சிதம்பரம் பல்கலைக்கழகம் மற்றும் நிர்வாகத்திற்குச் சொந்தமான கல்லூரி – பள்ளிச் சான்றிதழ்களை போலியாக அச்சடித்து வழங்கிய குற்றம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் மற்றும் நாகப்பன் என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை(18.6.2024) இரவு அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் ஒரே இடத்தில் மொத்தாக கிடந்துள்ளன. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் சிதம்பரம் காவல்துறை அதிகாரி ரகுபதி தலைமையிலான காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு கிடந்த சான்றிதழ்களைக் கைப்பற்றி விசாரணை செய்த போது போலி சான்றிதழ்கள் எனத் தெரியவந்தது. இதில் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இவருடன் நாகப்பன் மற்றும் வேறு ஒருவரும் தொடர்பில் இருந்துள்ளனர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.
பின்னர் இது குறித்து சிதம்பரம் காவல்துறை இணைக்கண்காணிப்பாளர் ரகுபதி தீவிர விசாரணை மேற்கொண்டதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் கேரளா, ஆந்திரா, கருநாடகா உள்ளிட்ட தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் உள்ள அனைத்து விதமான பல்கலைக்கழகங்களுக்கும் இவர்கள் 5000க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களை அச்சடித்து விற்பனை செய்துள்ளதும் மேலும் 1000-த்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்களை அச்சடித்து வழங்குவதற்காக வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இவர்கள் போலி சான்றிதழ் அச்சடிக்க பயன்படுத்திய கணினியைக் கைப்பற்றியதுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் காவல்துறை யினர் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இவர்கள் வழங்கிய போலி சான்றிதழ்களை வைத்து பல்லாயிரக்க ணக்கானோர் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்களா? மேலும் இந்தப் போலி சான்றிதழ் அச்சடித்து விநியோகம் செய்வதற்குத் தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவிலும் இதன் ‘நெட்வொர்க் உள்ளதா?’ இதில் யார் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? பெரும் புள்ளிகள் சிக்குவார்களா? எனக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்படி இருக்கிறது? கோயில் என்றால் தில்லைதான் என்பதும் அந்தக் கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் கைலாயத்திலிருந்து சிவனால் அழைத்து வரப்பட்டனர் என்றும் புராணம் எழுதி வைத்த கூட்டம் எத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்.
‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்!’’ என்று சுந்தரமூர்த்தி எழுதிய திருத்தொண்டத் தொகைக்கு சிவ பெருமானே முதலாவதாக அடி எடுத்துக் கொடுத்தார் என்று எல்லாம் கதை விட்டுள்ளார்களே, அந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன? அந்தப் பார்ப்பனருக்கும் சிவனே அடியான் என்று கூறும் அளவுக்கு இருக்கிறது என்றால் அந்தச் சிவனின் யோக்கியதை எந்தத் தரத்தில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா!
கடவுள் இல்லை என்பதை கடவுள் மறுப்பாளர்களைவிட சங்கராச்சாரியார்களுக்கும் இந்த அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கும் மிக நன்றாகவே தெரியும் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!