சென்னை, ஜூன் 19- காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ராகுல் காந்தியின் பிறந்த நாளில் இன்று (19.6.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டு மக்களுக்கான அர்ப்பணிப்பு ராகுலை உயர்ந்த இடத்திற்கு அழைத்து செல்லும். தொடர்ந்து முன்னேற வாழ்த்துகள்
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்பதிவில் ராகுல் காந்தி குறித்த காட்சிப்பதிவையும் இணைத்துள்ளார். அக்காட்சிப் பதிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியுடன் கைகோத்திருக்கின்ற படத்துடன் HAPPY BIRTHDAY BROTHER RAHUL என்று குறிப்பிட்டுள்ளார்.
அக்காட்சிப்பதிவில், தமிழ்நாட்டைப்பற்றி அதிக மாகப் பேசுகிறீர்களே என்கிற கேள்விக்கு நான் தமிழர் என்று ராகுல் காந்தி கூறுவதும், கோவையில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்காக தானே இனிப்புக் கடைக்குச் சென்று இனிப்பு வாங்குகின்ற காட்சி, இனிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி இருவரும் ஆரத்தழுவுகின்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்காகவே
அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு!
– ஆர்.எஸ்.பாரதி தாக்கு
சென்னை, ஜூன் 19- சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர்
ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந் தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“தேர்தலின் போது, வாக்குச் சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992 பரங்கிமலை கண்டோன்மென்ட் தேர்தலில் முதல் முறையாக வாக்குச்சாவடியை கைப்பற்றும் வன்முறையை அறிமுகப்படுத்தியது அதிமுகதான். 2000 வாக்குகள் உள்ள வாக்குச் சாவடியில் 2300 வாக்குகள் போட்டது அதிமுக. ஆலந்தூர் நகராட்சியில் 20 பூத்துக்களில் 2000 ஓட்டுகளுக்கு பதில் 2300 ஓட்டு களை அதிமுகவினர் போட்டனர். அதிமுக நடத்திய பூத் கேப்சரிங் விஷயத் தால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்தான், தேர்தல் ஆணையம் யாருடைய ஆளாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதற்கு திமுகவை குறை கூறக் கூடாது. எப்படியாவது பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. மேலும், இடைத்தேர்தலில் வைப்புத் தொகை பறிபோய்விடும் என்ற அச்சம். அதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி பிதற்றுகிறார்.
எடப்பாடி பழனிசாமி தேர்தலை புறக்கணித்து விட்டோம் என்று அறிவித்துள்ள நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் யாரும் வாக்களிக்க மாட்டார்களா? வாக்களிக்க வேண்டாம் என கட்சிக்காரர்களை கேட்டுக் கொள்ளும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா?
அதிமுகவில் யார் யாரெல்லாம் வாக்களிக்கிறார்கள் என்று நாங்கள் கணக்கு எடுக்க உள்ளோம். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தான் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெறும்.
நாங்கள் வலுவாக உள்ளோம். திமுக ஆட்சியில் மக்கள் பயன்பெற்றுள்ளனர். அவர்கள், பாமக தலைவர் அன்புமணி தடுத்தாலும் திமுகவுக்குத்தான் வாக்களிப்பர் என்றார். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.