அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் முதல் மாதம் தோறும் ரூ.ஆயிரம் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் தொடக்கம்! முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

viduthalai
3 Min Read

சென்னை, ஜூன் 15 அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 அளிக்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில்…

பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் 10, 12 ஆம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கும் விழா, 67 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடக்க விழா ஆகிய அய்ம்பெரும் விழா சென்னை நேருஉள்விளையாட்டு அரங்கில் நேற்று (14.6.2024) நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில்

100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்குதல், அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
அவர் பேசியதாவது:

காலை உணவு, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் என பள்ளிக்கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில்,மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, நான் சந்தித்த மாண விகள் அனைவரும் இதை பாராட்டினர்.

பொற்காலத்தை நோக்கி...

அந்த மகிழ்ச்சி மாணவர்களின் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக, மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தேன். ஆகஸ்டில் இருந்து மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும். பள்ளிக்கல்வித் துறை பொற்காலத்தை நோக்கி முன்னேறி வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஸ், வெளிநாடுகளுக்கு சென்று பார்வையிட்டு,அங்குள்ள நவீன வசதிகள் இங்கு நம்குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார்.பள்ளிக்கல்வித் துறையை உலகத் தரத்துக்கு உயர்த்த தொடர்ந்து முயற்சிமேற்கொண்டு வருகிறார். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றார். அமைச்சர்கள் உதயநிதிஸ்டா லின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், பாடநூல் கழக தலைவர் லியோனி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் நன்றி கூறினார்.

எங்கும் தேங்காமல் முன்னோக்கி ஓடுங்கள்: முதலமைச்சர் அறிவுரை!

விழாவில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
செயற்கை நுண்ணறிவு (‘ஏஅய்’) தொழில்நுட்பம் பெரிய பேசுபொருளாக ஆகியுள்ளது. எனவே, புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்மை ‘அப்டேட்’ செய்துகொள்வது அவசியம். நிதி நெருக்கடி இருந்தாலும், கல்வித் துறையில் பல திட்டங்கள் தொடங்குகிறோம் என்றால், அது மாணவர்களாகிய உங்க ளுக்காகத்தான். எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களை கேட்டுக்கொள்வது ஒன்றுதான். படியுங்கள், படியுங்கள், படித்துக்கொண்டே இருங்கள். உங்கள் கண்முன்னால் ‘ஃபுள்ளிஸ்டாப்’ தெரியக்கூடாது. ‘கமா’ மட்டும்தான் தெரியவேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல் முன்னோக்கி ஓடிக்கொண்டே இருங்கள், வென்றுகொண்டே இருங்கள். பிரகாசித்துக் கொண்டே இருங்கள், முதலமைச்சருக்குப் பெருமை தேடி தாருங்கள்.

உங்களில் இருந்து பல ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாக வேண்டும்!

பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற தலைமை ஆசிரியர்கள், தமிழில் முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களை பாராட்டுகிறேன். நீங்கள் பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். உங்களில் இருந்து பல ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாக வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் வாழ்த்துகிறேன்– உங்கள் கனவுகள் மெய்ப்படட்டும்!

கல்விதான் யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. அதிலும் மோசடிகள் நடப்பதால்தான், நீட் தேர்வை எதிர்க்கிறோம். இந்த மோசடிக்கு ஒருநாள் முடிவுகட்டுவோம். நீங்கள் அனைவரும் உலகை வெல்லும் ஆற்றல் பெற்று, பகுத்தறி வோடு செயல்பட முதலமைச்சராக மட்டு மல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவும் வாழ்த்துகிறேன். உங்கள் கனவுகள் மெய்ப்படட்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *