான் எனக்கு முன்பு பேசிய தோழர்கள் சொன்ன மாதிரி மூன்று மாத நோட்டீஸ் கொடுத்திருக்கிறேன்; அதிலே, சட்டவிரோதமாகத்தான் போவேன்.
சட்டத்தையும் எதிர்க்க வேண்டியதுதான்
இது பேசினால் அரசியல் சட்டத்துக்கு விரோதம்; அது பேசினால் பார்ப்பானுக்கு விரோதம் என்றால் துணிந்தால்தான் காரியம் நடக்கும். ஏன்? சர்க்கார் பார்ப்பார சர்க்கார். ஜனங்கள் பார்ப்பனர்கள் அல்லாதார். பார்ப்பான் தன்னை பிராமணன் என்கிறான். பிரமாவின் முகத்தில் பிறந்தவன் என்கிறான். கடவுளை யும் சாமி என்கணும்; இந்தப் பார்ப்பானையும் சாமி என்கணும்! இதற்கெல்லாம் ஒரு முடிவு காணவேண்டாமா? இந்தப் போராட்டம் சற்று பலமாகவே இருக்கும். இதை ஆரிய – திராவிடர் யுத்தம் என்றோம். அது இந்த நாட்டு மக்களுக்குப் புரியவில்லை. அதனால் விளக்கமாகச் சொல்கிறோம் -பார்ப்பானை ஒழி என்று.
வகுப்புரிமை – சலுகையை ஒழித்துவிட்டார்களே
இராஜாஜி, நம்மை உத்யோகத்திற்கு லாயக்காகக் கூடாது; நாம் மேன்மையடையக் கூடாது என்பதற்காகவே இந்தக் கல்வித் திட்டத்தைப் புகுத்துகிறார். வெள்ளைக்காரன் காலத்தில் நமக்கெல்லாம் உத்யோகம் கிடைக்க ஒரு வழியாக கம்யூனல் ஜி.ஓ.வை வைத்திருந்தான். அதையும் இந்த சர்க்கார் ஒழித்துக் கட்டிவிட்டது. நாம் இந்த நாட்டுக்கு வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே இருந்த மாதிரியே இருக்க வேண்டியதுதானா? நாமும் மனிதர்களாக வாழ வேண்டாமா? நாம், யாராவது நம்மை கீழான ஜாதி என்று ஒப்புக் கொள்கின்றோமா? இன்று “பறையனையும் ஏண்டா பறையா என்றால், அவன் ஒப்புக்கொள்வானா? அதனால்தான் வெள்ளைக் காரன் அவனை அப்படிச் சொல்லக் கூடாது என்று சட்டம் இயற்றினான். துணி இல்லை என்றால் நமக்குத்தான் துணியில்லை. பட்டினி கிடக்கிறவன் என்றால் – நாம்தான் பட்டினி படிப்பு இல்லை என்றால் நமக்குத்தான் படிப்பில்லை. ஆனதனால் தான் இப்படிப்பட்ட போராட்டத் தீர்மானத்தை செய்தேன். இந்தத் திட்டத்தின் மூலமாக நீயும் என் இனத்தை பழிவாங்குறே நானும் பழி வாங்குகிறேன். ஆகவேதான் இனி இரண்டு மாதத்திற் குள் ஏதாவது திட்டம் செய்ய வேண்டும். இதை நான் செய்து நான் மாத்திரம் தூக்குமேடைக்குப் போகிறேன் என்றால் அது அதோட தீர்ந்து போச்சு!
தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்தே தமிழன் தாழ்ந்தான்
அப்படியானால் காரியம் உங்களுக்கு அனுகூலமாகுமோ? இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை இழக்கிறவன் உண்மையான தமிழனாக இருக்க முடியாது! நாம் இந்த சர்க்காருக்கும் புத்தி கற்பிக்கணுமா, இல்லையா என்பதை யோசியுங்கள். நீங்களே பார்த்திருக்கலாம், 13 மந்திரிகளை வெட்டினார்கள் பர்மாவிலே! இங்கே பல கொடுமை இருந்தும் ஏதாவது குறைந்திடலியே! உலகத்தில் எங்கேயும் அப்படி மந்திரிகள் ஒன்றுமே இல்லையே! நாலுபேர் சாவான். எங்கே பார்த்தாலும் இருமலிலே செத்தான், நோயிலே செத்தான், மாரடைத்து செத்தான் என்று செத்தவர்கள், இன்னமும் பல வியாதிகளில் சாகப் போகிறவர்கள் எத்தனைப்பேர்! இதையெல்லாம் விட்டுவிட்டு தன்னைப்பற்றி மட்டும் சிந்திப்பதால்தான் தமிழன் இன்னமும் இப்படியே கிடக்கிறான்.
உண்மையிலேயே சொல்லுகிறேன், நாம் உலகத்தில் தலைசிறந்த மக்களாக இருக்கமுடியும். உழுவது நாம்; தறி நெய்வது நாம்; வீடு கட்டுவது நாம்; இன்னும் எந்த வேலையும் செய்வது நாம். இப்படி உள்ள சமுதாயம் கீழ்நிலையில் கிடப்பதா?
5 வகுப்புகளுக்கும் ஒரு ஆசிரியரா?
இப்பொழுதுள்ள கல்வித்திட்டப்படி அரை நாள்தான் பள்ளிக்கூடம். பணக்காரர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாத்தியாரை வைத்து மீதி அரைநேரம் பிரைவேட் சொல்லிக்கொடுக்கலாம் என்றால், அதையும் கூடாது என்றும் இந்த சர்க்கார் சொல்லிவிட்டது. இன்னமும் இப்போ ஒரு உத்தரவு பார்த்தேன். அது என்னடாண்ணா முப்பது பிள்ளைக்கு கம்மியானால் பள்ளிக்கூடத்தை மூடிவிடு – அப்படி இல்லாத பள்ளிக்கூட ஆசிரியரை வேலையை விட்டு நீக்கு – என்று உத்தரவு வந்திருக்கிறது. இந்த உத்தரவை நானே பார்த்தேன். 5 வகுப்புக்கும் ஒரே வாத்தியார் இருக்கணும் என்றால் அது என்ன நியாயம்? சர்க்காருக்கு கல்வி விஷயத்தில் கெட்ட எண்ணம் இல்லை என்று கூறுகின்றார்களே, அப்படியானால் இது என்ன எண்ணம்?
நம்மீது அக்கறையில்லாத சர்க்கார்
திருச்சியில் உள்ள கழக மாளிகைக்கு தீ வைக்க ஆட்கள் வந்தார்கள். `அன்று நான் ஊரில் இல்லை, இப்படி ஒரு ஊர் கூட்டத்தை முடித்துக் கொண்டு மாளிகைக்கு திரும்பினேன். அங்கு ஏராளமான கழகத் தோழர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்படி தீ வைக்க வந்த செய்தியையும் அப்படி வைக்க வந்தவனைக் கையோடு பிடித்திருந்த செய்தியையும் சொன்னார்கள். நானும் உடனே வக்கீலுக்கு தகவல் கொடுக்கச் சொன்னேன். அதற்குள் திரு. வேதாசலம் அவர்களுக்கும் செய்தி எட்டி, சப்-இன்ஸ்பெக்டரோடு வந்தார்கள். இந்த கேஸை சப்-இன்ஸ்பெக்டர் பதிவு செய்து கொண்டு, நன்றாக அக்கறையுடன் கவனிப்பதாகச் சொன்னார்கள். மறுநாள் என்னைப் பார்க்க வந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் இதைப் பற்றி கவனிப்பதாகக் கூறினார்கள். அப்படி தீ வைக்க வந்த ஆளை ஏவிவிட்டவர்கள், நல்ல கொழுத்த பார்ப்பனர்கள். அந்தக் கேஸுக்கு இன்றுவரை எந்த கேள்வி கேட்பாடும் இல்லையே! அதனால்தான் நாமும் பச்சையாகச் சொல்கிறோம், பார்ப்பானே வெளியேறு என்று. இதை தப்பு என்று சொல்வாய். நீ சொன்னாயே, “வெள்ளையனே வெளியேறு” என்று. அவனும் இதைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் ஓடிவிட்டானே! அது சரிண்ணும்போது, இது எப்படி தப்பாகும்? நமக்கு பழைய காலங்களிலெல்லாம் யுத்தமே பிரதானம். ஒருவன் யுத்தத்தில் கலந்து கொண்டான் என்றால்தான் அவனுக்குப் பெருமை! நம் நாட்டுப் பெண்களும் வீரத்தோடு நடந்துகொண்டார்கள். தன் மகனை சண்டைக்கு தலைவாரி, பூச்சூடி, கையிலே கத்தியைக் கொடுத்து, வெற்றியோடு வாருங்கள் என்று அனுப்புவார்களாம். இந்த மாதிரி ஏன் நாம் செய்யக்கூடாது? நம்முடைய பிள்ளைகளை விட்டால் கொழுத்திப் போடுவான்களே! இந்த சட்டசபை மெம்பர்களுக்கு பிறந்தது ஏதாவது இருந்தால் சொணங்குமோ என்னவோ? மற்றவனெல்லாம் தயாராக இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தப் போராட்டம்
நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். இரத்தத்திலே கையெழுத்துப் போட்டு “நான் தயார் என்று” கொடுக்கணும் என்று, இந்தப் போராட்டம் படிப்புக்கு மாத்திரம் அல்ல. நம் பேரிலே இவ்வளவு நாளா இருக்கிற இழிஜாதித் தன்மை, சூத்திரத் தன்மை முதலிய கொடுமைகள் செய்ததற்குப் பரிகாரமாகத்தான் இதைச் செய்கிறேன். இதை இந்தக் காலத்தில் மாற்றிக் கொள்ளவில்லையானால், வேறு சந்தர்ப்பமே இருக்காது. நம்முடைய மக்களுடைய இந்தக் கோழைத் தனமான சுபாவத்தை மாற்றவாவது ஏதாவது செய்யவேண்டாமா? நீங்க இடுப்பை வரிந்து கட்டினால் போதும். இந்த பார்ப்பானுங்க வழிக்கு வந்து விடுவார்கள். ஒரு அக்கிரகாரத்துக்குப் பத்துப் பார்ப்பான் நாட்டிலிருந்து ஓடினால் போதும், உடனே வழிக்கு வந்து விடுவான்கள், இதற்காக பெரிய பலாத்காரத்திலிறங்க வேண்டிய அவசிய மில்லை. அவ்வளவு புத்திசாலிகள் அவர்கள். இந்தக் கூட்டத்தை விட்டு வீட்டிற்குப்போகும் ஒவ்வொருவரும் இதைப்பற்றி சிந்திக் கணும். நம் வீட்டிலுள்ள ஆட்களில் யாரை இந்தப் போராட்டத்திற்கு அனுப்புவதென்று தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.
இனிமேல் இப்படிப்பட்ட பேச்சை இந்த மந்திரிகள் அனுமதிக்க மாட்டார்கள். இப்பவே என்னை உள்ளே பிடித்துப் போட்டிருக்க வேண்டும். ஒருவேளை நண்பர் என்று விட்டு, இது இன்னும் கொஞ்ச நாள் கத்தட்டும், பிறகு பார்க்கலாமென்று இருக்கிறாரோ என்னவோ, தெரியவில்லை. இன்னமும் அவர் பொறுப்பார் என்று தெரியவில்லை. என்பதாகக் கூறி முடித்தார்கள்.
– விடுதலை – 19.03.1954