* மருத்துவர் திருநாவுக்கரசு தயாரித்த ‘நீட்’ எதிர்ப்புத் திரைப்படம்!
* தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக தங்கள் வாழ்வாதாரத்தை அழித்துக்கொள்ளும் பெற்றோரின் அவலம்!
படத் தயாரிப்பாளருக்கும், இதில் பங்குகொண்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் பாராட்டுகள் – வாழ்த்துகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
மருத்துவர் திருநாவுக்கரசு ”அஞ்சாமை” என்ற பெயரில் தயாரித்து – நீட்டின் கொடுமையை எதிர்தது வெளிவந்துள்ள அஞ்சாமை என்னும் திரைப்படம் – உண்மை நிலையை நிர்வாணமாக வெளிப்படுத்தியுள்ளது. இது மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட தமிழ்நாடு அரசு தன் உதவிக்கரம் நீட்டவேண்டும்; மொழியாக்கம் செய்து வெளிமாநிலங்களிலும் திரையிடப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உளவியல் மருத்துவர் சமூகநீதி உணர்வாளர் டாக்டர் ம.திருநாவுக்கரசு அவர்களின் ‘திருச்சித்திரம்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘அஞ்சாமை’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்காக நேற்று (20.6.2024) நம்மையும், முக்கிய தலைவர்களையும், தோழர்களையும் அழைத்து இருந்தார்கள்.
மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் பல லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்தம் குடும்பங்களையும ‘நீட்’ என்னும் பெயரால் எவ்வளவு கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு என்பதையும், ஏழை, எளிய மக்கள் மருத்துவக் கல்வி பெற முடியாமலும் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்தும் அதைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் சதியையும் அஞ்சாமை திரைப்படம் ”அஞ்சாமையுடன்’’ காட்சிப்படுத்துகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களும், நீட்டும்!
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் பூ விவசாயி ஆக இருக்கும் ஓர் ஏழை தந்தையும் அவரது குடும்பமும் தங்கள் மகன் அருந்தவத்தின் மருத்துவராகும் கனவுக்காக அரும்பாடு படுகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெற்றாலும் தனியார் பள்ளியில் தேடி வந்த வாய்ப்புகளை உதறிவிட்டு, அரசுப் பள்ளியில் படிப்பதையே விரும்பும் அந்த மாணவனைத் தனியார் கோச்சிங் சென்டர்களில் படிக்க வைப்பதற்கான நிர்ப்பந்தத்தை எப்படி ஏற்படுத்துகிறார்கள்? என்பதை மிக அழுத்தமாக இந்த திரைப்படம் எடுத்துச் சொல்கிறது . அதற்காக ஏழை எளிய குடும்பங்கள் தங்களின் உடைமைகளையும், சின்னஞ் சிறிய வாழ்வாதாரங்களையும் கூட அடகு வைத்தோ, விற்றோ மெழுகுவர்த்திகளாக தங்களை கரைத்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு ஒளி கொடுக்கத் தயாராவது நெஞ்சை கனக்க வைக்கும் உண்மையாகும்.
மாநிலக் கல்வித்திட்டத்தில் பெறும் மதிப்பெண்களைத் தூக்கி எறிந்து விட்டு, சிபிஎஸ்இ கல்வி முறையில் தனியார் கோச்சிங் சென்டர்களில் பல லட்சம் ரூபாய் பணம் கட்டி படித்தால் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியும் என்ற சமத்துவத்துக்கு எதிரான சதித்திட்டத்தால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கனவைப் புதைத்துக் கொண்டு நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நன்கு படிக்கக் கூடியவர்கள் ஆயினும், உயர் மதிப்பெண்கள் பெறக்கூடியவர்கள் ஆயினும் தனியார் கோச்சிங் சென்டர்களில் பணம் கொடுத்துப் படிக்க வைக்க முடியாத காரணத்தால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்குத் தங்களால் உதவ முடியவில்லை எனும் ஆதங்கத்தில் எத்தனை லட்சம் குடும்பங்கள் தங்கள் மன நிம்மதியை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றன!
தம் பிள்ளை மருத்துவராக ஆகிட, தங்கள் வாழ்வாதாரங்களை அழித்துக் கொள்ளும் பெற்றோர்!
தம் பிள்ளையின் கல்விக்காக, ஒட்டுமொத்தமாகத் தங்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்தும் தயார்படுத்திய குடும்பங்கள். அதற்குப் பின்னும் நீட் தேர்வு எழுதுவதற்காக, மொழி தெரியாத ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு தமிழ்நாட்டு பெற்றோர்களும் பிள்ளைகளும் அவசர அவசரமாக அலைக்கழிக்கப்பட்ட கொடுமையை அதனால் அவர்கள் பெற்ற மன உளைச்சலை, வலியை, அதன் நீட்சியாக நிகழ்ந்த மரணங்களை அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது. ஆனால் இவற்றை மக்களின் மனங்களில் இருந்து மறைப்பதற்கும், மறக்கடிப்பதற்கும் ஒன்றிய அரசு ஊடகங்களின் வாயிலாக ஏராளமான பொய் செய்திகளை குழப்பச் செய்திகளை உலவ விட்டுக் கொண்டே இருக்கிறது.
அப்படி ஒரு வலியை மீண்டும் இந்த மக்களுக்கு வலிமையுடன் எடுத்துச் சொல்வதுடன் இந்த கொடுமை களுக்கு காரணமானவர்கள் மீது நியாயமான கேள்விகளை நீதிமன்றக் காட்சிகளின் வாயிலாக மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறது இத்திரைப்படம். நீதிமன்றங்கள் இத்தகைய முக்கியமான வழக்குகளில் எப்படி முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுக்கின்றன என்பதையும் திரைப்படம் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
‘நீட்’ எதிர்ப்புக்காக ஒவ்வொரு நாளும் நாம் மக்களிடம் எடுத்துச் சொல்லும் கருத்துக்களை வீதிகளில் நிகழ்த்தும் போராட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சிறந்த திரைக்கதை வசனம் ஆகிய வற்றின் மூலம் அழுத்தமாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சுப்புராமன்.
மாணவன் அருந்தவத்தின் தந்தையாகவும் நாடக நடிகராகவும் வாழ்ந்துள்ள நாயகன் விதார்த், தாயாராக நடித்துள்ள வாணி போஜன், காவல்துறை ஆய்வாளராகவும் வழக்குரைஞராகவும் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ள ரகுமான், மாணவன் அருந்தவம் வேடம் ஏற்றுள்ள கிருத்திக் மோகன், நீதிபதி வேடம் ஏற்றுள்ள மேற்கு வங்காள மாநில மேனாள் தலைமைச் செயலாளர் ஜி.பாலச்சந்திரன் அய்.ஏ.எஸ்., மற்றொரு குழந்தையின் தாயாராக நடித்துள்ள ரேகா சிவன் ஆகியோர் தத்தம் கதாபாத்திரங்களை மிக இயல்பாகச் செய்துள்ளதன் மூலம் அழுத்தமாக மனதில் பதிகிறார்கள். இக் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் நிஜத்தில் நாம் காணும் பலரின் பிம்பங்கள். அதை நம்மை உணரச் செய்யும் வகையில் திரையில் வழங்கியுள்ள இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே பாராட்டத்தக்கவர்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக், இசையமைப்பாளர் ராகவ் பிரசாத், பாடல்கள் எழுதியுள்ள பாவலர் அறிவுமதி, கார்த்திக் நேதா, இயக்குநர் சுப்புராமன் என இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ள ஒவ்வொருவரும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். வாழ்த்துகள்!
தமிழ்நாட்டில் வைக்கப்பட்ட எதிர்ப்புத் தீ!
நீட் எதிர்ப்பைத் தமிழ்நாடு மட்டும் முன்னெடுத்து வந்த காலத்தில் உருவாக்கப்பட்ட இத் திரைப்படம் நெடுநாள் கழித்து திரைக்கு வந்திருக்கிறது. இன்று இந்தியா முழுமையும் நீட் என்னும் தடைக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. முதல் நெருப்பை பற்ற வைத்த தமிழ்நாடு – அந்த நெருப்பை அணைய விடாமல் இன்னும் தகித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய சதிகள் புதிய புதிய கொடுமைகள் மூலம் பழையவற்றை மறக்கடித்து மக்களின் உணர்வை மழுங்கடிக்க செய்ய முயற்சிக்கும் ஒன்றிய அரசின் முயற்சிகளை தோற்கடித்து நீட் எதிர்ப்புணர்வுக்கு பலம் சேர்க்க வல்லது இத் திரைப்படம்.
இதை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது சமூக நீதியாளர்களின் கடமை. தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் இந்தத் திரைப்படம் காணச் செய்வதும் குறிப்பாக மாணவர்களும், பெற்றோரும் இதனைக் காணச் செய்வதும் அவசியமாகும். தமிழ்நாடு அரசும், நீட் எதிர்ப்பு தளத்தில் எப்போதும் முன்நிற்பவரும், சமூக நீதிக்கான சரித்திர நாயகருமான நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதற்கு ஆவன செய்ய வேண்டும். வரிவிலக்கு வழங்குவதன் மூலமும், உரிய விளம்பரங்களின் மூலமும் இத்திரைப்படம் வெகு மக்களிடமும், இளைஞர்களிடமும் கொண்டு செல்லப்பட வேண்டும்.
இந்தியா முழுவதும் நீட் எதிர்ப்பு பற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தத் திரைப்படத்தை மொழி மாற்றம் செய்து பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
படத்தைத் தயாரித்த மருத்துவர் திருநாவுக்கரசு பெரிதும் பாராட்டுக்குரியவர்!
கல்வியினாலும் உழைப்பாலும் தான் பெற்ற வசதிகளைச் சமூகத்திற்குத் திரும்ப செலுத்தும் அரிய செயலை இந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் செய்து காட்டி இருக்கிறார் நமது பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய உளவியல் மருத்துவர் தோழர் ம.திருநாவுக்கரசு அவர்கள். வணிகத்திற்காக திரைப்படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் உண்டு. தோழர் திருநாவுக்கரசு அவர்கள் வணிகப்படம் எடுக்க முயன்று இருந்தாலும் அவருக்கு எத்தனையோ வாய்ப்புகள் உண்டு. ஆனால், வணிகத் திரைப்படத்தின் அதே வெகுமக்கள் தன்மையோடு நாட்டுக்கும், மக்களுக்கும், கல்விக்கும் கேடு பயக்கும் நீட்டை எதிர்த்து, மருத்துவப் படிப்பிற்குப் போடப்பட்ட சமூக அநீதி முகமூடியைக் கிழித்தெறிந்திருந்து, அதைத் திணிக்கும் அரசு ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் காலகட்டத்திலும் எதற்கும் அஞ்சாமல் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் மருத்துவர் திருநாவுக்கரசு அவர்களின் துணிச்சல் பாராட்டத்தக்கது!
தமிழ்நாடு அரசும் – மக்களும் – சமூகநீதி உணர்வாளர்களும்
பயன்படுத்திக் கொள்ளவேண்டும்!
பல்வேறு காட்சிகளில் நம் நெஞ்சுருக்கியும் உணர்வு பூர்வமான வாதங்களால் உணர்ச்சி கொள்ளச் செய்தும் இத்திரைப்படத்தை வீரியத்துடன் இயக்கியுள்ள இயக்குனர் சுப்புராமன் இன்னும் பல நல்ல திரைப்படங்களை தரக்கூடியவர் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
இது பச்சை உண்மைகளின் படாடோபமற்ற படம் மட்டுமல்ல, பாடமும்கூட!
இந்தத் திரைப்படத்தை தமிழ்நாடு அரசும், மக்களும், சமூக நீதி உணர்வாளர்களும் தவறவிடாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
21.6.2024