22.11.1936 மாலை 7:30 மணிக்கு மேற்படி சங்க கட்டடத்தில் மாதாந்திரப் பொதுக் கூட்டமொன்று தோழர் கே. எஸ். எஸ். ராஜன் அவர்கள் தலைமையின் கீழ் கூடியது. அது காலை தோழர்கள்: டி.என்.லெட்சுமணப்பா, கே.சுந்தரராஜன், வி.கோதண்டபாணி முதலியோர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பொது ஸ்தாபனங்களாகிய ஆலயங்களில் பிரவேச உரிமையை தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளித்ததைப் பற்றியும், தோழர் வி.ஒ. சிதம்பரம் அவர்கள் இறந்து விட்டதைப் பற்றியும், அன்னாரின் குணாதிசயங்களைப் பற்றியும் சொற்பொழிவாற்றினார்கள். பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேறின.
1. திருவாங்கூர் சமஸ்தானத்தின் அதிகாரத்துக்குள்பட்ட பொது ஸ்தாபனங்களாகிய ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட சகோதார்களுக்கு உரிமை அளித்ததைப் பற்றி திருவாங்கூர் மகாராஜாவை இக்கூட்டம் பாராட்டுவதோடு, இதற்குக் காரணமாக இருந்த நமது மாபெரும் தலைவர் தோழர் ஈ.வெ.ராவால் நடத்தப்பட்ட வைக்கம் சத்யாகிரக நோக்கத்தை முற்றுப்பெறச் செய்த திவான் சர். சி.பி.ராமசாமியையும், மகாராஜா அவர்களையும் இக்கூட்டம் முழுமனதுடன் வாழ்த்துகிறது.
2. தமிழ் நாட்டின் திலகமான தூத்துக்குடி வி.ஒ. சிதம்பரம் அவர்கள் இறந்ததைப்பற்றி இக்கூட்டம் ஆழ்ந்த துக்கமடைவதோடு அன்னாரின் குடும்பத்தாருக்கு இக்கூட்டம் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இத்துடன் தலைவர் முடிவுரைக்குப் பின் காரியதரிசியால் வந்தனோபசாரம் கூறப்பெற்று கூட்டம் இனிது முடிந்தது.
– ‘விடுதலை’ – 25.11.1936