சென்னை, ஜூன் 17- நிகழாண்டில் 2.15 லட்சம் ஆமைக் குஞ்சுகளை கடலுக்கு அனுப்பி, வனத் துறை சாதனை செய்துள்ளதாக தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத் துறை சார்பில் 15.6.2024 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழ்நாட்டின் 1076 கி.மீ. நீள கடற்கரையில் இனப்பெருக்கம் மற்றும் முட்டையிட கடல் ஆமைகள் வருகின்றன. குறிப்பாக, ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கா்ஹெட் ஆமை மற்றும் லெதா்பேக் ஆமை ஆகிய அய்ந்து வகை கடல் ஆமைகள் வருகின்றன. கடல் ஆமைகளுக்கான பருவம் ஒவ்வோர் ஆண்டும் நவம்பா் மாதத்தில் தொடங்கும். இந்தக் காலத்தில் வனத்துறை தற்காலிக குஞ்சு பொரிப்பகங்களை உருவாக்குதல், நாள்தோறும் இரவு ரோந்து பணிகளைத் தொடா்தல், மாணவா்கள் மூலம் கடல் ஆமைகள் பாதுகாப்பு கூடு கட்டுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்கிறது.
நிகழாண்டு ஆமைகள் கூடு கட்டும் பருவத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 8 பிரிவுகளில் 53 குஞ்சு பொரிப்பகங்களை வனத்துறை அமைத்தது. 2363 கூடுகள் மூலம் மொத்தம் 2,58,775 முட்டைகள் சேகரிக்கப்பட்டு, அவை துறைசார் குஞ்சு பொரிப்பகங்களுக்கு மிக நுட்பமாக இடமாற்றம் செய்யப்பட்டன. இந்த அனைத்து குஞ்சு பொரிப்பகங்களிலும் ஒவ்வொரு குஞ்சும் வெளிவரும் வரை, இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு செய்யும் போது அனைத்து கூடுகளின் அளவீடுகள் மற்றும் வெப்பநிலை உட்பட அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. நிகழாண்டு வனத் துறை, 2,15,778 ஆமைக் குஞ்சுகளை கடலுக்கு அனுப்பியுள்ளது, இதுவே, இதுவரை பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையில் அதிகபட்சம். கடந்த ஆண்டு 1,82,917 குஞ்சுகள் அனுப்பப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.