சென்னை, ஜூன் 20 தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப்ப ணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசத்தை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமைப் பதிவாளரும், நீதித்துறை பதிவாளருமான ஜெ.செல்வநாதன் பிறப்பி்த்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு நடத்தும் பொருட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை சார்பில் ஏற்கெனவே அறிவிப்பாணை வெளியிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இந்த பதவிகளுக்கான இணையதள விண்ணப்பத்தை பதிவு செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் கால அவகாசம் வரும் ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி இதுவரையிலும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காத தகுதியான விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 26 வரை இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்தியன் வங்கியில் சலான் மூலமாக விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியும் வரும் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. முழுமையடையாத விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள், அதே பயனாளர் குறீயீட்டைப் பயன்படுத்தி அந்த விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment என்ற இணையதள முகவரியை அணுகலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வின்போது கிடைத்த சுடுமண் உருவ பொம்மை
சாத்தூர், ஜூன் 20- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் மனித உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை முதலாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த 2021-இல் தொடங்கப்பட்டன. அதில், சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் ஆன சுடுமண் பானை ஓடுகள், அழகிய வேலைப் பாடுகளுடன் கூடிய அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, தற்போது 2.28 செ.மீ உயரமும், 2.15 செ.மீ அகலமும் கொண்ட ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த 18.6.2024 முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக 3 குழிகள் தோண்டப்பட்டு, அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், 2-ஆம் நாளான நேற்று (19.6.2024) நடைபெற்ற அகழாய்வின் போது, உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, 20-க்கும் மேற்பட்ட கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
இந்த அகழாய்வின் போது, சுமார் 7 செ.மீ. ஆழத்தில் செங்கற்கள் குவியல் தென்பட்டது. இதன்மூலம், செங்கல் கட்டுமானம் கிடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.