தொழிலாளர் கூட்டம் ஒன்று மேக்ஸ்ப்ரேதா (பான்சிலே) லேக்பார்க்கில் 20.6.1932ஆம் தேதி கூடியது. கூட்டத்தில் சுமார் 20, 30 ஆயிரம் பேர்கள் இருந்தார்கள். பக்கத்தில் பிரிட்டிஷ் தொழில் கமிட்டி தலைவர் தோழர் லான்ஸ்பரி அவர்கள் பேசினார். அதற்கு பதில் என்கின்ற முறையில் தோழர் ஈ.வெ.ராமசாமியால் இந்த உபன்யாசம் செய்யப்பட்டதாகும்.
தோழர்களே!
இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழில் கட்சியை மிக மிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஏனெனில், தொழில் கட்சித் தலைவராகியத் தோழர் லான்ஸ்பரி அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும், கொல்லுவதையும் தாம் சிறிதும் விரும்புவதில்லை என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார். ஆனால் எங்கள் கார்வாத் (Gharwath) சேனைகள் நிராயுதபாணி களான மக்களைச் சுடுவதற்கு மறுத்தற்காகத் தோழர். லான்ஸ்பரியின் தொழிற்கட்சி கவர்ன்மெண்டானது அந்தச் சிப்பாய்களுக்கு 15 வருஷ கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.
2. தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை ஆதரிப்பதாகவும், அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறை சாற்றுகிறீர்கள். ஆனால், எங்கள் ஏழை இந்திய சுரங்க வேலைக்காரர்களும் மற்ற தொழிலாளர்களும் சேர்ந்து ஒரு ட்ரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித்ததற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவி செய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்க விடாமல் உங்கள் தொழில் கட்சி அரசாங்கமானது மீரத்து சிறையில் அடைத்துப் போட்டு விட்டது.
3. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இந்தியர்கள் விஷயத்தில் மிக்க அனுதாப மிருப்பதாகவும், இந்தியர்கள் சுடப்படுவதையும் அடிக்கப்படுவதையும், சிறையில் அடைக்கப்படுவதையும், தாம் விரும்புவதில்லை என்றும் சொல்லிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் தோழர் லான்ஸ்பரியுடைய தொழில் கட்சி அரசாங்க கேபினட்டானது சுமார் 80,000 பேர் வரை இந்திய ஆண் பெண்களை ஜெயிலில் அடைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது.
ஆப்ரிக்கன் கிராமங்களின்மீது ஆயிரக்கணக்கான தடவை ஆகாயப்படை மூலம் கொடுமை செய்யப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான பர்மியர்களையும் கிராமத் தாரையும் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?
4. இந்திய சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு 8 அணா கூலிக்கு இந்தியர்களிடம் வேலை வாங்கப் படுகின்றது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் அய்ந்தணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழில் கட்சி அரசாங்கம் என்ன செய்தது?
5. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இங்கிலாந்தில் தொழிலாளிகளை ஆதரிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் இந்திய விஷயத்தில் தோழர் காந்தியையும், இர்வின் பிரபுவையும் கொடுமையான வட்ட மேஜை மகாநாட்டையும் ஆதரிக்கிறார். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்தியாவானது இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளிமார்களும், அய்ரோப்பிய வியாபரிகளுமே ஆதிக்கம் வகிக்கும் படியானதும் தொழிலாளிகளுக்கும் குடித்தனக்காரர்களுக்கும் பாத்தியமும் – பொறுப்பும், இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் இந்திய நிர்வாகம் நடக்கும் படியான காரியத்திற்கு உதவி செய்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?
6. தோழர் லான்ஸ்பரி அவர்கள் யுத்தத்தையும். யுத்த மூஸ்தீபையும் வெறுக்கிறதாக சொல்லுகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் துருப்புகளையும், பிரிட்டிஷ் வைசிராயையும் திருப்பி அழைத்துக் கொள்ள மறுக்கிறார்.
7. கடைசியாக இருந்த தொழிற் கட்சி அரசாங்கமானது இரண்டு வருஷகாலத்தில் அனுப்பிய ஆகாய சண்டைக் கப்பல்களையும், வெடிகுண்டுகளையும், மோட்டார் பீரங்கி வண்டிகளையும் கவசார் செய்த மோட்டார் வண்டிகளையும், யந்திரத் துப்பாக்கிகளையும், பிரிட்டிஷ் பட்டாளங்களையும் கணக்கு பார்த்தால் பால்ட்வின் அரசாங்கமானது தனது 5 வருஷம் ஆட்சியில் அனுப்பப்பட்டதை விட அதிகமாகவே இருக்கிறது. தோழர்களே!! இவற்றிலிருந்து பிரிட்டிஷ் தொழிலாளர் பார்ட்டி என்று சொல்லப்படும் சமதர்ம பார்ட்டி யின் யோக்கியதையை அறிந்து கொள்வது என்பது எங்களுக்கு மிக கஷ்டமாகவே இருக்கிறது.
ஆதலால் யாக்ஷையார் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலி கட்சிகளையும், கொள்கைகளையும், நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும் சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராட உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர் நோக்கிக் கொண்டிருங்கள்.
(20.6.1932)