எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த நுழைவுத் தேர்வை எதிர்த்து 21 ஆண்டு காலம் தொடர்ந்து போராடி வெற்றி பெற்றோம் – அதுபோல ‘நீட்’ தேர்விலும் வெற்றி பெறுவோம்!
ஆறு மாதத்திற்குப் பிறகு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு,
‘நீட்’ தேர்வுக்கு வழியனுப்பு விழா நடைபெறுவது உறுதி!
திருத்தணி, ஆக.28 எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார். அந்த நுழைவுத் தேர்வை திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து எதிர்த்து 21 ஆண்டுகாலமாகப் போராடி, அதில் வெற்றி பெற்றோம்.அதுபோல, இந்த நீட் தேர்விலும் வெற்றி பெறுவோம். இன்னும் 6 மாத காலம்தான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி. அதற்குப் பிறகு நிச்சயமாக மாறிய ஆட்சியில், நீட் தேர்வுக்கு வழியனுப்பு விழா நடைபெறும்என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (27.8.2023) திருத்தணிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
குளறுபடிகள் இல்லாமல் இதுவரை
நீட் தேர்வு நடைபெற்று இருக்கிறதா?
செய்தியாளர்: தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று தி.மு.க. சார்பிலும், அதன் கூட்டணி கட்சி களின் சார்பிலும் பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு, மாணவர்களின் எதிர்காலத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறார்கள்; இதை உங்களுடைய பார்வையில் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: நீட் தேர்வு என்பது மிக ஆபத்தான ஒன்று. மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாடக் கூடிய ஒன்று. இந்த நீட் தேர்வை எந்த நோக்கத்திற்காகக் கொண்டு வந்தோம் என்று சொன்னார்களோ, அந்த நோக்கம் இதுவரை நிறைவேறியதாக அவர்கள் யாரும் நிரூபிக்கவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு, குளறுபடிகள் இல்லாமல், ஊழல் இல்லாமல், ஆள் மாறாட்டம் இல்லாமல், பணச் செலவுச் செய்யாமல் இதுவரை அவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்களா, என்றால், கிடையாது.
நீட் தேர்வு குறித்து பல வழக்குகள் நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கின்றன; ஆள்மாறாட்டம் செய்தவர்கள் நீதிமன் றங்களால் தண்டனை அளிக்கப்பட்டு சிறைச்சாலைக்குச் சென்றிருக்கின்றார்கள். அப்படியென்றால், அந்த நீட் தேர்வி னுடைய நோக்கமே தோற்றுப் போய்விட்டது என்றுதானே அர்த்தம்!
இரண்டாவதாக, அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான தேர்வு நடக்கின்றது என்று சொல்வதிலும் நியாயம் இல்லை.
இவர்கள் வேண்டும் என்றே – தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலத்தில், ஏராளமான மருத்துவர்கள் வரு கிறார்கள்; அவர்களுடைய தரம் பெரிய அளவில் இருக்கின்றன.
உ..பி. போன்ற வட மாநிலங் களிலிருந்து போதுமான அள விற்கு மருத்துவர்கள் வர வில்லை என்பதினால், இங்கே அவர்களுக்கு பயிற்சி கொடுங்கள்; மருத்துவ இடம் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி, இது வரையில் அதன்படி செய் கிறார்கள்.
‘நீட்’ தேர்வினால்
எந்தவிதமான பலனும் கிடையாது
ஒரு காலத்தில் நீதிக்கட்சி வருவதற்கு முன்பாக, சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் மருத்துவப் படிப்பிற்கே மனு போட முடியும் என்ற நிலை இருந்ததே – அதை இன்றைக்கு வேறு விதமாக மாற்றி, நீட் தேர்வு என்று கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த நீட் தேர்வினால் எந்தவிதமான பலனும் கிடையாது. நீட் தேர்வு எழுதாமலேயே, இங்கே படித்து டாக்டர்களான நிறையப் பேர் அமெரிக்கா போன்ற பல வெளிநாடுகளில் பணியாற்றுகி றார்கள். அவர்கள் சிறப்பான அளவிற்குத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலை இருக்கும்பொழுது, நீட் தேர்வுதான் தகுதி – திறமைக்கு அடையாளம் என்று சொல்வதே பித்தலாட்டம், புரட்டு.
அந்த நீட் தேர்வை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வினால் இதுவரை 22 உயிர்கள் பலிவாங்கப்பட்டு இருக்கின்றன.
தமிழ்நாடு நீண்ட நாள்களுக்கு முன்பு சொன்னதை, மற்ற மாநிலங்களில் இப்பொழுதுதான் புரிந்துகொண்டு நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் என்பது மக்கள் போராட்டமாகும்!
ஆகவேதான், நீட் எதிர்ப்புப் போராட்டம் தொடரும். இதனை சட்ட பூர்வமாக செய்யவேண்டும் என்றால், இங்கே இருக்கின்ற ஓர் ஆளுநர் சண்டித்தனம் செய் கிறார்; நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நீண்ட நாள்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். பல எதிர்ப்புகளுக்குப் பிறகு, அம்மசோ தாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு, அம்மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
எனவேதான், நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டம் என்பது மக்கள் போராட்டமாகும். மக்கள் நலன் எதுவோ அதை செய்யவேண்டிய கடமை ஓர் அரசாங்கத்தி னுடையதாகும். மக்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்தான் அந்த அரசாங்கம் பிரதிபலிக்கவேண்டும். அப்படி மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்பொழுது, குறுக்குச்சால் ஓட்டக்கூடாது.
21 ஆண்டுகள் தொடர்ந்து போராடி
நுழைவுத் தேர்வை ஒழித்தோம்!
எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது, நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தார். அந்த நுழைவுத் தேர்வை திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து எதிர்த்து 21 ஆண்டுகாலமாகப் போராடி, அதில் வெற்றி பெற்றோம்.
அதுபோல, இந்த நீட் தேர்விலும் வெற்றி பெறுவோம். இன்னும் 6 மாத காலம்தான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி. அதற்குப் பிறகு நிச்சயமாக மாறிய ஆட்சியில், நீட் தேர்வுக்கு வழியனுப்பு விழா நடைபெறும்.
சட்டப் போராட்டத்தைவிட,
மக்கள் போராட்டம் வெற்றி பெறும்!
செய்தியாளர்: உச்சநீதிமன்றத்தினுடைய உத்தரவுப் படித்தான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தி இருக்கின்றோம் என்று சொல்கிறார்களோ?
தமிழர் தலைவர்: உச்சநீதிமன்றத்தினுடைய உத்தரவு என்பது இறுதியானது அல்ல. ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தால், மேல்முறையீடு வழக்கு விசாரணையில் அந்தத் தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றது.
உச்சநீதிமன்றத்திற்கு முழுமையான தகவல்கள் போகவில்லை; உச்சநீதிமன்றத்தினுடைய அமைப்பு முறையிலேயே பல தகவல்கள் இப்போது புதிதாக வரும்பொழுது பல செய்திகளை எடுத்து வைக்கலாம்.
அதிகாரம் இருக்கிறதா? என்று கேட்பதற்கு வாய்ப்பில்லை.
மருத்துவக் கல்வியில், ஒத்திசைவுப் பட்டியலில் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கும்பொழுது, மாநில அரசின் அனுமதியில்லாமல், ஒன்றிய அரசு புகுத்தியது சட்டப் பூர்வமாக தவறு என்கிற வாதங்கள் இதுவரை வைக்கப் படவில்லை. சட்ட நுணுக்கத்தோடு பல செய்திகள் எடுத்து வைக்கப்படும்.
ஆகவேதான், உச்சநீதிமன்றத்தினுடைய அமைப்பு முறை மாறுகின்றபொழுது, நீதிபதிகள் ஒரே வகையில் சிந்திக்க மாட்டார்கள். சட்டப் போராட்டத்தைவிட, மக்கள் போராட்டம் வெற்றி பெறும்!
செய்தியாளர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறார்; திராவிட மாடல் ஆட்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உங்களுடைய கருத்து என்ன?
தமிழர் தலைவர்: ஒவ்வொரு மாவட்டங்களிலும் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பான வகையில் ஆய்வு செய்து வருகிறார். தமிழ்நாட்டில், 17 லட்சம் குழந்தை களுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். இந்தியாவில், வேறு எந்த மாநிலத் திலாவது இது போன்ற திட்டம் உண்டா?
இந்தியாவிலேயே ஊட்டச் சத்துக் குறைவாக உள்ள குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலம் எதுவென்றால், இன்றைய பிரதமராக உள்ள மோடி அவர்கள், முதல மைச்சராக இருந்த மாநிலமான குஜராத் மாநிலம்தான்.
உலக சுகாதார அமைப்பின்
புள்ளி விவரம்!
‘‘குஜராத் மாடல்”, ‘‘குஜராத் மாடல்”, ‘‘வளர்ச்சி, வளர்ச்சி” என்று சொல்லி, மக்களை ஏமாற்றினார்கள். ஆனால், ஊட்டச் சத்து அதிகம் உள்ள குழந்தைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்பதை உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அப்படியானால், தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதற்கு அதுவே ஒரு மிகச் சிறந்த சான்றாகும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவச் செல்வங்கள் பசியில்லாமல் படிப்ப தற்கு காலைச் சிற்றுண்டி, பகல் சத்துணவு போன்றவை மிகச் சிறப்பாக அளிக்கப்படுகின்றன.
ஆகவேதான், கல்வி, சுகாதாரம், அடிப்படை வாழ்வாதாரம், மகளிர் பாதுகாப்பு என்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.
இதுவரையில் உத்தரப்பிரதேசத்தில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர்; குஜராத்தில் 40 ஆயிரம் பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர்.
பெண்களுக்குப் பாதுகாப்பான
மாநிலம் தமிழ்நாடு !
மத்திய பிரதேசத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு பெண், எங்களுக்குத் தமிழ்நாட்டில்தான் பாதுகாப்பு; எங்களை மத்திய பிரசேத்திற்கு அனுப்பாதீர்கள் என்று வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கின்றார் என்றால், இந்த ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்!
சிறப்பான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. வேண்டுமென்றே இவ்வாட்சியை குறை சொல்பவர் களைப்பற்றி கவலையில்லை.
கடந்த இரண்டு ஆண்டு காலத்தில், தமிழ்நாடு ஆளுநர் ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தவிடாமல், குறுக்குச்சால் ஓட்டியும், போட்டி அரசாங்கத்தை நடத்தியும் இடையூறை செய்துகொண்டிருக்கிறார். மாநில அரசின் நிதிநிலையில், தொய்வு ஏற்படும் நிலையை ஒன்றிய அரசு உருவாக்குகிறது.
உலகத்தின் பல பகுதிகளுக்கு எடுத்துக்காட்டான ஆட்சியாக விளங்குகிறது
இதையெல்லாம் சமாளித்து நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். இந்தியா விலுள்ள மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு ஆட்சியைப் பின்பற்றுகின்ற நிலை இருக்கிறது.
‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்தின் பல பகுதிகளுக்கு எடுத்துக் காட்டான ஆட்சியாக விளங்குகிறது.
ஒன்றிய அரசினுடைய
சட்டத் திருத்தம் செல்லாததாகும்!
செய்தியாளர்: உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையரை தேர்வு செய்யவேண்டும் என்று உத்தரவு போடுகிறது; அது தேவையில்லை என்று ஒன்றிய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறதே?
தமிழர் தலைவர்: உச்சநீதிமன்றத்தினுடைய கருத்து களுக்கு மாறாக இருக்கிறது என்று வழக்குத் தொடரும் பொழுது, ஒன்றிய அரசினுடைய சட்டத் திருத்தம் செல் லாததாக ஆகும். நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார்.