தருமபுரி, ஜூன் 20- தருமபுரியிலிருந்து லடாக் வரை, 4,000 கி.மீ., துாரத்தை, இளம்பெண் ஒருவர் தனி யாக இரு சக்கர வாகனத்தில் சாகசப் பயணம் மேற் கொண்டு சாதனை படைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்தவர் ஸ்வேதா, (வயது 23). முதுகலை பட்டம் படித்துள்ளார்.
இதற்காக, கடந்த ஓராண்டாக தனக்கு தெரிந்த தையல் தொழில் மூலம், சிறுக சிறுக பணம் சேர்த்து, 2.50 லட்சம் ரூபாயில் ‘யமஹா ஜாரா’ இரு சக்கர வாகனம் வாங்கினார். பின்னர், தொலைதுாரப் பயணத்திற்குத் தன்னை மேம்படுத்திக் கொள்ள அவ்வப்போது 500, 1,000 கி.மீ., பயணங்களை மேற்கொண்டு, 10,000 கி.மீ., வரை பயணம் செய்து, அந்த அனுபவத்தால், கடந்த மே 30இல் அவருடைய பிறந்த நாளன்று, பாலக்கோட்டிலிருந்து லடாக் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சாகசப் பயணத்தை துவங்கினார். தொடர் மழை, கடும் வெயில் மற்றும் குளிரால் ஆங்காங்கே பயணத்தில் சிறு சிறு பிரச்சினைகளை சந்தித்தாலும், நாளொன்றுக்கு, 300 முதல் 350 கி.மீ., பயணம் மேற்கொண்டு, கடந்த 13இல் லடாக் சென்றடைந்து, லட்சியப் பயணத்தை நிறைவேற்றினார்.
இப்பயணம் பற்றி அவர் கூறுகையில், ”எனக்கு கிடைத்த அனுபவங்களை, மற்ற பெண்களுக்கு ஒரு வழி காட்டியாக இருக்க, தன் சமூக வலைதள பக்கத்தில், பல பாகங்களாக தொகுத்து வெளியிட உள்ளேன். இது, தனியாக சாகச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அனுபவத்தின் மூலம், இனி வரும் காலங்களில், சிறு சிறு குழுவாக சாகச பயணம் மேற்கொள்ளும் பெண்களை ஒருங்கிணைத்து, இந்தியா முழுதும் பல்வேறு இடங்களுக்கு, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உள்ளேன்” என்றார்.