“காந்தியார் 1934இலும், 1947இலும் ஆர்.எஸ்.எஸ். கிளைகளுக்குச் சென்று அளவளாவி, அதன் பணிகளைச் சிலாகித்துப் பேசினார். 1934இல் ஆர்.எஸ்.எஸைத் தொடங்கி ஹெட்கேவார் வாழ்ந்தபோது காந்தியாரும், பஜாஜ் ஸ்கூட்டர் கம்பெனி நிறுவனர் ஜம்னாலால் பஜாஜூம் மகாராட்டிரா வார்தா நகரில், ஆர்.எஸ்.எஸ். ஷாகா கிளை ஒன்றுக்குச் சென்றனர்.
“ஆர்.எஸ்.எஸ்.சின் கட்டுப்பாடு, தேசபக்தி, எளிமை, தீண்டாமை இல்லாமை எல்லாம் தன்னை ஈர்த்தது” என்று தெரிவிக்கும் காந்தியார், 1947இல் டில்லியில் ஆர்.எஸ்.எஸ். கிளைக்குச் சென்ற அவர், வார்தாவில் தான் சென்று பார்த்த பிறகு ஆர்.எஸ்.எஸ். பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. சேவை, தியாகம் இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட எந்த அமைப்பும் வளரவே செய்யும். தியாகத்துடன், தூய்மையான நோக்கமும், உண்மை அறிவும் அவசியம். இல்லையென்றால் தியாகமும், சேவையும் கூட சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும்” என்று சொன்னார். இதை வெளியிட்டது காந்தியார் நடத்திய ஹரிஜன் பத்திரிகை (28.9.1947)
காந்தியார் – ஆர்.எஸ்.எஸ். கருத்து ஒற்றுமை
தன்னை ஸநாதனி ஹிந்து என்று கூறிக்கொண்ட காந்தியார், நாட்டின் ஒருமைப்பாட்டைப் பற்றிக் கூறும் போது ‘நாடு முழுவதும் இருக்கும் கோவில்கள், சேத்திரங்கள், புண்ணிய நதிகளுக்கு கோடிக்கணக்கான மக்கள் செல்வதால் தான் இந்த நாடு ஒருமைப்பட்டிருக்கிறது’ என்று கூறினார். “இது ஹிந்துக்களுக்குத்தானே பொருந்தும்? முஸ்லீம்களுக்கு அல்லவே” என்று கேட்டபோது, வெளிநாட்டு மதம் ஒன்று வந்ததால் நம் நாட்டின் தன்மை மாறிவிடாது. அவர்களை நம்முடன் assimilate செய்ய வேண்டும் (நம் அங்கமாக்க வேண்டும்) என்று தெரிவித்தார் காந்தியார்.
எனவே, நமது நாட்டில் ஹிந்து தேசியம் பற்றி காந்தியார் – ஆர்.எஸ்.எஸ். இடையே கருத்து ஒற்றுமை இருக்கிறது. முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தக் கூடாது. காந்தியார் கூறியதுபோல் அவர்களை தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். நோக்கம். இந்த நாடு ஹிந்து நாடு இல்லை என்கிறார் காந்தியார். நம் தேசியம் கலாச்சார ஹிந்து தேசியம், நம் நாடு ஹிந்து நாடு, அதாவது ஹிந்து பேரரசு அல்ல என்பதை ஏற்கிறது ஆர்.எஸ்.எஸ். காந்தியார் போல் ஆர்.எஸ்.எஸ்.சும் தேசப் பிரிவினைகளை எதிர்த்தது. சித்தாந்த ரீதியாக காந்திக்கும், ஆர்.எஸ்.எஸ்.க்கும் ஒற்றுமை இருக்கிறது.”
– துக்ளக் 19.6.2024, பக். 9, 10