திருப்பதி, ஆக.28 அலிபிரி மலைப்பாதையில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் 4 வயது சிறுவன் கவுசிக் காயங்களுடன் மீட்கப்பட்டார். நெல்லுரை சேர்ந்த 6 வயது சிறுமி லட்ஷிதா சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து கடந்த 50 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஜூன் 24ஆம் தேதி முதலில் பிடிபட்ட சிறுத்தை மட்டும் பாக்ராப் பேட்டை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இதில், லட்ஷிதாவின் மனித மாமிசம் சாப்பிட்டதற்கான மரபணு உள் ளதா? என்றும், லட்ஷிதாவின் மரபணுவுடன் ஒத்துபோகிறதா? என்பதையும் அறிந்து அதனை தனிமைப்படுத்த 2 சிறுத்தை களுக்கும் ரத்தம், நகம், முடி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும், மரபணு சோதனை முடிவுகள் தெரியவில்லை.
இந்த நிலையில், கரடியும் அவ்வப்போது நடைபாதையில் வருகிறது. இதனைத் தொடர்ந்து திருப்பதியில் மலைப் பயணம் செய்யும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கைத்தடி ஒன்று வழங்கப்படும் எனத் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. மேலும் திருப்பதி மலைப் பாதையில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மலைப் பயணம் செல்ல அனுமதி அளித்து திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் உத்தர விட்டு இருந்தது.
இதனிடையே அலிபிரி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை யடுத்து நடைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது வனத்துறை கேமராவில் 4ஆவது முறையாக மீண்டும் சிறுத்தை பதிவாகி இருப்பது பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் உள்ள நரசிம்மர் கோவில் பகுதியில் கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்துள்ளது. இதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கரடியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.