பார்ப்பனிய ஆதிக்கம் திராவிடர்க்கு இழைத்துவரும் பாதகத்தைக் கண்டு சிந்தை நொந்து, “நமக்குள்ளே மறைவாக நாசமடைவதைக் காட்டிலும் நானிலமறிய வெளிப் படையாக நாசமாக்கப்படுவது நல்லதல்லவா?” என்று திராவிட இளைஞூர்கள் சீற்றத்துடன் கேட்டனர்,
போராட்டம்
“போராட்டம்! போராட்டம்! என்ற உங்களின் பேரொலியைக் கேட்டுப் பொறுங்கள்! பொறுங்கள்!! எனக் கையமர்த்தினேன். இனியும் நான் அவ்வாறு செய்ய நமது சர்க்கார் இடங்கொடுக்கவில்லை! இனிப் போராட்டந்தான் என்று சர்க்கார் சொல்லும்போது நான்தான் என்ன செய்வேன்! எதிர் நடவடிக்கை வேண்டும் என்கிறீர்கள்! எனக்கு ஒன்றும் ஆட்சே பனையில்லை! இனித்தடை செய்ய வேண்டும் என்பதும் என் விருப்பமில்லை! இதை நீங்கள் தெளிவாய் அறிந்து கொள்ளுங்கள்! ஆனால் மற்றொன்றை நீங்கள் மறத்தலாகாது! சிறிதாவது நியாயத்திற்குச் செவி சாய்க்கும் வெள்ளையன் ஆட்சி இப்போதில்லை! இப்போது நம்மை ஆளுபவர்கள் அகிம்சாவதிகளான நம்மவர்கள்! ஜீவகாருண்யம் என்று பெரும் பேச்சாய் பேசிக் கொண்டு “விதையை” கரைத்தே ஆட்டினையும், மாட்டினையும், அதைப் போன்ற மற்றும் பல ஜீவன்களையும் அழித்து யாக வேள்வி நடத்தும் அகிம்சாவாதிகள் நடத்தும் ஆட்சியில் நாம் இருக்கிறோம்! இதை நீங்கள் மறக்கக் கூடாது. இந்த ஆட்சியில் நேரடி நடவடிக்கையென்றால் எந்த இழப்புக்கும், எப்போதும் நீங்கள் தயாராயிருக்க வேண்டும்! தொழிலைக் கருதாமல், தொந்தரவை எண்ணாமல், வாழ்வை மதியாமல், மனைவி மக்களை விலங்கு என்று கொள்ளாமல், ஒழிப்போம் இழிவை! ஒடுக்குவோம் அடக்கு முறையை! வாழ்வோம் மனிதர்களாக! இன்றேல் மடிந்தொழிவோம் வீரர்களாக! என்ற முடிவுக்கு வந்திருப்பவர்கள் எத்தனை பேர்? இதை நான் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு என்ன?” இவ்வாறு கேட்டார் படைத்தலைவர், தந்தை பெரியார்.
அடக்குமுறையை எதிர்த்து
“எனக்கு வயது 70 ஆகிவிட்டது. அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியது சுடுகாட்டில்தான். அதற்குள் ஒரு கை பார்த்துவிடத் தான் போகிறேன்.”
இந்தக் கர்ஜனையைக் கேட்டு எந்த மந்த மதியினர்க்குத்தான் உணர்ச்சி உண்டாகாதொழியும்! “இந்த ஆணவ மந்திரிசபை ஒழிக! கட்டாய ஹிந்தி ஒழிக! என்ற பேரொலியோடு, கூட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் “அடக்கு முறை ஆயுதங்களை எதிர்த்தொழிப்போம்” என்று கைதூக்கித் தங்கள் தங்கள் உடன்பாட்டை அறிவித்த கண்கொள்ளாக் காட்சிகள்” எப்படி உண்டாகாமலிருக்கும்?
இதுவரை சுற்றுப் பிரயாணம் செய்த ஒவ்வொரு ஜில்லாவிலும் 500 பேர், 1000 பேர், 1000க்கு அதிகமான பேர் என்று சொல்லத்தக்க வகையில் “எப்பொழுதும் நாங்கள் போராட்டத்திற்குத் தயார்” என்று பெரியார் அவர்களிடம் நேரில் வந்து உறுதி கூறிய காட்சியையும், “இன்னும் சில நாள் பொறுங்கள்” என்று படைத்தலைவர் பகர்ந்து வரும் காட்சியையும் கேட்டுக்கேட்டு நாம் பூரிப்படைகிறோம்.
நமக்கு வரும் கடிதங்களைக் குறித்து இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
“எதற்காக இந்தக்கால தாமதம்? நம்முடைய வலிமையை நம் தலைவர் அறியமாட்டாரா? இப்பொழுது எதற்காக ஒவ்வொரு ஜில்லாவுக்குமாக செல்லவேண்டும்? இந்தத் தள்ளாத வயதில், நெருக்கடியான நேரத்தில் இந்த மாதிரியான ஒரு முயற்சி செய்யத்தான் வேண்டுமா? களத்தைக் குறிப்பிடச் சொல்லுங்கள்! காரிய மாற்ற நாங்கள் தயார்! எப்பொழுது? எப்படி? இதுதானே இப்பொழுது வேண்டும்” என்று துடி துடிப்போடு எழுதியிருக்கிறார் ஒரு தோழர்.
வீரத்திற்கு எடுத்துக்காட்டு
“நான் ஒரு தொழிலாளி. எனக்கு நான்கு குழந்தைகள் உண்டு. என் மனைவிக்கு இது ஆறாவது மாதம். இருந்தாலும் தாங்கள் நடத்தவிருக்கும் போராட்டத்தில் நான் பங்கு எடுத்துக் கொள்ளுகிறேன்; நான் மட்டுமல்ல என் வாழ்க்கைத் துணைவியும்தான். குழந்தைகளை அதனதன் இயற்கைக்கு விட்டுவிடவேண்டிய தாயிருக்குமே என்பதைப் பற்றி நாங்கள் கவலைப் படவில்லை. எப்பொழுது உங்கள் உத்தரவு? இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று எழுதியிருக்கிறார் இன்னொரு தோழர்.
“அய்யா! முந்திய போராட்டத்தி லேயே கலந்து கொண்டவன் நான். இப்பொழுது ஆரம்பிக்கவிருக்கும் போராட்டத்தில் எனக்கும் முதலிடம் தரவேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். எக்காரணம் கொண்டும் இதை மறுக்கக் கூடாது” இவ்வாறு உரிமையை நிலை நாட்டிப் பாத்தியதை கேட்கிறார் இன்னொரு தோழர்.
வந்த கடிதங்களில் இங்கு நாம் இரண்டொன் றைத்தான் குறிப்பிட்டிருக்கின்றோம். சில தோழர்கள் வஞ்சினங்கூறி எழுதி, ரத்தத்திலேயே கையெழுத்திட்டு அனுப்பியிருக்கிறார்கள்.
சுருக்கமாகக்கூறவேண்டுமென்றால், இக்கடி தங்கள் இந்நாட்டு மக்களின் வீரத்திற்கு ஒரு எடுத் துக்காட்டாய், என்றும் அழிவுறாத இலக்கியமாக விளங்கத் தகுந்த பெரும் பொக்கிஷமென்று கூற வேண்டும்.
ஈவு இரக்கமற்ற, வன்கண்மையும் குரூரமே உருவான இப்போதைய அகிம்சா மூர்த்திகளின் சுயரூபத்தையும், அவர்களின் அட்டூழியமான அக்கிரமப் போக்கையும் கண்டபிறகே, பெரியார் அவர்களால் இக்கொடிய சூழ்நிலையை நன்றாக விளக்கிக் கூறப்பட்ட பிறகே இத்தனை ஆயிரம் தோழர்கள் கச்சையை வரிந்து கட்டி எங்கு? எப்பொழுது? எப்படி? என்ற கேள்விகளைப் போட்டு முழக்கஞ் செய்கின்றார்கள் என்பதைக் கேட்கும் போது எந்தத் திராவிடன் தான் மகிழ்ச்சியடையாதிருப்பான்?
இன இழிவைத் துடைக்க
ஆதிக்கத்தை முறியடிக்க, பார்ப்பனியச் சுரண்டலை படுகுழியில் புதைக்க, முன்னேற்றப் பாதையில் எடுத்து அடிவைத்து நடக்க முடியாத இன இழிவைத் துடைக்க, இந்தத் திராவிட இன உணர்ச்சியுடைய இளைஞூர்கள் மட்டுமோ, எத்தனையோ காங்கிரஇ திராவிடத் தோழர்களும் கலந்து அய்க்கியமடையக் காத்திருக்கிறார்கள் என்பதையும் நாமறிகிறோம்.
வீர முழக்கம்
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என்று ஆண்டவனுக்கும் உலக மக்கள் நிகழ்ச்சிக்கும் தத்துவம் காட்டும் மெய்யன்பர்களின் போக்கை மறுத்து, ஆட்டுவிப்பவன் யார், அவன் எங்கிருந்து கொண்டு எப்படி எதனால் ஆட்டுகின்றான் என்று கேட்கும் எந்த பகுத்தறிவுவாதிதான், “ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே” என்று இப்போதைய மந்திரி சபையைக் குறித்துக் கூறும் போது எப்படி மறுத்துவிட முடியும்? பார்ப்பனர்களும் – பனியாக்களும் ஏவியபடியெல்லாம் ஏவல் கேட்கும் இந்த மந்திரி சபை. இந்த மந்திரி சபை அமைவதற்கு என்ன அடிப்படையோ அந்த அடிப்படை அழிந்தொழிய, இந்த நாட்டு ஆட்சியின் அமைப்பு வேறு எவரின் தலையீடுமற்ற நிலையில் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிமைப் போராட்டம், மந்திரி சபையின் வெற்றிகரமான பின் வாங்கும் நடத்தையால் சிலநாள், கால தாமதமானால் ஆகுமே தவிர, எப்படியும் போராட்டம் நடந்துதானே தீரும்! நடந்துதானே ஆக வேண்டும்! இந்த உறுதியும் உரமும் பெற்ற உணர்ச்சி வெள்ளத்தைத்தான், திராவிடர்களின் வீர முழக்க பேரொலியைக் கேட்டுக் கண்களுள்ள எவரும் காணவேண்டும்.
நிற்க, தொண்டர்களுக்கு இந்த நேரத்தில் நாம் இவைகளைக் கூற வேண்டுமென்று ஆசைப்படு கிறோம். இன இழிவைத் துடைப்போம்! எவர் தடுப்பினும் எதிர்ப்போம்! எப்பொழுது போராட்டம்? இப்போதே நாங்கள் தயார்! என்று தினவெடுக்கும் தோள்களையுடைய செந்தமிழ் வீரர்களே! இப்போராட்டத்தில் எங்கள் பங்கு என்ன குறைச்சலா என்று மனம் புழுங்கும் தாய்மார்களே! இளைஞர்களே!
போராட்ட முறையில் நீங்கள் கைக்கொள்ள வேண்டிய முதல் பாடம் கட்டுப்பாடு. கட்டுப்பாட்டுக் கடங்கிப் போர்த்தலைவன் குறித்த வேளையில், குறித்த இடத்தில், குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய நீங்கள் ஆயத்தமாயிருக்க வேண்டும்! உங்களுடைய சக்தியைச் சிதறடிக்க பார்ப்பனியம் பல வலைகளை வீசும்! ஏமாந்து விடாதீர்கள்! எழுச்சியையே ஆயுதமாகக் கொண்டு, வேறு எந்தக் கொலைக் கருவியையும் கைக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும் உங்களை, தவறான பாதையைக் காட்டி சரிந்து விழுவதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்யும் பார்ப்பனிய அதிகாரவர்க்கம்! அதற்கு ஒத்துழைத்து பின்பாட்டுப் பாடி ஒத்து ஊதி தாளம் போடும் பணக்கார வர்க்கம்! உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு உலுத்தர்களின் ஏமாற்றத்திற்கு உள்ளாகாதீர்கள்!
உங்களுடைய சக்தியனைத்தும் கட்டுப்பாடாய் ஒருமுகமாக ஒரு முனையிலே செலுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்! கட்டுப்பாட்டோடு கூடிய எழுச்சியே, நம் காரியத்தை வெற்றிபெறச் செய்யும் என்பதை நினைவில் வையுங்கள்.
‘குடிஅரசு’ – தலையங்கம் – 10.07.1948
பார்ப்பனர்களும் – பனியாக்களும் ஏவியபடியெல்லாம் ஏவல் கேட்கும் இந்த மந்திரி சபை. இந்த மந்திரி சபை அமைவதற்கு என்ன அடிப்படையோ அந்த அடிப்படை அழிந்தொழிய, இந்த நாட்டு ஆட்சியின் அமைப்பு வேறு எவரின் தலையீடுமற்ற நிலையில் அமைக்கப்பட வேண்டுமென்ற உரிமைப் போராட்டம், மந்திரி சபையின் வெற்றிகரமான பின் வாங்கும் நடத்தையால் சிலநாள், கால தாமதமானால் ஆகுமே தவிர, எப்படியும் போராட்டம் நடந்துதானே தீரும்! நடந்துதானே ஆக வேண்டும்! இந்த உறுதியும் உரமும் பெற்ற உணர்ச்சி வெள்ளத்தைத்தான், திராவிடர்களின் வீர முழக்க பேரொலியைக் கேட்டுக் கண்களுள்ள எவரும் காணவேண்டும்.