நம் இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு கொள்கைத் தங்கம் தோழர் யாழ்திலீபன்!
எங்கள் இயக்கத்தைப் பொறுத்தவரையில் வசதி, வாய்ப்பைப் பொறுத்து நாங்கள் அளவுகோலை வைப்பதில்லை;
கொள்கையைத்தான் அளவுகோலாகக் கொள்கிறோம்!
கடலூர், ஜூன் 17 ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கின்ற சூழ்நிலையில், எங்கள் இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு கொள்கைத் தங்கம் தோழர் யாழ்திலீபன் அவர்கள். அடக்கம், கட்டுப்பாடு, உறுதிமிக்கவர் நம்முடைய யாழ்திலீபன் அவர்கள். யாழ்திலீபன் அவர்களுடைய பிள்ளைகளின் வளர்ப்பு என்பது சிறப்பாக அமைந்ததொன்றாகும். எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணமான தோழர். அவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். இவருக்குத்தான் முன்னுரிமை எங்கள் இயக்கத்தைப் பொறுத்தவரையில். வசதி, வாய்ப்பைப் பொறுத்து நாங்கள் அளவுகோலை வைப்பதில்லை. கொள்கை யைத்தான் அளவுகோலாகக் கொள்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்: யாழ்வீரமணி – த.ரஞ்சிதா
கடந்த 10.6.2024 அன்று புவனகிரியில் கழகச் சொற்பொழிவாளரும், சிதம்பரம் மாவட்ட கழக இணை செயலாளருமான யாழ்திலீபன் – இளமதி இணையரின் மகன் யாழ்வீரமணி அவர்களுக்கும், பெ.தமிழ்ச்செல்வம் – தனலட்சுமி ஆகியோரின் மகள் த.ரஞ்சிதா அவர்களுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
யாழ்திலீபன் – இளமதி இல்ல மணவிழா!
எழுச்சியோடும், மன மகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய அருமைத் தோழர்கள் யாழ்திலீபன் – இளமதி ஆகிய இயக்க உறவுகள் என்று நாங்கள் பெருமையோடு நினைக்கக்கூடியவர்களுடைய அன்புச் செல்வன் நம்முடைய அருமைத் தோழர் யாழ்வீரமணி அவர்களுக்கும், அதேபோல, ஆச்சாரபுரம் திருவாளர்கள் தமிழ்ச்செல்வம் – தனலட்சுமி ஆகியோருடைய செல்வி ரஞ்சிதா ஆகியோருக்கும் நடைபெறக்கூடிய இந்த வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய கனிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்கள் குடும்பத்துத் திருமண விழா!
அருமைத் தோழர்களே, இந்த மணவிழாவினைப் பொறுத்தவரையில், தோழர் யாழ்திலீபன் அவர்களுடைய குடும்பத்து மணவிழா என்றால், அதற்கு என்ன மற்றொரு பொருள் என்று கூறவேண்டுமானால், அது என்னுடைய, எங்கள் குடும்பத்துத் திருமண விழா என்ற பெருமையோடும், உறவோடும் இம்மணவிழாவினை நடத்தி வைக்கின்றோம்.
இங்கே நண்பர்கள் சொன்னார்கள், தோழர்கள் சொன்னார்கள், ஒரு சாமானியனுக்காக நம்முடைய தலைவர் அவர்கள் இங்கே வந்திருக்கின்றார் என்றுகூட, நம்முடைய மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் சொன்னார்.
சாமானியர்களுக்காகத்தான் இந்த இயக்கமே!
இந்த இயக்கமே சாமானியர்களுக்காகத்தான்; இந்த இயக்கத்தினுடைய கடைசித் தொண்டன் நான்தான். ஆகவே, இந்த சாமானியன், வேறு எந்த சாமானியனுக்காக செல்லாமல் இருப்போம்.
ஆகவேதான், நன்றாக, மகிழ்ச்சியோடு அவர்கள் விரும்பியபடி இந்த மணவிழாவில் கலந்துகொள்ளக்கூடிய அரிய வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்திருக்கிறது.
நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவைக் காணவிருக்கிறது. இது நூறாவது ஆண்டு தொடக்கம் – ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் நூறாண்டைத் தொடவிருக்கின்றது. இரண்டு இயக்கமும் கொள்கை எதிரிகள் – நேரிடையாக. இரண்டு அமைப்பும் சமரசம் செய்துகொள்ளாத, செய்துகொள்ள முடியாத லட்சிய மாறுபாடுடைய பயணிகள்.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், 94 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உடையது- இந்தச் சுயமரியாதைத் திருமணம்.
இயக்கம் தொடங்கி, அந்த காலத்திலேயே ஒரு சில ஆண்டுகளைத் தவிர, உடனே இந்த சுயமரியாதைத் திருமணம் தொடங்கிவிட்டது.
வர்த்தக சங்கத் தலைவர் துரைராசு
நேற்றுகூட (9.6.2024) என்னுடைய பேரன் திரு மணம் கடலூரில். அந்த மணவிழாவினை நடத்தி வைத்தோம். அங்கே இங்கே இருக்கக்கூடிய வர்த்தக சங்கத் தலைவர் துரைராசு வந்து, சந்தாக்களைக் கொடுத்தார். அவருடைய தாத்தா திருமணத்தைப் பெரியார் அவர்கள்தான் நடத்தினார்.
எங்கே நடத்தினார் என்று சொன்னால், உங்க ளுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும். இந்தத் தகவலை, ‘‘சுயமரியாதைத் திருமணம் தத்துவமும், வரலாறும்” என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றோம்.
1928 இல் சிங்கப்பூர் நாயுடு வீட்டுத் திருமணம்!
1928 ஆம் ஆண்டு, ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஏழு, எட்டு வீடுகள் இருக்கக்கூடிய ஒரு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தைப் பார்ப்பதற்காகவே ஆயிரக்கணக்கா னோர் திரண்டிருந்தனர். இப்படி ஒரு திருமணமா? சிங்கப்பூர் நாயுடு வீட்டுத் திருமணம்தான் அது. அன்றைக்கு மாலை மஞ்சைநகர் மைதானத்தில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றினார். அப்பொழுது அவர்மீது அழுகிய முட்டை, மலத்தை நிரப்பிய முட்டையைத் தூக்கி எறிந்தனர். அந்த நாற்றத்தையும் சகித்துக்கொண்டு, தனது உரையை நிறுத்தாமல், சால்வையைப் போர்த்திக்கொண்டு தந்தை பெரியார் அவர்கள் மூன்று மணிநேரம் உரையாற்றினார்.
நானே, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை திருமணத்தை நடத்தி வைக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன். அந்த அளவிற்குக் கொள்கையோடு இருக்கிறார்கள் நம்மவர்கள்.
நான் நடத்தி வைத்தேன் என்றால், என்னுடைய வாழ்க்கை நீண்டுவிட்டது என்பதற்காகச் சொல்ல வில்லை. இந்தக் கொள்கை நிலைத்துவிட்டது என்ப தற்காகச் சொல்கிறேன்.
இன்னமும் புரோகிதத் திருமணங்கள் நடைபெறு கின்றன. இன்னமும் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. மூடநம்பிக்கைகள் இல்லாமல் இருக்குமா?
தேர்தலில் இராமனும்
தோற்றுப் போனான்!
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் மட்டும் தோற்றுப் போகவில்லை; இராமனும் சேர்ந்தே தோற்றுப் போனான்.
சீதை தோற்று போனார், இராமன் தோற்று போனான். இராமனுக்காக கட்டிய கோவிலும் தோற்றுப் போய்விட்டது. அதனால் என்ன செய்தார் மோடி?
இந்த இயக்கம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதற்காக சொல்லுகிறேன்; அரசியலுக்காக நான் சொல்லவில்லை. சமூகக் கண்ணோட்டத்தோடு ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன்.
பதவி ஏற்பதற்கு முன், தலைவரைத் தேர்ந்தெ டுத்தார்கள் அவர்களுடைய கட்சியில்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்றபொழுது, அங்கே தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி, இராசா ஆகியோரின் பெயரைச் சொல்லும்பொழுது, ‘‘பெரியார் வாழ்க! அண்ணா வாழ்க! காமராசர் வாழ்க! கலைஞர் வாழ்க!” என்று சொன்னார்கள். ஆனால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், ‘‘ஜெய் சிறீராம், ஜெய் சிறீராம்” என்று சொன்னார்கள்.
கடவுளை மாற்றிய மோடி!
ஆனால், இந்த முறை மோடி, இராமனைப்பற்றி குறிப்பிடவே இல்லை. அதற்குப் பதில் என்ன செய்தார் என்றால், கடவுளை மாற்றிவிட்டார். சரியாக வேலை செய்யவில்லை என்றால், அந்த வேலையாளை டிஸ்மிஸ் செய்வார்கள் பாருங்கள், அதுபோன்று, மோடி அவர்கள், கடவுளை மாற்றிவிட்டார்.
‘‘ஜெய் சிறீராம்” என்பதற்குப் பதிலாக, ஒடிசா கடவுளான ‘ஜெய் ஜெகன்னாத்” என்று சொல்கிறார்கள்.
ஜெகன்னாத்தை எப்பொழுது மாற்றுவார் என்றால், மீண்டும் தோற்றுப் போகும்போது மாற்றிவிடுவார். மாற்றுவதற்கு நம்மிடம் ஏராளமான கடவுள்கள் இருக்கிறார்கள். கடவுள்களுக்குப் பஞ்சமில்லை.
பார்ப்பனர்கள் பல தந்திரங்களைச் செய்தார்கள்; இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், சுயமரியாதைத் திருமண முறையை ஒழிப்பதற்குப் பார்ப்பனர்கள் பல தந்திரங்களைச் செய்தார்கள்; இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் அவர்களுடைய முயற்சி முடியவில்லை.
ஏனென்றால், இது ஒரு தேவாசுரப் போராட்டம்; இது ஒரு பரம்பரை யுத்தம். ஆள்கள் மாறுவார்கள்; களம் ஒரே களம்தான்.
அந்தக் களத்தில் ஆரிய – திராவிடப் போராட்டம்.
ஒரு காலகட்டத்தில், பெரியார் – இராமன் – இராவண னாக இருக்கும்.
பிறகு, பெரியாராக மாறும். இராவணனின் இடத்தில் பெரியார் இருப்பார். பிறகு, காமராசர் இருப்பார், அம்பேத்கர் இருப்பார். இன்னொரு காலகட்டத்தில் கலைஞர் இருப்பார். இன்றைக்கு மு.க.ஸ்டாலின் இருக்கிறார், இராவணனாக.
இராவணனின் பேரன் என்றார்
முத்தமிழறிஞர் கலைஞர்!
ஒருமுறை சொன்னார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், நான் யார் தெரியுமா? இராவணனின் பேரன் என்றார். இராவணன் என் பாட்டன் என்றார்!
‘‘தென்திசையைப் பார்க்கின்றேன்,
என்சொல்வேன்
என்சிந்தையெல்லாம்
தோள்களெலாம் பூரிக்குதடா!”
என்று புரட்சிக்கவிஞர் பாராட்டிப் பாடினார்.
அப்படி மாறிக்கொண்டே வரக்கூடிய சூழ்நிலையில், இப்பொழுது நம்முடைய திலீபன் அவர்கள், யாழ்திலீ பன் என்று வைத்து, யாழ்வீரமணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எல்லா யாழ்களும் இங்கேதான் இருக்கின்றன.
6 வகையான யாழ் உண்டு!
யாழுக்குப் பதிலாக வீணை வந்துவிட்டது
யாழையே ஒழித்துவிட்டார்கள். யாழுக்குப் பதிலாக வீணை வந்துவிட்டது. நன்றாக கவனியுங்கள் – இரண்டு வார்த்தைகள்தான் – யாழில், மகர யாழ் உள்பட 6 வகையான யாழ் உண்டு.
இவர்கள், யாழ்ப்பாணத்தை மனதில் வைத்துக்கொண்டுதான், பெயரில் யாழ் என்பதை வைத்திருக்கிறார்கள். யாழ் தமிழர்கள். வெறும் கருவியை வைத்துப் பெயரை வைத்துக்கொள்ளவில்லை.
ஆனால், அந்தக் கருவியின்படியே, யாழ்ப்பாணர்கள் என்று வந்திருக்கிறார்கள். யாழை வைத்து, பாணர்கள்.
ஆனால், ஆரியம் படையெடுத்தவுடன், அந்த இடத்தில் வீணை வந்துவிட்டது.
பாரதியார் பாட்டில்கூட,
‘‘நல்லதோர் வீணை செய்து
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?” என்று இருக்கிறது.
‘‘நல்லதோர் வீணை” என்றுதான் அவர் எழுதி யிருக்கிறார் பாட்டில். ஆனால், பாரதிதாசன் என்று பெயர் வைத்துக்கொண்ட புரட்சிக்கவிஞர் அவர்கள்,
‘‘துன்பம் நேர்கையில்
யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?” என்று பாடல் எழுதினார்.
தமிழர்கள் திருமணத்தில், பார்ப்பனியம் புகுந்ததினுடைய விளைவு!
இப்பொழுது யாழை எங்கு தேடினாலும் கிடை யாது. யாழ் இருந்த இடத்தில் வீணை வந்தது. அது தான், தமிழர்கள் திருமணத்தில், பார்ப்பனியம் புகுந்த தினுடைய விளைவுதான் அது.
யாழ் இப்பொழுது யாரிடம் இருக்கிறது?
திலீபனிடமும், மணமகன் வீரமணியிடமும்தான் இருக்கிறது.
யாழ்திலீபன், யாழ்வீரமணி, நம்மாட்களில் யாழினி என்று பெயர் வைக்கின்றோம்.
இவர் யாழ்ப்பாணத்துக்காரர் என்பதையே மறந்துவிட்டோம். இது யாழ் குடும்பமாகும்.
வாயில் நுழையாத பெயராக
தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள்!
தம்முடைய இல்லத்துப் பிள்ளைகளுக்கு யாழ் என்று தொடங்கும்படிதான் பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய நாட்டில், வாயில் நுழையாத பெயராக தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கிறார்கள்; ஷ், புஷ் என்று.
எங்கள் இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு கொள்கைத் தங்கம் தோழர் யாழ்திலீபன்
ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையில், எங்கள் இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு கொள்கைத் தங்கம் தோழர் யாழ்திலீபன் அவர்கள்.
அடக்கம், கட்டுப்பாடு, உறுதிமிக்கவர் நம்முடைய யாழ்திலீபன் அவர்கள்.
கொள்கையைத்தான்
அளவுகோலாகக் கொள்கிறோம்!
யாழ்திலீபன் அவர்களுடைய பிள்ளைகளின் வளர்ப்பு என்பது சிறப்பாக அமைந்ததொன்றாகும். எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதாரணமான தோழர். அவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தார். இவருக்குத்தான் முன்னுரிமை எங்கள் இயக்கத்தைப் பொறுத்தவரையில். வசதி, வாய்ப்பைப் பொறுத்து நாங்கள் அளவுகோலை வைப்பதில்லை. கொள்கையைத்தான் அளவு கோலாகக் கொள்கிறோம்.
சில பேர் நினைக்கின்றார்கள்,
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என்கிற குறளுக்குப் பொருள் சொல்கிறார்கள், இன்றைக்கும்கூட!
செய்தொழில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எல்லோரும் சமம்தான்.
ஆனால், நம்முடைய மனதில் ஒரு தவறான கருத்து என்றால், விமானம் ஓட்டுபவருக்குப் பெயர் ‘‘பைலட்’’. இவருக்குப் பெயர் ஆட்டோ டிரைவர்.
பைலட்டிற்கு சம்பளம் அதிகம். அவருக்கு எதிரே எந்த வண்டியும் வராது. அப்படித் தப்பித்தவறி வண்டி வந்தால், அதோடு பயணங்கள் கதி? சரி.
பைலட்டை விட, ஆட்டோ ஓட்டுநர்
மிகச் சிறப்பு வாய்ந்தவர்!
ஆனால், ஆட்டோ டிரைவருக்கு எதிரே எல்லா வண்டிகளும் வரும். அதையெல்லாம் பார்த்து ஆட்டோவை செலுத்தி, சந்தில், பொந்தில் புகுந்து உங்களுடைய உயிரைக் காப்பாற்றி, நீங்கள் செல்லுமிடத்திற்குச் சென்று விடுகிறார் பாருங்கள்; பைலட்டை விட, இவர்தான் மிகச் சிறப்பு வாய்ந்தவர்.
அதேபோன்று, ரயில் என்ஜின் டிரைவர் என்று மிகப் பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், ரயில் என்ஜின் டிரைவர் எதிரே, இன்னொரு ரயிலை விடுவார்களா? மோடி ஆட்சியில், நேருக்கு நேர் நிறைய ரயில்கள் முத்தம் கொடுத்தன என்பது வேறு விஷயம்!
அவன் சேற்றில் காலை வைக்கவில்லை என்றால், நாமெல்லாம் சோற்றில்
கைவைக்க முடியாது!
ஆனால், சமூகத்தில் அதிகமான வேலை செய்யக்கூடிய தொழிலாளிக்குப் பெயர்தான் எங்கள் ஆதிதிராவிட சகோதரர். எங்கள் சகோதரர். அவன் சேற்றில் காலை வைக்கவில்லை என்றால், நாமெல்லாம் சோற்றில் கைவைக்க முடியாது.
இன்றைக்கு இவ்வளவு பேர் சாப்பிடுகிறோம், தலைவாழை இலை போட்டு. அவன் சாப்பிடவில்லை என்பதற்காக நாம் அரிசியாகவே கொடுத்துவிடுகிறோம், மூட்டைக்கட்டி.
(தொடரும்)