மோடி ஆட்சி 3.0 பதவியேற்று இரு வாரங்கள்கூட ஆகாத நிலையில், எழுத்தாளர் அருந்ததி ராய் மீது ‘உபா’ சட்டத்தின் நடவடிக்கை எடுக்க டில்லி துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கியிருக்கிறார்.
கடந்த பத்தாண்டு கால பா.ஜ.க ஆட்சியில், மோடி அரசின் கொள்கைகளையும், அதன் செயல்பாடுகளையும் விமர்சித்து எழுதியும், பேசியும் வந்தவர் எழுத்தாளர் அருந்ததி ராய். உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரான அருந்ததி ராய் மீது, ‘உபா’ (UAPA) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க டில்லி துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்திருக்கிறார்.
உபா சட்டத்தின் கீழ்
மோடி ஆட்சி 3.0 பதவியேற்று இரு வாரங்கள்கூட ஆகாத நிலையில், அவர் மீது உபா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ‘சுமார் 13 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வழக்குக்கு உயிர்கொடுத்து அருந்ததி ராயை ஆட்சியாளர்கள் டார்கெட் செய்வதன் நோக்கம் என்ன?’ என்று செயற்பாட்டாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.
1997ஆம் ஆண்டு A God of Small Things என்ற நாவலுக்காக ‘புக்கர் பிரைஸ்’ என்ற உயரிய விருதைப் பெற்றதன் மூலம் உலகப்புகழ் பெற்றார் அருந்ததி ராய். அதன் பிறகு, மனித உரிமை மீறல்கள், இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல், ஹிந்துத்துவா அரசியல் போன்றவற்றுக்கு எதிராக தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார் அருந்ததி ராய்.
கற்பனையின் முடிவு
ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளை விமர்சித்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவர் ஆற்றிய உரைகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில் பா.ஜ.க அரசின் பல்வேறு கொள்கைகளையும், செயல்பாடுகளையும் அவர் விமர்சித்துவந்தார். அதற்கு முன்பே, 1998ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியபோது, அதை விமர்சித்து ‘கற்பனையின் முடிவு’ என்ற தலைப்பில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை பன்னாட்டு அளவில் கவனம் பெற்றது.
சிறீநகரில் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி. ‘ஜம்மு-காஷ்மீர் சிவில் சொசைட்டி கூட்டமைப்பு’ சார்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், அருந்ததி ராய், மேனாள் பேராசிரியர் ஹுசைன், சையத் அலி ஷா கிலானி, கவிஞர் வரவர ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில், ‘காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருந்ததில்லை. இது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவின் ஆயுதப்படைகளால் வலுக்கட்டாயமாக காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டது’ என்று அருந்ததி ராய் பேசினார்.
சுதந்திரம் – ஒரே வழி
அதன் பிறகு, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ‘ஆஸாதி (சுதந்திரம்) – ஒரே வழி’ என்ற தலைப்பில் டில்லியில் 2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற கருத்தரங்கத்திலும், காஷ்மீர் பற்றிய தனது கருத்தை அவர் எடுத்துவைத்தார். அதைத்தொடர்ந்து, தேசத்துரோக கருத்துக்களை அருந்ததி ராய் பேசியதாக சர்சசை எழுந்தது.
’அருந்ததி ராய் உள்ளிட்டோர் ஆத்திரமூட்டும் வகையில் பேசினர்’ என்று சுஷில் பண்டிட் என்ற வலதுசாரி செயற்பாட்டாளர், காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆகவே, அருந்ததி ராய் கைது செய்யப்படலாம் என்று இந்திய ஊடகங்ளும், தி கார்டியன் உள்ளிட்ட பன்னாட்டு ஏடுகளும் பரபரப்பாக செய்தி வெளியிட்டன.
வழக்கு எதுவும் பதிவுசெய்யவில்லை
அன்றைக்கு ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘அருந்ததி ராய் மீது டில்லி காவல்துறை வழக்கு எதுவும் பதிவுசெய்யவில்லை’ என்று பதிலளித்தார்.
சுஷில் பண்டிட், டில்லி பெருநகர நீதிபதி நீதிமன்றத்தில் அருந்ததி ராய் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குத் தொடந்தார். அந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அருந்ததி ராய், காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசேன் ஆகியோர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் டில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தூசு தட்டி எடுப்பதற்கு டில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதியளித்தார். அதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ, 153 பி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அருந்ததி ராய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிரபீர் புர்கயாஸ்தா
பா.ஜ.க அரசின் கொள்கைகளையும், அதன் பல்வேறு செயல்பாடுகளையும் விமர்சித்து ‘நியூஸ்க்ளிக்’ இணையதளத்தில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகின. இந்த நிலையில், அந்த நிறுவனமும், அதில் கட்டுரைகள் எழுதிய பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள் என எதிர்க்கட்சிகள் சாடின. ‘நியூஸ்க்ளிக்’ இணையதள நிறுவனர் பிரபீர் புர்கயாஸ்தா உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
தேசத்துரோகச் சட்டம், ’உபா’ சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்கள், பத்திரிகை யாளர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பிணை கிடைக்காமல் நீண்டகாலம் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் அருந்ததி ராயும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து பி.யூ.சி.எல் எனப்படும் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான வழக்குரைஞர் ச.பாலமுருகனிடம் கூறுகையில், “உபா எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ‘பொடா’ சட்டத்தை நீக்கிவிட்டு, ‘உபா’ சட்டத்தில் பல திருத்தங்களைக் கொண்டு வந்து, அதை ஒரு கொடூரமான சட்டமாக உருமாற்றினர். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், ‘உபா’ சட்டத்தில் மறுசீராய்வு அம்சம் ஒன்று இருக்கிறது. உபா சட்டத்தின் கீழ் காவல்துறை பதிந்த வழக்கு, அது தொடர்பாக அவர்கள் சேகரித்த ஆதாரங்கள் ஆகியவை சரியா, தவறா என்பது ஆய்வு செய்யப்படும். அதன் பிறகுதான், அந்த வழக்கை விசாரிக்க அனுமதி வழங்கப்படும்’ என்று கூறினார்.
அப்படித்தான், கடந்த ஆண்டு ‘உபா’ சட்டத்தின் கீழ் அருந்ததி ராய் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. முன்பு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் மீதுதான் ‘உபா’ போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவார்கள். ஆனால், தனிநபர்களையும் பயங்கரவாதிகளாகக் கருதி, இத்தகைய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்ற நிலையை 2018ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்தது.
ஜனநாயகத்துக்கு விரோதமான ஒரு சட்டம்
அதன் பிறகுதான், சுதந்திரமான சிந்தனையாளர்கள் பலரும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். மற்ற வழக்குகளில் விசாரணை நடைபெற்ற பிறகுதான், தண்டனை வழங்கப்படும். ஆனால், உபா சட்டத்தில் தண்டனைக்குப் பிறகுதான் விசாரணையே நடைபெறும். அப்படியொரு கொடூரமான, ஜனநாயகத்துக்கு விரோதமான ஒரு சட்டம் இது. சுதந்திரமான சிந்தனையை முடக்குவதற்கான ஆயுதமாக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில், ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களும் செல்லரித்துவிட்ட நிலையில், இந்த ஆட்சியின் தொடக்கத்திலேயே அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது நல்ல சமிக்ஞை அல்ல” என்று தெரிவித்தார்.
– நன்றி: விகடன் இணையம், 15.6.2024