11ஆம் உலகத் தமிழ் மாநாட்டு இலச்சினை
முதல் நாளில் தமிழர் தலைவரின் முத்தாய்ப்பான நிறைவுரை
மாநாட்டுப் பொது அரங்கில் பல சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றிய பின்னர், முதல் நாள் நிகழ்ச்சிகளின் நிறைவுரையினை தமிழர் தலைவர் வழங்கினார். “வளர்ச்சி நோக்கில் தமிழ்’ எனும் தலைப்பிலான தனது உரையினை சிறு புத்தகமாக அச்சடித்து பேராளர்கள் பலருக்கும் வழங்குகின்ற ஏற்பாடுகளுடன் தமிழர் தலைவர் தனது உரையினை ஆற்றினார்.
அதுவரை மாநாட்டுப் பொது அரங்கில் அளிக்கப்பட்ட தலைப்பிற்கு அப்பால் சிறு விவாதங்கள், சலசலப்புகள் என சில அழைப்பாளர்கள் பேசிய நிலையில் தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றிட ஒலிப் பெருக்கியில் அழைத்தபின் மாநாட்டின் ஏற்பாட்டுச் செயலாளர் முனைவர் கிருஷ்ணன் மணியம் அவர்கள் அருகில் வந்து தமிழர் தலைவரிடம் அய்யா, ‘சமயம் பற்றி அருள் கூர்ந்துபேசிட வேண்டாம்‘ எனக் கேட்டுக்கொண்டார். சிரித்துக் கொண்டே மேடை ஏறி தனது உரையினைத் தமிழர் தலைவர் தொடங்கினார்.
“உரையாற்றிட எம்மை அழைத்த அன்புத் தோழர் ‘சமயம் பற்றி பேச வேண்டாம்‘ எனக் கேட்டுக் கொண்டார். நாங்கள் எப்பொழுதும் ஒரே கருத்து நிலையினைக் கொண்ட வர்கள், ‘சமயத்திற்கு ஏற்ப பேசக்கூடியவர்கள் அல்ல;‘ எனக் கூறியதும் அரங்கமே கைதட்டி மகிழ்ந்தது.
எப்பொழுதும் கருத்து நிலைப்பாடு என்பது நிலையாக இருந்தாலும், அதை வெளிப்படுத்துகின்ற தன்மை, அணுகு முறை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்காது; இருக்கவும் முடியாது. பேசுகின்ற சூழல், கேட்பவர் தன்மை, நிலை என்பதை அறிந்துதான் பேசிட வேண்டும் என தமிழர் தலைவர் இயக்கத் தோழர்களுக்கு அடிக்கடி நினைவூட்டுவார். மொழி சார்ந்த- குறிப்பாக தமிழ் மொழி மாநாடு – உலக ஆராய்ச்சி மாநாடாக நடைபெறும் நிலையில் தன்மை அறிந்து, சூழல் அறிந்து தனது உரையினைத் தமிழர் தலைவர் தொடங்கினார்.
தமிழவேள் கோ. சாரங்கபாணியின் பெரும்முயற்சி!
இந்த மாநாடு நடைபெறும் மலேயா பல்கலைக்கழகம் மிகப் பழம் பெருமை வாய்ந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியவியல் துறையில் சமஸ்கிருத மொழிக்கான இருக்கையை ஏற்படுத்திட ஒரு சிலர் முனைந்தனர். அப்பொழுது இன்றைய மலேசியா, மலேயாவாக சிங்கப்பூரையும் உள்ளடக்கி இருந்தது. தமிழ் மொழிக்கு இருக்கை இல்லாத நிலையை அறிந்த தமிழவேள் கோ. சாரங்கபாணி அதற்கான முயற்சியினைத் தொடங்கி “தமிழ் எங்கள் உயிர்’’ எனும் தலைப்பில் தனது ‘தமிழ்நேசன்’ ஏட்டில் தமிழ் இருக்கை அமைத்திட வேண்டுகோளையும் விடுத்து- நன்கொடை கொடுத்தோர் பட்டியலையும் தொடர்ந்து வெளியிட்டார். தமிழவேள் அவர்கள் எடுத்த முயற்சியின் காரணமாக பெறப்பட்ட கணிசமான தொகையினைக் கொண்டு மலேயா பல்கலைக் கழகத்தில் ‘தமிழ் மொழிக்கான இருக்கை’ உருவாக்கப்பட்டது. தமிழ் மொழி சார்ந்த இந்த வரலாற்றுச் குறிப்பினைக் கொண்ட மலேயா பல்கலைக்கழகத்தில் 11ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெறுகிறது.
‘மொழி என்பது ஒரு போர்க்கருவி’ என்று சொன்னார் தந்தை பெரியார். ‘போர்க்கருவி’ என்பது வன்முறைக்கு பயன்படுவது என்ற பொருளில் அல்ல; ஒரு மொழியை ஆதிக்கம் செய்கின்ற – அடக்கி காலப்போக்கில் அழிக்க நினைகின்ற சக்திகளை எதிர்த்து பேசக்கூடிய ஒவ்வொரு மொழியும் ‘போர்க் கருவி’ போல கருத்துப்போர் புரிந்திட பயன்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் செம்மொழியாக விளங்கி பின்னர் இந்திய அரசினரால் செம்மொழி தகுதி முதன்முதல் அளிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி. இதன் காரணமாக தமிழுக்கு அடுத்த படிதான் சமஸ்கிருதம் உட்பட பிற இந்திய மொழிகளுக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது.
தமிழ் மொழி பிறதமிழர் தலைவருடன் பன்னாட்டுத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் டத்தோ சிறீ த.மாரிமுத்து
மொழி மீது ஆதிக்கம் செலுத்தியது இல்லை. பிற மொழிகளின் ஆதிக்கத்திற்குதான் ஆளானது. ஒரு மொழி ‘தேவ பாஷை’ என அடையாளப்படுத்தப்பட்டது. அந்த மொழி ஆய்வாளர்கள் அதை பெருமையாக நினைத்து விட்டுப் போகட்டும். ஆனால் தமிழை ‘நீஷ பாஷை’ எனச் சொன்னதோடு மட்டுமல்லாமல் இன்றளவும் அதனை வலி யுறுத்திக் கடைப்பிடித்து வரும் ஆதிக்க சக்திகளை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அறிஞர் அண்ணா அவர்கள் ‘ஆரியமாயை’ நூலில் குறிப் பிட்டதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் பேசினார்.
“பாட்டியலில்
பன்னீருயிரும் முதலாறு மெய்யும்
பார்ப்பன வருணம்-
அடுத்த ஆறு மெய்கள்
அரச வருணம்-
பிற இரண்டும்
சூத்திர வருணம்-’’
ஆரியர் கோட்பாடுகள் வருணாசிரமத்தில் மனிதர்களை பிராமண – ஷத்திரிய – வைசிய – சூத்திர என்று பிரித்து வைத்ததைப் போலவே தமிழ் மொழிப் பாவிலும் எழுத்திலும் வருணப்பிரிவினை செய்துள்ளதை எதிர்க்காமல் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும். தமிழர்களை – தமிழ் மொழியினை எவர்- எவை பிரிக்கின்றனவாறவோ அவர்களை – அவற்றை அடையாளம் கண்டு வாழவேண்டும்.
தமிழ் மொழி மிகத் தொன்மையான மொழி. பழம்பெருமை மிக்க மொழி என போற்றப்படுகிறது. பழம் பெருமைகள் மட்டும் மொழி பயன்பாட்டிற்கு உதவாது. புத்தாக்கம் பெற வேண்டும். ‘உணவுப் பயிரை விளைவிக்க உரம் இட வேண்டும். உணவுப் பொருள் உற்பத்திக்கும் உரம் தேவை. ஆனால் உரத்தையே உணவாக்கிக் கொள்ள முடியாது. பழம் பெருமை என்பது உரத்திற்கு ஒப்பானது. அவ்வளவே.
இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மய்ய நோக்கமே ‘இணைய காலக்கட்டத்தில் தமிழ்மொழி’ என்ப தாக உள்ளது. உலகளவில் தமிழ் மொழியினை பயிலுகின்ற வகையில் – அறிவியல் & தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஈடு கொடுத்து உரிய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.
மலேசிய நாட்டு பிரதமர் டத்தோ சிறீ அன்வர் இப்ராஹிம்
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தந்தை பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தினார். தமிழ் வரிவடிவத்தில் இருந்த 247 எழுத்துகளை 54 எழுத்துகளாக மாற்றி அமைத்தார். அவர் மாற்றிய 1935ஆம் ஆண்டில் கணினி தொழில்நுட்பம் பரந்துபட்டு நடைமுறையில் இல்லை. ஆனால் இன்று எளிய மனிதரும் கணினியைப் பயன்படுத்தும் சூழலில், அதற்கு உகந்த வகையில் தமிழ் மொழி எழுத்துகள் இருப்பதற்கு தந்தை பெரியார் கொண்டுவந்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தமே அடிப்படைக் காரணம்.
தமிழ் நாட்டில் எம்ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது தந்தை பெரியாரின் பிறந்த நாள் நூற்றாண்டில் பெரியார் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அரசாணை பிறப்பித்தார். தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் வெளிநாட்டில் – முதலில் சிங்கப்பூரிலும் அடுத்து மலேசியாவிலும் அரசு அங்கீகாரம் பெற்று நடைமுறைக்கு வந்தது. வருங்காலம் – செயற்கை நுண்ணறிவு (artificial intelligence – AI) பயன்பாடு அதிகரிக்க உள்ள நிலையில் – மானுட வழ்வையே புரட்டிப் போட இருக்கின்ற நிலையில் அதற்கு ஈடுகொடுத்து தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி நடைபெற வேண்டும். அதற்கு இந்த மாநாடு வித்திட வேண்டும்.’’
(தமிழர் தலைவரின் உரை ‘விடுதலை’ (22.07.2023) ஏட்டில் முழுமையாக வெளிவந்துள்ளது)
தமிழர் தலைவருடன் ஓம்ஸ் தியாகராசன்
மாநாட்டு மேடையில் ஏறிய பொழுதும், பேசி முடித்து விட்டு மேடையை விட்டு இறங்கிய பொழுதும் எவரது துணையுமின்றி நடந்த 90 வயது இளைஞரான தமிழர் த¬லைவரின் ஏற்ற நடை, சீற்றம் இருந்தாலும் சீரான பேச்சு, உள்ளதை விளக்கும் எளிய பேச்சு நடை, கருத்து வளம் – ஆழம் இவையனைத்தையும் பார்த்து, கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் பரந்துபட்டு கரவொலி எழுப்பி மகிழ்ச்சி யினைத் தெரிவித்தனர்.
மாநாட்டு ஏற்பாட்டாளர்களும் தமிழர் தலைவரின் கரம் பற்றி மனநிறைவினையும், மகிழ்ச்சியினையும் தெரிவித்தனர்.முதல் நாளில் காலை தொடங்கி, பகல் முழுவதும் நடைபெற்ற பல்வேறு உரையாளர்களின் பேச்சில் தென்பட்ட, வெளிப்படுத்திய சில முரண்பாட்டுச் செய்திகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும், முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தமிழ் மொழிக்கு ஆக்கரீதியான பங்களிப்பு செய்வதற்கு அனை வருக்கும் உள்ள பொறுப்பினை உணர்த்தி, தொடர்ந்து இரண்டு நாள்களும் அந்த திசையில், மாநாட்டு நோக்கத்திற்கு ஏதுவாக நடைபெறுகின்ற வகையில் தமிழர் தலைவரின் நிறைவுரை அமைத்தது என மனநிறைவடைந்தனர். தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.
அறிவியல் தொழில்நுட்பம் ஏற்படுத்திய அன்புத் தொல்லைகள்
முதல் நாள் நிகழ்வின் பொழுதும், மற்ற இரண்டு நாள்களும் தேநீர் இடைவேளை, நண்பகல் உணவு, நிகழ்ச்சி முடிந்து அரங்கத்தைவிட்டு தமிழர் தலைவர் வெளியேறும் பொழுதெல்லாம் மாநாட்டுப் பேராளர்கள் – இருபாலரும் தமிழ் தலைவரிடம் சேர்ந்து ஒளிப்படம் எடுத்துக்கொள்வதில் மிகவும் முனைப்பு காட்டினர். காமிரா, செல்பேசி ஆகிய வற்றின் மூலம் பிறர் எடுக்க தமிழர் தலைவருடன் இருந்து எடுத்துக்கொண்ட ஒளிப்படம்- இவை போதாதென்று இளைய தலைமுறையினர் தமிழர் தலைவரின அருகில் நின்று தங்களது செல்பேசி மூலம் செல்ஃபி(Selfi) எடுத்துக் கொள்வதில் நிறைந்தனர். பேராளர்களில் மிகப் பலர், தமிழர் தலைவரை தொலைக்காட்சி வழிமட்டுமே பார்த்திருந்தனர்; நேரில் அருகில் இருந்து பார்த்ததில்லை; மேலும் தமிழர் தலைவரைச் சந்தித்து ஒளிப்படம் எடுப்பது தமிழ் நாட்டில் அல்ல; வெளிநாட்டில் – மலேசியாவில் – அதுவும் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் – அவரது உரையினை கேட்டுவிட்டு ‘சுடச்சுட’ ஒளிப்படம் எடுத்தது என இப்படிப் பற்பல உளப் பாங்குடன் தமிழர்கள், தமிழர் தலைவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். தமிழர் தலைவரும் எவருக்கும் மறுப்பு, முகம் சுளிப்பு இல்லாமல் – சற்றும் சளைக்காமல் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.
திராவிடர் இயக்கத்தை பற்றி அறிந்த ஒருவர், தந்தை பெரியாராக இருந்தால் ஒவ்வொரு ஒளிப்படத்திற்கும் நன் கொடை வாங்கியபின்தான் ஒளிப்படம் எடுக்க சம்மதம் தெரிவிப்பர் என அனைவரது காதுபடக் கூறியதும், எழுந்த சிரிப்பொலி அடங்கிட சில மணித்துளிகள் ஆனது.
தேநீர் விடுதியில்…
மாநாட்டு அரங்கிலிருந்து கிளம்பி விடுதிக்கு வரும் வழியில் தேநீர் அருந்திட நடைபாதையில் அமைந்திருந்த கடை ஒன்றிற்குச் சென்றோம். தேநீர் கொண்டு வந்து பரி மாறிய இளைஞர்கள் சற்று தயக்கத்துடன், அய்யப்பட்ட முகக்குறியுடனும், இருந்தார். நாங்கள் தேநீர் அருந்தியபின் கிளம்பி வாகனத்திற்கு அருகில் வந்ததும் – ஓடிவந்து எங்களிடம்
அய்யாவைக் குறிப்பிட்டு, ‘வீரமணி அய்யாதானே!’ என உறுதிப்படுத்திட விரும்பினார். பின்னர் அய்யாவிடம் அருகில் சென்று அவரை நேரில் பார்ப்பது, அதுதான் முதல் முறை என்று கூறினர். ‘எந்த ஊர்?’ என்று அய்யா கேட்டதும் பதில் அளித்ததும், ‘புதுக்கோட்டையா’ எனக் கேட்க- ‘புதுக் கோட்டைக்கு அருகில் அறந்தாங்கி’ எனப் பதில் வர, அறந் தாங்கியில் எந்தப் பகுதி? என்று மீண்டும் கேட்க, அறந் தாங்கிக்கு அருகில் கிராமத்தின் பெயரைச் சொன்னதும், சற்றும் தாமதிக்காமல் ‘அந்த ஊருக்கு உரையாற்றிட வந்துள் ளேன்’ என்று தமிழர் தலைவர் கூறியதும், அந்த தமிழ் இளைஞர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
“மலேசிய நாட்டிற்கு உழைப்பதற்கு வந்திருக்கிறீர்கள். சம்பாதிக்கும் பணத்தை உங்களது தேவைக்கு சிக்கனமாய் பயன்படுத்தி, மீதிப்பணத்தை தமிழ்நாட்டிற்கு – குடும்பத்தி னருக்கு அனுப்பிட வேண்டும்‘‘ என அறிவுறுத்தி அவர்களிட மிருந்து தமிழர் தலைவர் விடை பெற்றார். விடுதிக்கு வந்து சேர இரவு 8 மணி ஆகிவிட்டது. சற்று நேர இளைப்பாறலுக்குப் பின்னர், அமெரிக்கா டல்லஸ்ஸிருந்து மாநாட்டிற்கு வந் திருந்த முனைவர் இலக்குவன் தமிழ் அவர்களுடன் பெரியார் உலக மயமாக்கல் பணி பற்றிய, வருங்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக சில மணி நேரம் தமிழர் தலைவர் கலந்து பேசினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்
22.07.2023 அன்று முற்பகல் பல்வேறு நிகழ்ச்சிகள் மாநாட்டு அரங்கில் நடைபெற்றன. ஆய்வாளர்களும், எழுத் தாளர்களும் தங்களுடைய படைப்புகளை, கட்டுரைகளைப் பல்வேறு உரை அரங்குகளில் வழங்கினர். பிற்பகல், மாநாட் டின் முறையான தொடக்கவிழா மாலை 4.00 மணியளவில் தொடங்கியது. மாநாட்டினை மலேசியப் பிரதமர் டத்தோ சிறீ அன்வர் இப்ராகிம் தொடங்கி வைத்தார்.
மலேசியப் பிரதமரின் தொடக்கவுரை
மாநாட்டுத் தொடக்க உரையினை அனைத்துப் பேராளர் களுக்கும் விளங்கும் வகையில் ஆங்கிலத்தில் மலேசியப் பிரதமர் வழங்கினார். தமிழ் மொழி, தமிழ் வம்சா வழியினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நிதி உதவிகள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டார். உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஏற்பாட்டிற்கு 1 மில்லியன் மலேசியன் வெள்ளி (ஒரு வெள்ளி = இந்திய ரூபாயில் ஏறக்குறைய 20) தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கும், உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட் டிற்கு 2 மில்லியன் வெள்ளியும், மலேயா பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் துறைக்கு 2 மில்லியன் வெள்ளியும் மலேசிய. அரசு வழங்கிடும் என்னும் ஆக்கரீதியான அறிவிப்பினை வெளியிட்டார்.
மலேசியப் பிரதமர் உரைக்கு முன்பாக மலேசிய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சரான வ.சிவக்குமார் பேசுகை யில் மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதையும், அதனை அதிகரிக்க மலேசிய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்திடும் எனக் கூறினார். கடந்த காலங்களில் பல்வேறு காலக்கட்டங் களில் மலேசியக் குடியுரிமை பெற்ற இந்திய வம்சா வளியினருள் கணிசமானவர்கள் தமிழர்கள். மலேசிய நாட்டின் வளர்ச்சியில், முன்னேற்றத்தில் தமிழர்கள் பெரும்பங்கு வகிக் கின்றனர். தமிழ் மொழியைக் கற்றுத் தரும் தமிழ் பள்ளிகள் பலவற்றிற்கு மலேசிய அரசு உறுதுணையாக இருக்கிறது எனக் கூறினார்.
தொடர்ந்து தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி பற்றிய புள்ளி விவரங்களை எடுத்துக் கூறினார். 1930களுக்கு முன்பு ஒவ் வொரு ஆண்டும் குறைந்துகொண்டு வந்த தமிழ்ப் பள்ளிக ளின் எண்ணக்கை 1930களில் அதிகரிக்கத் தொடங்கிய வந்த நிலையினை அமைச்சர் அளித்த பள்ளி விபரங்களின் மூலம் அறிய முடிந்தது. அந்த அதிகரிப்புகளுக்குக் காரணம் 1929லும் 1954லிலும் தந்தை பெரியார் மலேயா நாட்டிற்கு வருகை தந்து, தமிழ் மக்களையெல்லாம் சந்தித்ததுதான். அந்த சந்திப்புகளின் பொழுது மலேயா ரப்பர் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலா ளர்களிடம் அவர்களது பிள்ளைகளை படிக்க – பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிட வலியுறுத்தினார். அன்று பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பப்பட்ட பிள்ளைகள் வளர்ந்து அவர் களது சந்ததியினர் இன்று நல்ல நிலையில், பொறுப்பு வாய்ந்த பதவிகளிலும், தொழில் அதிபர்களாகவும் விளங்குகின்றனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் மேனாள் அமைச்சரும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ சிறீ சரவணன் அவர்களும் உரையாற்றினார். தொடக்க விழாவில், தமிழ்ப் பள்ளிகளில் படித்தோர், தமிழ் மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ் மாணவர்களுக்.கு மலேசிய நாட்டு பிரதமர் தங்கப்பதக்கத்தினை அணிவித்து பாராட் டினார். இந்தப் பாராட்டு நிகழ்விற்கு ஓம்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தியாகராஜன் பெரும் துணையாக இருந்தார்.
மாநாட்டின் தொடக்க விழா, அரங்கம் நிறைந்த விழாவாக, தமிழர்தம் நெஞ்சம் மகிழும் நிகழ்வாக நடந்தேறியது.
மாநாட்டு அரங்கினைவிட்டு வெளியேறி (பேராளர்களின் ஒளிப்படமெடுப்பு, செல்ஃபி) கடலில் நீந்தி கோலம்பூரிலுள்ள இந்தியா கேட் பகுதியிலுள்ள ஒரு செட்டிநாடு உணவகத்திற்கு தமிழர் தலைவரை தோழர்கள் அழைத்துச் சென்றனர். உடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் வந்தார். இந்தியா கேட் பகுதிக்கு வந்ததும் அங்காடி அமைப்புகள், விளம்பரங்கள், துணிக்கடை முன்பு இருந்த பொம்மை, தேநீர் கடை முன்பு தேநீர் ஆற்றுவது போல (இரண்டு கோப்பை களுக்குமிடையில் அருவி போல விழும் தேநீர்) ஒரு பொம்மை என தமிழ்நாட்டிற்குள் இருப்பது போலவே உணர்ந்தோம்.
பேராசிரியர் சுப.வீ. தந்த அதிர்ச்சி
உணவு விடுதிக்கு வந்ததும், வாகனத்தை விட்டு இறங்கி தலைவர் தோழர்களுடன் சென்றார். அப்பொழுது விடுதி வாயிலில் ‘ஒருவரது’ வீடியோ பேச்சை மிகவும் ஆர்வமாக ஒரு இளைஞர் நடைபாதையில் குறுக்காக நின்று கேட்டுக் கொணடிருந்தார். சற்று தள்ளி வந்து கொண்டிருந்த பேராசிரியர் சுப.வீ. அவர்களை நிமிர்ந்து பார்த்தும் அந்த இளைஞர் வியப்பில் நின்றுவிட்டார். யாருடைய சொற்பொழிவினை விரும்பி அந்த இளைஞர் கேட்டுக் கொண்டிருந்தாரோ அந்த சிறப்புக்குரியவரை நிமிர்ந்து நேரில் பார்த்ததும் பேசுவது அறியாது திகைத்து நின்றுவிட்டார். காண்பது கனவா, நனவா! நிழலா, நிஜமா! விடை தெரியாது விழித்து நின்றார். இயல்பு நிலைக்கு வந்த இளைஞரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, அவருடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு விடுதிக்குள் சுப.வீ. அவர்கள் சற்று தாமதமாக வந்தார்.
மலேசியாவில் உணவு விடுதிக்கு செல்லும் போதெல்லாம் ஒரு மாறுபட்ட சூழலைப் பார்க்க முடிந்தது. நமக்கு வேண்டிய உணவுத் தேவையைச் சொல்லி முடித்ததும், ‘என்ன தண்ணி வேண்டும்?’ என்று தவறாமல் அந்த விடுதிப் பணியாளர் கேட்பார். தொடக்கத்தில் அதன் பொருள் விளங்கவில்லை; தோழர்களிடம் கேட்டபொழுது சொன்னார்கள்: ‘தண்ணி’ என்றால் காபி, தேநீர், பழச்சாறு என தேவையைச் சொன்னால் உணவுப் பொருட்களைக் கொண்டு வரும் பொழுதே அதையும் சேர்த்து வழங்கிவிடுவார்கள்’ எனக் கூறியது கேட்டு, உணவும் தண்ணியும் சேர்ந்து உண்ணும் வழக்கத்தை அறிந்திட முடிந்தது
பின்னர் வேண்டியதைக் கேட்டு தலைவரும், தோழர் களும் உணவருந்திவிட்டு கிளம்புகையில், உணவு பரிமாறிய தோழர் ஒருவர் தமிழர் தலைவரிடம் வந்து ‘அய்யா நான் ‘பொத்தனூர்’ கிராமத்திலிருந்து வந்து இந்த விடுதியில் வேலை பார்க்கிறேன். க. சண்முகம் அய்யா அவர்களை நன்றாகத் தெரியும். சண்முகம் அய்யாவும் எனது மாமாவும் ஒன்றாகப் பழகுபவர்கள்’ பொத்தனூரில் இருந்த பொழுது நீங்கள் வந்து பேசியதைக் கேட்டிருக்கிறேன்’ என்றார். ஓர் உறவைப் பார்த்தவுடன் வெளிப்படும் பெரும் மகிழ்வுடன் தலைவருடன் பேசினார். ஒளிப்படமும் எடுத்துக்கொண்டார்; தனியாகவும் விடுதி முன்னர் நின்று உடன் பணியாற்று பவர்களுடனும் சேர்ந்து தன் செல்பேசியில் ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்.
மலேசியாவில் ‘எம்.ஜி.ஆர்’
முதல் நாள் ஒரு சீன உணவு விடுதிக்கு தோழர்கள் தமிழர் தலைவரை அழைத்துச் சென்றனர். சில புதிய தோழர்கள் உடன் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் தமிழர் தலைவரைப் பார்க்க வந்திருந்தார். தோழர் நாக பஞ்சு அவர்கள் தமிழர் தலைவரிடம் அந்தப் பெண்மணியை அழைத்துச் சென்று ‘இவர்தான் மலேசியாவில் சரோஜாதேவி’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். தமிழர் தலைவர் சற்று விளக்கம் வேண்டுவதை உணர்ந்து, நாக.பஞ்சு அவர்கள் ‘அய்யா மலேசியாவில் அய்ந்து ‘எம்ஜி.ஆர்.’கள் உள்ளனர். அந்த அய்வரும் மேடையில் எம்ஜி.ஆர். போல நடித்து இணையாக ஆடிப்பாட விரும்புவது இந்த ‘சரோஜா தேவி யுடன்’தான் என்று கூறினார் அவர்.
பெரும்பாலான மூத்த தமிழர்கள் இன்றைக்கும் எம்ஜி.ஆர். ரசிகர்களாகத்தான் உள்னர். எம்ஜி.ஆர். நினைவு நாளில் தனி அரங்குகளில் எம்ஜி.ஆர். நடித்த இரண்டு மூன்று திரைப்படங்களைப் பார்த்து மகிழ தொடர் காட்சிகளாக நடத்திடும் வழக்கம் நிலவுகிறது, தனிநபர், குடும்ப நிகழ்ச்சி களில், கலை நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக எம்.ஜி.ஆர் போல வேடமணிந்து திரைப்படத்தில் பாடலுடன் அவர் ஆடுவதைப் போல ஆடிக்களிப்பூட்டுவதும், இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது. மலேசிய நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ‘எம்.ஜி.ஆர்’ இருப்பார். அப்படிப்பட்ட பிரபலமான அய்ந்து ‘எம்.ஜி.ஆர்.’களும் இணைந்து நடிக்க விரும்புவது இந்த ‘சரோஜா தேவி’யுடன்தான் என்பது தெரிந்தது. அவரது இயற்பெயர் அன்பு செல்வி. தமிழர் தலைவரிடம் தனது ஆட்டோகிராப் புத்தகத்தில் கையொப்பம் பெற்றுக் கொண்டார். தலைவர் அவர்களும் சிரித்துக்கொண்டே கையெழுத்திட்டு கொடுத்தார்.
மலேசியா வாழ் தமிழர்களுக்கு ‘எம்.ஜி.ஆர்.’ என்றதும் அவர்களது நினைவுக்கு வருவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘புரட்சி நடிகர்’ எம்.ஜி.ஆர்.தான். பின்னாளில் அவர் அ.தி.மு.க. கட்சியினைத் தொடங்கி அதன் தலைவராக இருந்தாலும் அந்த அரசியல் அடையாளத்துடன் எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்க்க மாட்டார்கள். என்றைக்கும் அவர் ‘தி.மு.க. எம்ஜி.ஆர்.’தான்.
சென்ற முறை தமிழர் தலைவர் அனுப்பி மலேசியா பிரச்சாரத்திற்கு சென்ற பொழுது வடக்கு மலேசியாவில் சுங்கை பட்டாணியில் மலேசிய திராவிடர் கழகத் தோழர் அந்தப் பகுதியில் ம.தி.க.வை நிறுவிய முன்னோடிகளில் ஒருவரான ச. வடிவேலு அவர்களின் ஏற்பாட்டில் ஒரு கூட்டத்தில் பேசிட வாய்ப்பு கிடைத்தது. வடிவேலு அவர்கள் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், ம.திக. கூட்டங்களில் நிகழ்ச்சிக்கு முன்னும், பின்னும் எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடல்களைத் தான் ஒலிபரப்புவார். அவர் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு சற்று முன்னதாகவே சென்றுவிட்டோம். பார்வையளர்கள், தோழர்கள் வருவதற்கு காத்திருந்தோம். அப்பொழுது அவர் ஒலிபரப்பிய எம்.ஜி.ஆர். திரைப்படப் பாடல்களைத்தான் கேட்டுக் கொண்டிருந்தோம். நேரம் கழிந்தது தெரியவில்லை. தோழர்கள் வந்ததும் நிகழ்ச்சியை தொடங்கினோம். ச. வடிவேலு அவர்களை இன்றைக்கு நினைத்துப் பார்க்கும் வேளையில் அவர் உயிருடன் இல்லையே என்ற ஏக்கமும் ஏற்படுகிறது. வாழையடி வாழையாக ச. வடிவேலு அவர்களின் மகன். வ. கதிரவன் அவர்கள் சுங்கைப்பட்டாணியில் மலேசிய திராவிடர் கழகப் பொறுப்பாளராக இருக்கிறார் என்பது சற்று ஆறுதலாக உள்ளது.
(தொடரும்)