வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும்

காஞ்சிபுரம் மகாநாட்டிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், எஸ். ராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியவர்கள் வெளியேறின காரணம் இன்னதென்பதும், அது முதல் வேறு தனிப் பிரசாரம் செய்து வருவதின் நோக்கம் இன்னதென்பதும் நமது நேயர்கள் அனேகருக்குத் தெரியும்.

அதாவது மகாநாட்டிற்கு நாயக்கரும், ராமனாதனும் அனுப்பிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தைக் காஞ்சிபுரம் மகாநாட்டுத் தலைவர், மகாநாட்டில் பிரேரேபிக்கக்கூட அனுமதிக்காமல் சட்டத்தின் பெயரைச்சொல்வி தள்ளிவிட்ட தினாலேயே மேற்கூறியவர்கள் வெளியேறினார்கள் என்பது மேற்படி மகாநாட்டிற்குப் பிறகும் ஸ்ரீமான்கள் கல்யாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு ஆகியவர்கள் அவ்வகுப்புவாரி உரிமைக்கு விரோதமாய் பிரசாரம் செய்ததும், சில இடங்களில் ஆதரித்ததும் ஆகிய காரியங்களும் நேயர்களுக்குத் தெரியும். கடைசியாக கோவை மாநாட்டிற்கு வகுப்புவாரி உரிமையை அடிப் படையாகக் கொண்ட காங்கிரசுக்கு நம்மை அழைத்ததும், தென் இந்திய நல உரிமைச் சங்கத்தை ஏற்றுக்கொண்டதும் வாசகர்களுக்குத் தெரிந்ததே.

இப்போது வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்திற்கு ஒரு புது ஆதரவு. அதாவது, நமது நாட்டிற்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டால் எந்த வகுப்பார் தங்களுக்கு ஆபத்து என்பதாகக் கருதி இவ்வளவு திருவிளையாடல்களைச் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ அந்த வகுப்பில் முக்கிய மானவரும், ஒரு ஜில்லா காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவரானவரும், சுயராஜ்யக் கட்சி உபதலைவரும், ஸ்ரீமான் ஏ. ரங்கசாமி அய்யங்கார் சம்பந்தியுமான ஸ்ரீமான் கோவை சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்கார் அந்தக் கொள்கையை ஒப்புக் கொண்டு “வகுப்புவாதத்தை ஒழிப்பதற்கு யோசனை என்கிற தலைப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ திட்டம் கூட ஏற்பாடு செய்துவிட்டார். அதாவது ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமணய்யங்கார் 16.07.1927 தேதி “சுதேசமித்திரன்” பத்திரிகையில் ஒரு நிருபருக்குப் பேட்டி கொடுத்தார் என்கிற முறையில் “இந்த ஜில்லாவாசிகளுடைய அபிப்ராயங்களையும், அபிலாஷைகளையும் நான் அறிவேன். அவர்கள் அபிப்பிராயங்களை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அதை ஒருவாறு சுருக்கிக் கூறுகிறார். “சட்டசபை போன்ற பொது ஸ்தாபனங்கள் விஷயத்திலும், உத்தியோக விஷயத்திலும் தான் சங்கடம் இருந்து வருகிறது” என்று சொல்லிவிட்டு அதற்கு மார்க்கம் சொல்லுகிறார். அதாவது சட்டசபை முதலிய சம்பளம் இல்லாத கவுரவ ஸ்தானங்களில் 100க்கு 16½ ஸ்தானங்கள் பார்ப்பனர்களுக்கும், மீதம் 83½இல் கிறிஸ்தவர்களுக்கு 16½யும், மகமதியர்களுக்கு 16½யும், தாழ்ந்த வகுப்பு பிரதிநிதிகளுக்கு 16½யும், பார்ப்பனரல்லாதவர்களுக்கு 33ம் என குறிப்பிட்டிருக்கிறார்.

உத்தியோக விஷயத்தில் புதிதாக செய்யப்படும் உத்தியோக நியமனங்களில் 100க்கு 40 பார்ப்பனரல்லாத இந்து மக்களுக்கு என்றும், 100க்கு 20 பார்ப்பனர் களுக்கு என்றும், 100க்கு 20 மகமதியர்களுக்கும், 100க்கு 10 கிறிஸ்தவர்களுக்கும், 100க்கு 10 ஆதிதிராவிடர்களுக்கும் என்றும் எழுதி இருக்கிறார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று சொன்னவர்களுக்கு இதன் பரிமாற்றத்தின் திட்டத்தில் ஏதாவது வித்தியாசமிருந்தாலும் முக்கிய கொள்கையில் யாதொரு மாறுபாட்டையும் காணோம். எனவே, பார்ப்பனர்களும் ஒருவாறு வகுப்புவாரித் திட்டம் ஏற்படுத்த ஒப்புக்கொண்டு வருகிறார்கள் என்பது இப்போது வெளிப்படை. இன்னமும் எத்தனையோ பார்ப்பனர்களும், பார்ப்பன வாலிபர்களும் நம்முடன் நேரிலேயே சொல்லி இருக்கிறார்கள். அதாவது “பார்ப்பனர் பிறவி காரணமாய் ஜாதியில் மற்ற எவரையும்விட உயர்ந்தவனல்ல என்பதையும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும், கதி மோட்சத்திற்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமே சிறந்த சாதனம் என்பதையும் ஒப்புக்கொள்ளுகிறோம். எங்களையும் தங்கள் சுயமரி யாதை சங்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று கேட்டிருக்கிறார்கள்.

நமக்கு இன்னமும் அவர்களிடம் நம்பிக்கை வராததால் நாம் நமது காலிலேயே நின்று நமது தேவையை அடைய வேண்டும் என்கிற ஆசையாலும், இதற்கு முன் பல தடவைகளில் கிளம்பிய இதுபோன்ற பிரயத்தனங்களை இதே பார்ப்பனக் கூட்டத்தார் கூடியிருந்தே கெடுத்தியிருக்கிறதைப் பார்த்து இருப்பதினாலேயும், நமக்கு அவர்களிடம் நம்பிக்கை உண்டாவது கஷ்டமாயிருக்கிறதே ஒழிய வேறில்லை. எப்படியும் இதிலிருந்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ கொள்கை யுடைய பார்ப்பன எதிரிகள் குறைந்து வருகிறார்கள் என்கிற விஷயத்தில் நமக்கு சந்தோஷம். ஆனால் பார்ப்பனர்கள் யோக்கியர்கள் என்பதை காட்டிக்கொள்ள இப்படிச் சொல்லிவிட்டு பார்ப்பனரல்லாதாரில் மறுபடியும் சிலரைச் சிருஷ்டித்து கலகம் செய்யச் செய்வார்கள் என்கிற பயமும் நமக்கு உண்டு. ஆனாலும், அதையும் ஒரு கை பார்க்கலாம். இறைவன் நமக்கு வலிமை அளிப்பாராக கடைசியாய் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பற்றி பச்சைப் பார்ப்பன பத்திரிகையாகிய “இந்து” பத்திரிகை சொல்லி யிருப்பதையும் குறிப்பிட்டு விட்டு இதை முடித்துவிடுகிறோம்.

“இந்து” பத்திரிகை எழுதியதாவது:

“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஜனங்களிடை சுயமதிப்பை உண்டு பண்ணி யிருக்கிறதென்பதையும், சமுதாய முன்னேற்றத்துக்குக் காரணமாயிருக்கின்ற தென்பதையும், ராஜீய வாழ்வில் அலட்சியமாயிருந்த வகுப்பினருக்கு ராஜீய அறிவு புகட்டுவதற்கான வசதிகளை அது உண்டு பண்ணி இருக்கிறதென்பதையும் யாவரும் மறுக்க முடியாது” என்று எழுதியிருக்கிறது. இதைப் பார்த்த பின்பாவது பார்ப்பனரல்லாதாருக்குள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்குக் கண்ணியமான எதிரிகள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம்.

– குடிஅரசு – கட்டுரை – 31.07.1927

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *