விடுதலை களஞ்சியம் (தொகுதி 2)
தொகுப்பாசிரியர் கி.வீரமணி
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு 2024 – பக்கங்கள் 384
நன்கொடை ரூ. 500/-
* உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு என்பது ‘விடுதலை’ இதழுக்கான பெருமை!
அதன் 90 ஆண்டுகள் வரலாற்றை அறிந்து கொள்வது ஒவ்வொரு தமிழரின் கடமை!
அதை ஒரு களஞ்சியமாக தந்திருப்பது இந்த தொகுப்பின் அருமை!
* நீதிக்கட்சியினரால் (ஜஸ்டிஸ் கட்சி) 01.06.1935 அன்று ‘விடுதலை’ இதழ் துவக்கப்பட்டது. அப்போது வாரம் இருமுறை ஏடாக வெளிவந்தது . விடுதலையின் முதலாவது ஆசிரியர் டி.ஏ.வி. நாதன். 1937ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 18 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி தோல்வியடைந்ததால் விடுதலை இதழை தந்தை பெரியாரிடம் ஒப்படைத்தார்கள்!
* தந்தை பெரியாரிடம் ஒப்படைக்கப்பட்ட ‘விடுதலை’ 01.07.1937 முதல் நாளிதழாக ஈரோட்டிலிருந்து வெளிவரத் துவங்கியது. பண்டித எஸ்.முத்துசாமிப் பிள்ளை அதன் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றினார்!
* சரித்திரம் படைத்த விடுதலை பற்றிய சரித்திரத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க முடிவு செய்தார் 62 ஆண்டுகளாக விடுதலை நாளிதழின் ஆசிரியர் கி. வீரமணி அய்யா!
( ஒரு நாளிதழுக்கு தொடர்ந்து 62 ஆண்டுகள் ஆசிரியராக இருப்பது உலக சாதனையாகும் )
* அதன் விளைவாக, விடுதலை சந்தித்த இன்னல்களை; சாதித்த சாதனைகளை; நடத்திக் காட்டிய மாற்றங்களை; நிகழ்த்திக் காட்டிய பத்திரிகைப் புரட்சியை ஒரு கருவூலமாக தொகுத்து – ‘விடுதலை களஞ்சியம்’ (தொகுதி 1 ) 1936 என்ற நூல் சென்ற ஆண்டு வெளியானது!
அந்த வரிசையில் இந்த கரூவூலம் – விடுதலை களஞ்சியம் (தொகுதி 2 ) 1937 ஜனவரி – பிப்ரவரி – தற்போது வெளிவந்துள்ளது!
* இந்த இரண்டாம் தொகுதியில் 19 நாளிதழ்கள் (23.01.1937 முதல் 15.02.1937 வரை) இடம் பெற்றுள்ளன. அந்த சமயத்தில் சென்னை மாகாணத்திற்கு தேர்தல் நடைபெற்றதால் காங்கிரஸ் அரசியல் பற்றியும் நீதிக்கட்சியின் தீவிரமான பிரச்சாரங்கள் பற்றியும் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. அப்போது விடுதலை இதழை நீதிக்கட்சிதான் நடத்தி வந்தது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்!
*1937ஆம் ஆண்டில் ‘பார்ப்பனர்களே காங்கிரஸ்’ – ‘காங்கிரசே பார்ப்பனர்கள்’ என்று இருந்த காலக்கட்டம்! ‘சோட்டா காந்தி’ என வர்ணிக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரியார் அரசியல் சித்து விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தார்!
* காங்கிரசின் சத்திய மூர்த்தியோ சதிகார அரசியலில் வலம் வந்து கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருந்தது.நீதிக்கட்சி தலைவர்களின் மேடைப் பேச்சுகள் விடுதலையில் சிறப்பாக வெளியாயின!
*காங்கிரசுக்கு எதிராக விடுதலையில் வெளியான தலையங்களும் கட்டுரைகளும் அன்று வெகுவாக வாசிக்கப் பட்டன. அவைகளில் சில – காங்கிரஸ் காலித்தனம் | சத்திய மூர்த்தியின் வறட்டுப் பேச்சு | மூர்த்தியார் கோவை நாடகம் | ஆச்சாரியார் காலட்சேபம் | காங்கிரஸ் அனாதைகளின் அட்டகாசம் | புதுப் பக்தர்கள் போக்கு | காங்கிரஸ்காரர் பிதற்றல் | காங்கிரஸ் சாயம் வெளுக்கிறது| ……
* தொகுப்பாசிரியர் கி.வீரமணி அய்யாவின் விரிவான முன்னுரையில், ‘விடுதலை களஞ்சியம்’ பற்றியும், அதன் தேவை பற்றியும், அதிலுள்ள அரிய தகவல்களைப் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்!
* இன்றைய திருமதி. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து அதன்படி நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் அக்கறையும் ஆர்வமும் காட்டி வருவதையும் ஆசிரியர் பாராட்டி எழுதியுள்ளார்!
* இனி இந்த தொகுதியிலிருந்து சில ஆர்வமிக்க தகவல்கள்:
* ‘பிராமணர்களுக்கு எச்சரிக்கை’ என்ற தலைப்பில் 23.01.1937இல் வெளியானது ஒரு தலையங்கம்! அன்றைய தமிழ் சமூகத்தின் நிலை பற்றியும் நம்மவர்களின் அவல நிலை பற்றியும் அறிந்து கொள்ள உதவுகின்ற காலப் பெட்டகத்தின் பக்கங்கள் அவைகள்! தலையங்கம் சொல்வது.
* பிராமண சமூகம் முன்னேற வேண்டுமானால்; யோக்கியதையுடைய பிராமணர்களுக்கு மதிப்பு ஏற்பட வேண்டுமானால் – அரசியல் சூழ்ச்சிக்காரர்களான பிராமணர்களின் கொட்டத்தையடக்க பிராமணர்களே முதன் முதலில் முயற்சி செய்ய வேண்டும்! இன்றேல் பிராமண சமூகம் விரைவில் அழிந்து போவது திண்ணம்!
* சுயராஜ்யம் பெற்ற பிறகு ஒவ்வொரு சமூகத்திற்கும் கிடைக்கக்கூடிய விகிதாசாரத்தை முன்னாடியே நிர்ணயம் செய்து விட்டால், பிராமணர் – பிராமணரல்லாதார் போர் ஒழிந்து அரசியல் சுதந்திரம் பெற சவுகரியம் ஏற்பட்டு விடும் என நமது தலைவர் திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கூறி வருவதன் உட்பொருளை, யோக்கிய பொறுப்புடைய பிராமணர்கள் ஆராய்ந்தறிந்து ஒப்புக் கொண்டால், பிராமண சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து சூரியனைக் கண்ட பனி போல நீங்கி விடுமென்பது நிச்சயம்! ” …….
* இந்த தலையங்கத்தில் மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது – இந்திய சுதந்திரத்திற்கு முன்பே, பெரியார் வகுப்புவாரி விகிதாச்சார முறையில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டியதை வலியுறுத்தி வந்தார் என்பதையும், அவ்வாறு அனைத்து சாதியினருக்குமான விகிதாச்சார முறையை கடைப்பிடித்திருந்தால், மூன்று முதல் அய்ந்து சதவீதமுள்ள பார்ப்பன சமூகத்தினர் பொதுப் பட்டியலிலுள்ள மற்ற ஜாதியினருக்கான இடங்களை கபளீகரம் செய்யாமல் காப்பாற்றியிருக்கலாம் என்பதும் விளங்குகிறது!
இது வரலாறு நமக்கு கற்றுத் தரும் பாடம்!
* காங்கிரசின் சத்திய மூர்த்தி பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் சமயத்தில் பிரச்சாரம் செய்யப் போன இடங்களில் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பி ஓடிப் போன செய்திகளை எல்லாம் காண முடிகின்றது!
* சத்திய மூர்த்தியின் தேர்தல் கூட்டங்களுக்கு மக்கள் வராததால், அன்றைய மிகப் பிரபலமான நடிகையும் பாடகியுமான கே.பி.சுந்தரம்பாளை கூட்டம் சேர்க்க அவர் அழைத்து சென்றாராம்!
1937களிலேயே திரைப்பட நடிகையை தேர்தல் பிரச்சாரத்திற்கு காங்கிரசார் பயன்படுத்தினார்கள் என்ற வரலாறு தமிழ்நாட்டிற்கு உண்டு! அதுவும் சத்தியவான் சத்திய மூர்த்தி அய்யர் வாள் கைங்கரியத்தால்!
* ‘திரு சவுந்திர பாண்டியன் அவர்களின் தியாகம்’ என்ற கட்டுரை 26.01.1937ஆம் தேதி விடுதலை இதழில் வெளியாகியுள்ளது. சென்னை அசெம்பிளி தேர்தலுக்கு பழனி – நிலக்கோட்டை – கொடைக்கானல் தாலுகாகள் சேர்ந்த தொகுதிக்கு பொது ஸ்தானம் ( பொது உறுப்பினர் ) ஒன்றும் தாழ்த்தப்பட்ட ஸ்தானம் ( தாழ்த்தப்பட்ட உறுப்பினர்) ஒன்றும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்!
* அவ்விரு இடங்களுக்கும் இரண்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். இவர்களை எதிர்த்து நீதிக்கட்சியின் சார்பில் பொது உறுப்பினராக திரு சவுந்திர பாண்டியனும் தாழ்த்தப்பட்ட உறுப்பினருக்கு திரு. சிவராஜ் நிறுத்தப்பட்டார்.
(புனேயில் தேர்தல் இட ஒதுக்கீடு சம்பந்தமாக காந்தியார் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தபோது, காந்தியாரைக் காப்பாற்ற வேண்டி, அம்பேத்கருடன் சிவராஜும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்).
* திரு சவுந்திர பாண்டியனுக்கு அவருடைய தொகுதியில் பெரும் செல்வாக்கு இருந்தும், சட்டசபைக்கு தான் வெற்றி பெற்று போவதை விட திரு சிவராஜ் போவதே சிறப்பு என முடிவு செய்து, தனக்கு அளிக்க வேண்டிய வோட்டையும் சிவராஜ்க்கு அளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தீவிரமாக பிரச்சாரம் செய்தாராம்! ….
அன்றைய அரசியல் நாகரிகத்தையும் இன்றைய அரசியல் அநாகரிகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள உதவுகின்ற தகவல் இது!
*‘ஆச்சாரியார் காலட்சேபம்’ என்ற தலைப்பில் 29.01.1937இல் வெளியான ஒரு கட்டுரை. இதை இங்கே குறிப்பிட வேண்டிய காரணம் – அன்றும் இன்றும் நம்மவர்கள் வெற்றியை நழுவ விடுவதற்கு என்ன காரணம் என்பதை அன்றே தெளிவாக வரையறுத்துள்ளதை கண்டு அதிசியக்கச் செய்கிறது!
அந்த குறிப்பிட்ட பகுதி :
* “இடமறிந்து, காலமறிந்து, சந்தர்ப்பமறிந்து கடமையாற்றும் நவீன சம்பிரதாயங்களில் நம்மவர்கள் இன்னும் தேர்ச்சி பெறவில்லை! அத்தகையோருக்கு உலகம் அப்பாவிப் பட்டம் அளிப்பதைப் பார்த்து ஆச்சர்யப்படுவதற்குண்டா ?
தற்கால உலகத்திலே அரிச்சந்திரர்களுக்கும் மனுநீதி சோழர்களுக்கும் தேவையேயில்லை! சாணக்கியர்களுக்கும் சகுனிகளுக்குந்தான் அதிகத் தேவை . இனிமேலாவது நம்மவர்கள் இவ்வுண்மையை அறிவார்களாக!”
அதே நிலைதானே இன்றும்?
காலம் மாறவேயில்லையே?
* இதுபோன்ற தகவல்கள் – ஏறத்தாழ 90 ஆண்டு களுக்கு முன்பான தமிழ்நாட்டின் அரசியல் நிலை, பார்ப்பனர் நிலை, பார்ப்பனரல்லாதார் நிலை, சமூக நீதிக்கான அடித்தளம், நீதிக்கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் செயல் பாடுகள் ஆகியவை நமக்கு நிறைய கிடைக்கின்றன! இவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நூலை முழுமையாக வாசித் தறியுங்கள்!
விடுதலை களஞ்சியத்தை வாசியுங்கள்!
வரலாறு படைக்க வரலாறு படியுங்கள்!!
– பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.