பெரியாரின் பல செயல்கள் முதன்முதலில் செய்யப்பட்டவை; அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
1. தீண்டாமையை எதிர்த்து வைக்கத்தில் அறப்போர் நடத்தியதன் மூலம் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய முக்கியத் தலைவர்: ஆண்டு – 1924
2. உலகிலேயே முதன்முதலாக முழுக்கப் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு என்றே இதழ் நடத்திய இயக்கம் பெரியாரின் இயக்கம்: ‘குடிஅரசு’, 2-5-1925இல்
3. கோயில் நுழைவுப் போராட்டத்தை முதன்முதலாக இந்தியாவிலேயே நடத்திய தலைவர் பெரியார்: சுசீந்தரம் கோயிலில் 4-2-1926இல்,
4. ஹிந்தியை எதிர்த்து முதன்முதலாகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார். ‘குடிஅரசு’ இதழில் தலையங்கம் எழுதியுள்ளார்: ஆண்டு 1926.
5. குடும்பக் கட்டுப்பாட்டு முறையை முதன்முதலாக வலியுறுத்திய இந்தியத் தலைவர் பெரியார்: ஆண்டு 1928.
1930-க்குப் பின் அரசாங்க ரகசியக் குறிப்புகளில் கம்யூனிஸ்ட் (No. 1 Communist) என்று பிரகடனப்படுத்தப்பட்ட முதல் தலைவர் பெரியார்.
6. தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் செய்த முதல் தலைவர் பெரியார்: 13-1-1935.
7. ‘பிராமணாள்’ சாப்பிடும் இடம், ‘இதராள்’ சாப்பிடும் இடம் என்று ரயில்வே நிலையங்களில் இருந்த பிரிவினைக்கு எதிராகப் போராடி முற்றுப்புள்ளிவைத்தவர் பெரியார்: ஆண்டு – 1938.
8. வன்முறை இல்லாமல் நெடுந்தொலைவு கொள்கை விளக்கப் பிரச்சாரப் படையொன்றை நடத்திச் சென்ற முதல் தலைவர் பெரியார். பட்டுக்கோட்டை அழகிரிசாமி தலைமையில் திருச்சியிலிருந்து அந்தப் பிரச்சாரம் நடைபெற்றது. ஆண்டு: 1938.
9. பிற்காலத்தில் விஞ்ஞானிகளால் ஆராயப்பட்ட ‘சோதனைக் குழாய்’ குழந்தை குறித்த கருத்தை 1938இல் ‘குடிஅரசு’ இதழில் குறிப்பிட்டிருந்தவர் பெரியார். 1943இல் அது ‘இனிவரும் உலகம்’ என சிறு நூலாக வெளிவந்தது.
10. முதன்முதலாகத் திருக்குறள் மாநாடு நடத்தித் திருக்குறளை மக்கள் நூலாகப் பிரகடனப்படுத்தியவர் பெரியார்: 1948.
11. சென்னை மாகாணத்தில் நடைமுறையில் இருந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறப்பட்டு செல்லுபடி அற்றதாக மாறியது. அதற்கு எதிராகப் போராடி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் செல்லுபடியாகும் வகையில் அரசமைப்பில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் பெரியார்: ஆண்டு – 1951.
12. மாநாடு, தோழர்களே, திரு ஆகிய சொற்களைப் பரவலாகப் புழக்கத்துக்குக் கொண்டு வந்தவர் பெரியார்.
13. ஜாதி அடையாளம், பெயர்கள் ஆகியவற்றைப் பொது இடங்களிலிருந்து நீக்கப் போராடிய முதல் தலைவர் பெரியார்.
நன்றி: அகரம் பெரியார்தாசன்.