வேலூர், ஜூன் 15- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் பயனாளிகள் வீடு கட்டுவது குறித்து புதிய தகவல் ஒன்றினை கூட்டுறவுத்துறை வெளியிட்டிருக்கிறது.
புதிய திட்டம்:
கலைஞரின் கனவு இல்லம் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். “குடிசையில்லா தமிழகம்” என்ற இலக்கை அடையும் வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக கான்கிரீட்(ஆர்சிசி) கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அறிவிப்பு:
இந்த அறிவிப்பை தொடர்ந்து, இதற்கான அரசாணையை ஊரக வளர்ச்சி துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியிருந்தன. தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி கிராம பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் இதற்கான பணிகள் துரிதமாகி உள்ளன.. அந்தவகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4000, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4000, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3073 என 4 மாவட்டங்களில் மொத்தம் 15 ஆயிரத்து 73 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கி: ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 3.5 லட்சம் ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்படும்.. பயனாளிகள் தங்களுடைய வீடுகளை தாங்களே கட்டிக்கொள்ள வேண்டும்.. அரசு சார்பில் இருந்து நிதி மட்டுமே ஒதுக்கப்படும்.. கூடுதலாக நிதி தேவை ஏற்படும் பட்சத்தில் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக 1 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் பயனாளிகளுக்கு 9.50 முதல் 10 சதவீதம் வட்டியில் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சம் பயனாளிகளுக்கு கடன் வழங்குமாறு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநர், கூட்டுறவு பதிவாளருக்கு தற்போது கடிதம் எழுதியிருக்கிறாராம்.
இதையடுத்து, கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், வீடுகட்டும் பணிகள் வேலூர் மாவட்டத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது.