அண்மையில் சிங்கப்பூரில் ‘ஓய்வு’ – ‘இளைப்பாறுதல்’ என்றழைக்கப்படுவது பெரியார் தொண்டனாகிய எம்மைப் போன்றவர்களுக்கு ‘விருப்பமான வேறு பணியில் மகிழ்தல்’ என்று புதிய கோட்பாட்டிற்கேற்ப, தந்தை பெரியார் அவர்களது உரைகள் – எழுத்துகள் – அறிக்கைகளை மறுவாசிப்புச் செய்தும், மேலும் சில புதிய பயனுறு வாழ்வியல் புத்தகங்களையும் படித்து, மகிழ்ந்தேன்.
காலம் வெகு விரைவில் ஓடி விட்டது!
அண்மையில் வெளியாகி, உலகம் முழுவதும் ஏராளமாக விற்பனையாகும் நூல்களில் ஒன்றான “When Things Don’t Go Your Way” என்ற ேஹமின் சுனீம் என்ற பிரபல ஜென் பவுத்தர் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது!
வாழ்வியலுக்கான பாட நூல்களில் இது ஒரு கருத்துச் சுரங்கம். அவசியம் படித்து மகிழ வேண்டிய நவில்தொறும் நூல் நயம் உள்ள தெகட்டாத தேன் போன்றுள்ளது!
வாழ்க்கையில் பல பிரச்சினைகளைப் புதிய கோணத்தில் அணுகி அலசிடும் இந்நூலை வாங்கிப் படியுங்கள் – கருத்துகளை அசை போடுங்கள்.
நமது வாழ்வில் நீட்சியை விரும்புவது மனித சுபாவம் – எவரும் இதற்கு விதி விலக்கல்ல’ ஆனால் அதற்குரிய வழிமுறைகளை, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி செயல் வடிவம் தருகிறோமா என்பது பற்றி நம்மில் பலரும் ‘விதைக்காது நம் கழனி விளைச்சல் தர வேண்டும்’ என்று நினைப்பது எவ்வகையில் நியாயமாகும்?
வாழ்க்கையில் வெற்றி என்பதை பலரும் சம்பாதிக்கும் பணத்தினைக் கொண்டே மதிப்பிடும் போக்கு உள்ளது! பணம் வேறு; செல்வம் வேறு! (Money is not Wealth).
பணம் மூலம் சேருவது உண்மையான செல்வம் அல்ல.
நிலைத்த நிம்மதியும் மகிழ்ச்சியும் தருவதும் அல்ல மாறாக, அறிவு மூலம் பெறும் செல்வம் தான் உண்மையில் பெரும் செல்வம் ஆகும்!
எடுத்துக்காட்டாக பகுத்தறிவுச் செல்வம், கல்விச் செல்வம், தொண்டறச் செல்வம் என இப்படி பலப்பல!
பலருக்கு உழைப்பே உன்னத உயர் செல்வம்! அதை நம்பும் எவருக்கும் தோல்வி என்பது இல்லை; இல்லவே இல்லை!
வெற்றி பெற்ற பலருக்குக்கூட எளிதில் தூக்கம் வருவதில்லை என்றால், தோல்வி அடைந்து துன்பத்தில் உழலுகிறவர்களுக்கு எளிதில் தூக்கம் வருமா என்ன?
வெற்றி பெற்றவர்களுக்கு தூக்கம் வராத காரணம்; அளவற்ற மகிழ்ச்சி; அளவற்ற மகிழ்ச்சி யின்போதுகூட தூக்கம் எளிதில் வருவதில்லை! அடுத்த கட்ட கவலை அடுத்தத் தொடராக அவர்களைத் தூங்க விடாமல் புரள புரளச் செய்கிறது!
பெற்ற வெற்றியை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்பதே அக்கவலை; இது நியாயமானதும், தேவையானதுமே!
அதற்குரிய ஆர்ப்பாட்டமில்லை, அமைதி வழிச் சிந்தனையும் செயலாக்கமும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி விடை காண விரைந்து வரும்! குறிப்பிட்ட இந்த நூலில் நூலாசிரியர் ஒரு புது விதியைக் குறிப்பிடுகிறார்!
வெற்றி என்பதை பெற்ற பணச் செல்வத்தால் மட்டுமே அளக்காமல் இரவில் நீங்கள் தூங்கும் தூக்கத்தின் தரம் (Quality of Your Sleep) மூலம் அளக்கலாம். அதாவது மதிப்பீடு செய்யலாம் என்கிறார்!
ஏழு முக்கிய வழி முறைகளை – நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு வழிகாட்டி – நமக்கு நன்னம்பிக்கையை ஊட்டுகிறார்!
அவற்றை விளக்கமாக நாளை முதல் பார்க்கலாமா?
(வளரும்)